ஜி20 உச்சி மாநாட்டை பிரமாண்டமாக நடத்திக் காட்டுவதில் உறுதியாக இருக்கிறது மத்திய அரசு, சாலையெங்கும் பூச்செடிகள், மாநாட்டு வளாகத்தில் பிரம்மாண்ட சிலை, குடிசைப் பகுதிகளை மறைக்கும் பச்சை நிற படுதாக்கள் என்று இந்தியாவின் ஏழ்மையை மறைத்து செழுமையை எப்படியெல்லாம் காட்ட வேண்டுமோ, அப்படியெல்லாம் காட்டி வருகிறது.
பார்க்கும் இடங்களை மட்டும் அழகாகவும், பிரம்மாண்டமாகவும் வைத்தால் போதுமா? சாப்பாட்டு மேஜையிலும் பிரம்மாண்டத்தைக் காட்டினால்தானே வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் மனதில் இந்தியாவின் செழுமை பதியும்… அதற்கான ஏற்பாடுகளையும் படு அமர்க்களமாக செய்திருக்கிறது மத்திய அரசு.
ஜி20 மாநாட்டுக்காக பல்வேறு நாடுகளில் இருந்தும், முன்னணி தலைவர்கள் உட்பட சுமார் 10 ஆயிரம் பேர் டெல்லிக்கு வருவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அவர்கள் சாப்பிடுவதற்கு லீலா பேலஸ், ஐடிசி ஓட்டல்ஸ், ஹயாத் ரீஜென்ஸி, ஓபராய் ஓட்டல்ஸ் உட்பட டெல்லியில் உள்ள 11 நட்சத்திர ஓட்டல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டல்கள் என்றாலே பிரம்மாண்டமானவைதான். அந்த பிரம்மாண்டத்தை மேலும் கூட்ட, உணவு பரிமாறும் பாத்திரங்களை தங்கத்திலும், வெள்ளியிலும் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களை ஓட்டல்களுக்கு சப்ளை செய்யும் பொறுப்பை ஜெய்ப்பூரைச் சேர்ந்த Iris என்ற நிறுவனத்துக்கு அரசு வழங்கியுள்ளது. விருந்துக்கு பயன்படுத்துவதற்காக தாங்கள் தயாரித்துள்ள பாத்திரங்களையும், தட்டுகளையும் பற்றி தெரிவித்துள்ள ஐரிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜீவ் பபுவால், “இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை ஜி20 மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்கு விளக்கும் வகையில் தட்டுகள், டம்ளர்கள், கோப்பைகள் போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜெய்ப்பூர், உதய்பூர், வாரணாசி மற்றும் கர்நாடக கலைநயத்தை பின்பற்றி இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான பொருட்களில் நம் தேசிய பறவையான மயிலின் உருவத்தை கலையழகுடன் பொறித்துள்ளோம். பல்வேறு கட்ட தர சோதனைக்குப் பிறகே விருந்தினர்களின் டேபிளை இவை சென்றடைகின்றன. இந்த தட்டுகள் மற்றும் கோப்பைகளில் தலைவர்கள் மற்றும் அவர்களுடன் வரும் விஐபிக்களுக்கு ‘மகாராஜா தாளி’ வகை விருந்து படைக்கப்படும்” என்றார்.
உணவுகளைப் பரிமாற பாத்திரங்களை பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுப்பதைப் போலவே உணவு வகைகளையும் பார்த்து பார்த்து சமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பிரபலமாக உள்ள ஸ்ட்ரீட் ஃபுட்கள் முதல், சிறுதானிய உணவுகள் வரை இந்தியாவின் ருசியை உலகுக்கு உணர்த்தும் வகையிலான உணவுகளை தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐநா அமைப்பு இந்த ஆண்டை சிறுதானிய ஆண்டாக அறிவித்துள்ளதால் சிறுதானியங்களைக் கொண்டு செய்யப்பட்ட உணவுகளுக்கு இதில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
இதில் அசைவ உணவைவிட சைவ உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலைவர்களுக்கான உணவைச் சமைக்க இந்தியாவின் முன்னணி சமையல் கலை நிபுணர்களான Kunal Kapur, Ajay Chopra, Anahita Dhondy, Kusha Mathur, மற்றும் Nikita Mehra ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐடிசி குழும ஓட்டல்களின் செஃப்கள் இவர்களுக்கு உதவியாக சமையல் வேலைகளை கவனிக்க உள்ளனர்.