இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. ஏற்றத்தைவிட இறக்கம் அதிகமாக உள்ளதால் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த சரிவுக்கு என்ன காரணம்? இப்போது பங்குகளை வாங்கலாமா விற்கலாமா? முதலீட்டு ஆலோசகர் கே. புகழேந்தி தரும் ஆலோசனைகள் இங்கே.
“பங்குச் சந்தையைப் பொறுத்தவரை இந்த ஏற்ற – இறக்கம் வழக்கத்துக்கு மாறானது இல்லை; வழக்கமானதுதான். பங்குச் சந்தை எப்போதும் இப்படி ஏற்ற – இறக்கத்துடன்தான் இருந்துள்ளது; இருக்கும். கொரோனா பரவல் காரணமாக 2020-ல் இந்திய பங்குச் சந்தை மிகப்பெரிய சரிவை சந்தித்தது. ஒரே வருடத்தில் அதைவிட பல மடங்கு உயர்ந்து வந்துவிட்டது.
கடந்த வாரம் தொடர்ச்சியாக பங்குச் சந்தை சரிவை சந்தித்தது. ஆனால், இன்று ஒரே நாளில் 1,534 புள்ளி ஏறியிருக்கிறது. எல்லா பங்குகளும் 3 – 4 சதவிகிதம் ஏறியுள்ளது. பங்குச் சந்தை எப்போதும் இப்படித்தான் இருக்கும் என்பதை கடந்த 30 வருட வரலாற்றை எடுத்துப் பார்த்தாலே உணர முடியும். ஒரு பங்கு ஏறியிருக்கும் இறங்கியிருக்கும். இறங்கி ஏறும்போது முன்பைவிட ஏறியிருப்பதை பார்க்கலாம். சில பங்குகள் இறங்கி ஒரு வருடம்கூட மீண்டும் ஏறாமல் இருக்கும். பின்பு ஏறும். காத்திருந்தவர்கள் பலனை அனுபவிப்பார்கள்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எங்கே தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்; முதலீட்டுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என்பதைத்தான் பார்ப்பார்கள். அதனடிப்படையில் ஒரு நாட்டிலிருந்து எடுத்து இன்னொரு நாடு என்று தங்கள் முதலீட்டை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். பெடரல் வங்கி வட்டி விகிதம் உயர்ந்தால், அங்கே முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று பங்குகளை விற்கத் தொடங்குவார்கள். இப்போதும் பெடரல் வங்கி வட்டி உயரப் போகிறது எனச் செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசி காலாண்டின் முடிவிலும் இதுபோல்தான் ஆனது.
ஆனால், இந்திய தொழில்துறை தற்போது ஸ்திரமாக உள்ளது. உள்கட்டமைப்பு வளரும். ஏற்றுமதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. முதலீடுகளும் நிறைய வருகிறது. தற்போது சீனாவில் இருந்து வெளியேறும் வியாபாரங்களும் இந்தியாவுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த 5 – 10 வருடங்கள் அனைத்து துறைகளும் ஏறுமுகத்தில் இருக்கும்.
எனவே, நல்ல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் பயப்பட வேண்டியதில்லை. பங்குச் சந்தையின் சமீப ஏற்ற இறக்கத்தைப் பார்த்து பதற்றமாகி பங்குகளை விற்க வேண்டாம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா, இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற நல்ல நிறுவனம், நல்ல நிர்வாகம் உள்ள பங்குகளுக்கு இந்த ஏற்ற இறக்கத்தால் எப்போதும் எந்த பிரச்சினையும் இல்லை. இவற்றின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகத்தான் உள்ளது; இறங்குமுகமே இல்லை. மொத்த பங்குச் சந்தையில் இதுபோல் 40 சதவிகித நிறுவனங்கள் இருக்கும்.
இன்னொரு 40 சதவிகித நிறுவனங்கள் சிறியதாகவும் நடுவாந்திரமாகவும் இருக்கும். மீதி 20 சதவிகிதம் நிறுவனங்கள் பங்கு விலையை ஏற்றுவது, இறக்குவது என்று சூதாட்டத்தில் ஈடுபடும். முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கும் போது இந்த நிறுவனங்களை அடையாளம் கண்டு கவனமாக இருக்க வேண்டும்.
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் நடந்தால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்படும். இதனால், கச்சா எண்ணெய் விலை அதிகமாகும். நம் நாட்டில் தற்போதுள்ள வரி விகிதத்தின்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 150 ரூபாய் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால், திடீரென அவ்வளவு உயர்ந்தால் மக்கள் கொதித்துவிடுவார்கள் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி 120 ரூபாய் வரைக்கும் கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. பிளாஸ்டிக், பெயின்ட் போன்ற கச்சா பொருட்கள் விலையும் அதிகமாக வாய்ப்பு உள்ளது.
மற்றபடி இந்தியாவுக்கு பெரிய பாதிப்புகள் இருக்காது. பக்குவமான பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு இது தெரியும். எனவே, பதற்றமாக மாட்டார்கள். அதேநேரம், புதிய – புரிதல் இல்லாத முதலீட்டாளர்கள் பீதியாகி பங்குகளை விற்பதைப் பார்க்க முடிகிறது.
பங்குச் சந்தையைப் பொறுத்தவரை சந்தை சரியும்போது பங்குகளை வாங்குவதும் ஏறும்போது விற்பதும்தான் புத்திசாலித்தனம். எனவே, இது வாங்குவதற்கான நேரம்” என்கிறார் புகழேந்தி.