தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டு, பின்னர் அந்த உத்தரவை திரும்ப பெற்றுக்கொண்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கையால் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாகியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, திமுக தலைமைக்கழக வழக்கறிஞர் சூர்யா வெற்றிகொண்டானை ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்காக சந்தித்தோம்.
ஆளுநரின் இந்த நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்?
கேலிக்கூத்தாகத்தான் பார்க்கிறோம். சி.வி. சண்முகம் தான் காலையில் ஒன்று பேசிவிட்டு மத்தியானம் மாற்றி பேசுவார். இப்போ ஆளுநரும் அதுமாதிரி பேச ஆரம்பித்துவிட்டார். அவர் ஐபிஎஸ் படித்தவர் என்கிறார்கள். நேற்று அவர் நடந்துகொண்டதைப் பார்த்தால் அது மாதிரி தெரியவில்லை. ஆளுநர் உத்தரவு இல்லை அது; அவரை ஆட்டி வைக்கும் மோடி உத்தரவு அது. இதற்கெல்லாம் அஞ்சும் கட்சி திமுக இல்லை.
சட்டத்தில் என்ன உள்ளது? ஆளுநருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரம் உண்டா இல்லையா?
ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது சட்டப் புத்தகத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் படித்த ஆளுநர் அதை படித்தாரா இல்லையா தெரியவில்லை. சட்டத்தில், முதலமைச்சரும் அமைச்சரவையும் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டுதான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று தெளிவாக உள்ளது. ஆனால், இங்கே ஆர்.என். ரவி ஆளுநராக வரவில்லை, ஆர்.எஸ்.எஸ்.காரராகத்தான் வந்துள்ளார். எனவே, சட்டப் புத்தகம் பற்றி கவலைப்படாமல் அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மெண்டை நிறைவேற்றும் வேலையை செய்கிறார். நாங்கள் அரசியலைப்பு சட்டத்தை மதிக்கிறோம், அதனால் அமைதியாக இருக்கிறோம்; அவங்க மிதிக்கிறாங்க.
கடந்த அதிமுக ஆட்சியின் போது 2017இல் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்ட போது தமிழக ஆளுநர் பொறுப்பு வகித்த வித்யாசாகர் ராவிடம் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட கடிதத்துடன் துரைமுருகன், உள்ளிட்ட திமுகவினர் மும்பை சென்று மனு கொடுத்தார்கள். அந்த மனுவில், “முதல்வர் மற்றும் அமைச்சர்களை உடனடியாக ராஜினாமா செய்ய ஆளுநர் உத்தரவிட வேண்டும். அவர்கள் ராஜினாமா செய்யத்தவறும் பட்சத்தில், அப்பதவிகளை நிர்வகிக்கும் உரிமையை இழந்த அவர்கள் அனைவரையும் ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதை அதிமுகவினர் எடுத்துக் காட்டுகிறார்கள். அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் மனு கொடுத்த திமுகவினர் இன்று ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வது சரியா என்று கேட்கிறார்களே?
ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை என்பது எங்களுக்கு தெரியும். மேலும், அன்றைய ஆளுநர் அன்றைய ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவரும்கூட. அவர் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமாட்டார் என்பது எங்களுக்கு தெரியாதா? ஆனாலும், ஏன் மனு கொடுத்தோம்? அதன்மூலம் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த ஊழல்கள் வெளியே வர வேண்டும் என்று அதை செய்தோம். ஒரு சரியான எதிர்கட்சியாக செயல்பட்டோம். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த ஊழல்கள் மீதெல்லாம் இன்று ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கிறோம்.
‘அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிப்பது, நியாயமான விசாரணை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை எதிர்மறையாகப் பாதிக்கும். இது இறுதியில் மாநிலத்தில் அரசமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளன’ என்று ஆளுநர் ரவி குறிப்பிடுகிறார். குற்ற வழக்கில் சிக்கியிருப்பவர் அதிகாரமிக்க அமைச்சராக தொடர்ந்தால் வழக்கு விசாரணையை பாதிக்கும் என்ற ஆளுநரின் அச்சம் நியாயமானதுதானே?
நான் உங்களை கேட்கிறேன்… செந்தில் பாலாஜி மேல் நடவடிக்கை எடுக்கும் மோடியும் ஈடியும் (அமலாக்கத் துறை) நியாயமானவர்களா? மத்திய அரசில் 33 அமைச்சர்கள் மேல் இதே ஈடி வழக்கு உள்ளது. 14 பேர் மேல கிரிமினல் கேஸ் இருக்கு. பலர் மேல கொலை வழக்கே உள்ளது. அவர்களை எல்லாம் ஏன் தூக்காமல் வைத்திருக்கிறீர்கள்? அவர்களை அமைச்சரவையில் இருந்து வெளியே போகச் சொல்லுங்கள், நாங்கள் செந்தில் பாலாஜியை வெளியே அனுப்புகிறோம்.
செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன் என்றுதானே சொல்கிறார். அப்புறம் ஏன் உங்களுக்கு அவசரம்? இதே செந்தில் பாலாஜி நாளையே பாஜகவில் சேர்ந்துவிட்டால், அவரை போல் உத்தமர் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். அதுதானே இந்தியா முழுவதும் நடக்கிறது. அதற்கு செந்தில் பாலாஜி தயாராக இல்லை. எனவே, இந்த வழக்கு, மிரட்டல் எல்லாம் நடக்கிறது.
ஆளுநருக்கு அதிகாரமில்லை என்பதுதான் திமுகவின் எதிர்வினையாக இருக்கிறது. ஆனால், குற்ற வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டிருப்பவரை அமைச்சராக வைத்திருப்பது தார்மீக அடிப்படையில் சரியானதா? இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை திமுக அரசு வைத்திருப்பதற்கு காரணம் என்ன? அதனால் அரசுக்கு என்ன பயன்? பணி செய்யாத ஒருவரை அமைச்சர் பதவியில் நீட்டிப்பது வீண் தானே?
செந்தில் பாலாஜி பழிவாங்கப்படுகிறார் என்பதுதான் எங்கள் குற்றச்சாட்டு. இன்று இவர்களுக்கு பயந்து செந்தில் பாலாஜியை தூக்கினால், அடுத்து இது இன்னொருவருக்கு நடக்கும். எனவே, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்னும் முடிவை முதல்வர் எடுத்துள்ளார். முதல்வர் சட்டப்படிதான் இதை செய்துள்ளார். எங்களை கேள்வி கேட்கும் நீங்கள், சட்டத்துக்கு மாறாக நடந்துகொள்ளும் ஆளுநரை ஏன் கேள்வி கேட்பதில்லை. மணிப்பூர் பற்றி எரிகிறது. இதுவரை பிரதமர் அங்கே செல்லவில்லை. இதுபற்றி மோடியிடம் கேட்பீர்களா? அவர்தான் பத்திரிகையாளர்களையே சந்திப்பதில்லையே, எப்படி கேட்பீர்கள்.