உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டு 2 வாரங்கள்தான் ஆகின்றன. ஆனால் அதற்குள்ளாகவே அக்டோபர் 15-ம் தேதியின் முக்கியத்துவம் கூடியிருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அந்த நாளுக்கான கவுண்ட் டவுனை இப்போதே தொடங்கிவிட்டனர். கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும், உலகக் கோப்பை போட்டியில் அன்றைய தினம் மோத இருப்பதே இதற்கு காரணம்.
இந்த உலகக் கோப்பை மட்டுமல்ல, ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகக் கோப்பையை ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை. எந்த காரணத்தைக் கொண்டும் பாகிஸ்தான் அணியிடம் தோற்றுவிடக் கூடாது என்று இந்திய ரசிகர்களும், இந்திய அணியிடம் தாங்கள் தோற்றுவிடக் கூடாது என்று பாகிஸ்தான் ரசிகர்களும் நினைப்பதே இதற்கு முக்கிய காரணம்.
இந்த ஆண்டில் நடக்கவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் சந்திக்கும் போட்டி அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் என்று அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி அறிவிக்கப்பட்ட நாள் முதல் அக்டோபர் 15-ம் தேதிக்கும், போட்டி நடக்கும் அகமதாபாத் நகருக்கும் முக்கியத்துவம் கூடிவிட்டது. போட்டியைக் காண பல்வேறு நாடுகளிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் இப்போதே விமான டிக்கெட்களை புக்கிங் செய்யத் தொடங்கியுள்ளனர். அதேபோல் அந்த நாளுக்கான ஓட்டல் அறைகளின் புக்கிங்கும் ஆன்லைன் முறையில் நடந்து வருகிறது.
பலரும் அறைகளைக் கேட்டு வருவதால் ஓட்டல் நிறுவனங்கள் தங்கள் அறைகளின் வாடகையை, குறிப்பிட்ட அந்த நாளுக்கு மட்டும் கடுமையாக அதிகரித்துள்ளன. சாதாரணமாக நாளொன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு விடப்படும் அறைகள், இப்போதே 50 ஆயிரம் ரூபாய்க்கு அநியாய கட்டணத்தில் புக்கிங் செய்யப்படுகின்றன. அங்குள்ள பிரபல ஓட்டலான ஐடிசி வெல்கம் ஓட்டல், இப்போதே அக்டோபர் 15-ம் தேதிக்கான அறை வாடகையை 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது.
இப்படி அதிரடியாக கட்டணத்தை உயர்த்தியும் பல ஓட்டல்கள் இப்போதே அக்டோபர் 15-ம் தேதிக்கு நிரம்பிவிட்டன. ஓட்டலில் அறைகள் கிடைக்காத நிலையில் சில புத்திசாலி கிரிக்கெட் ரசிகர்கள், இப்போது மருத்துவனைகளில் அறைகளை புக்கிங் செய்கிறார்கள்.
“அக்டோபர் 15-ம் தேதி முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கு வசதியாக மருத்துவமனையில் ஒரு நாள் தங்கியிருக்க அறை வேண்டும்” என்று கோரி பல்வேறு இடங்களில் இருந்தும் அழைப்புகள் வருவதாக மருத்துவமனைகளின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
”அன்றைய தினம் ஓட்டல்களை விட மருத்துவமனைகளில் அறைகளின் வாடகை குறைவாக இருக்கும் என்பதால் பலரும் இங்கு அறைகளைக் கேட்டு வருகிறார்கள். அதனால் இனி அன்றைய தேதிக்கான மருத்துவமனை அறைகளின் வாடகையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்கிறார் அகமதாபாத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை ஒன்றின் டாக்டரான பாரஸ் ஷா.