இந்தியளவில் மருத்துவமும் தொழில்நுட்பமும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இதனால், மற்ற மாநிலங்களை ஒப்பிட பேறுகால இறப்பு தமிழ்நாட்டில் மிக குறைவு. நவீன மருத்துவமே இதனை சாதித்தது. என்றாலும் நவீன மருத்துவத்தைவிட, நமது பாரம்பரிய இயற்கை மருத்துவமே சிறந்தது என்று ஒரு சிலர் கூறி வருவதுடன், இயற்கை முறையில் வீட்டிலேயே எப்படி பிரசவம் பார்க்க வேண்டும் என வீடியோக்களையும் யூ டியூப்பில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோக்களைப் பார்த்து நம்பி சிலர் அதை முயற்சித்தும் வருகிறார்கள். இதனால், 2018இல் திருப்பூரைச் சேர்ந்த 28 வயது கிருத்திகா பிரசவத்தின்போது உயிரிழந்தார். இதனையடுத்து, வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என அரசு அறிவித்தது. இந்நிலையில், இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்து மீண்டும் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்.
கிருஷ்ணாகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்து உள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவரது மகள் லோகநாயகி. வேளாண்மை பட்டம் படித்த லோகநாயகி இயற்கை வாழ்வியலில் ஆர்வம் கொண்டவர். சிறு வயதில் இருந்தே இயற்கையான முறையில் விளையும் பொருட்களை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். தனது வயல், தோட்டத்திலும் இயற்கையான முறையில் நெல், காய்கறிகளை விளைவித்து உண்டு வந்துள்ளார். ரசாயன உரம் மற்றும் பூச்சி கொல்லியை அவர் பயன்படுத்தியது இல்லை. இயற்கையான முறையில் விளைந்ததாக இருந்தால் மட்டுமே பூவை கூட தலையில் வைப்பாராம். அந்த அளவுக்கு இயற்கை விரும்பி.
இவருக்கும் தருமபுரி மாவட்டம் காரியமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் என்பருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. மாதேஷும் லோகநாயகி போலவே வேளாண்மை பட்டம் படித்தவர்; இயற்கை வாழ்வியலில் ஆர்வம் கொண்டவர். இதனால், இவர்கள் திருமணத்தில் கூட இயற்கையான முறையில் விளைந்த நெல்லில் கிடைத்த அரசியிலேயே உணவு சமைத்து விருந்து கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் லோகநாயகி கருத்தரித்தார். அனைத்தையும் இயற்கையாகவே செய்ததைபோல், பிரசவத்தையும் மருத்துவமனைக்கு செல்லாமல் இயற்கையாகவே செய்ய வேண்டும் என லோகநாயகி விரும்பியுள்ளார். கணவன் மாதேஷும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
பிரசவ நேரம் வந்தது. அனுமந்தபுரத்தில் உள்ள கிராம செவிலியரிடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதாக தெரிவித்துவிட்டு தனது கணவருடன் தாய் வீட்டுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் வந்திருக்கிறார் லோகநாயகி.
இன்று அதிகாலை லோகநாயகிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே மாதேஷ் அவரை மருத்துவமனை அழைத்து செல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். ஆண் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்து இருக்கிறது. ஆனால், நச்சுக்கொடி வெளியில் வராமல் லோகநாயகிக்கு கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு இருக்கிறது. நச்சுக்கொடி சிறிது நேரத்தில் வெளியில் வந்து விடும் என நினைத்து காத்திருந்து இருக்கிறார் மாதேஷ்.
ஆனால், சிறிது நேரத்தில் லோகநாயகிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனையடுத்து அவசர அவசரமாக இன்று காலை 10 மணியளவில் லோகநாயகியை போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கே லோகநாயகியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்த புளியம்பட்டி கிராம செவிலியர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பிரசவ கால இறப்பு விகிதத்தை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் குழந்தை பிறப்புக்கு 70 பேராக குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்த இலக்கை பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் எட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது. பேறுகால இறப்பு விகிதத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் 2014-16இல் 130, 2015-17இல் 122, 2016-18இல் 113, 2017-19இல் 103 என்ற நிலையில் குறைந்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில், பேறுகால இறப்பு விகிதம், ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 58 என்ற அளவில்தான் உள்ளது. இதனை நவீன மருத்துவமே சாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரியம், இயற்கை எல்லாம் சரிதான்; ஆனால், அதில் எல்லாவற்றையும் அப்படியே பின்பற்றக்கூடாது. நல்லவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு திருப்பூர் கிருத்திகா, கிருஷ்ணகிரி லோகநாயகி இருவரும் தங்கள் உயிரைக் கொடுத்து உதாரணங்களாகியுள்ளது சோகம்.