No menu items!

கவர்னர் ரவியின் நள்ளிரவு உத்தரவும் ரத்தும் – மிஸ் ரகசியா

கவர்னர் ரவியின் நள்ளிரவு உத்தரவும் ரத்தும் – மிஸ் ரகசியா

தூக்கக் கலக்கத்துடன் ஆபீசுக்கு வந்தாள் ரகசியா.

“இந்த கவர்னர் பண்ற கூத்தால, திமுக தலைவர்களுக்குத்தான் தூக்கமில்லைன்னு பார்த்தா, இப்ப எங்களை மாதிரி மீடியாக்காரங்களுக்கும் தூக்கம் இல்லாம போச்சு. ராஜ்பவன்லருந்து இருந்து எந்த நேரத்துல எந்த நியூஸ் வருமோன்னு திகிலோட முழிச்சிருக்க வேண்டியதா இருக்கு” என்று புலம்பிய ரகசியாவுக்கு சூடாக இஞ்சி டீ கொடுத்தோம்.

“ராத்திரி டிஸ்மிஸ் பண்ணி அதே ராத்திரில தன்னோட டிஸ்மிஸ் ஆர்டரையும் நிறுத்தி வச்சுட்டாரே…கவர்னருக்கு என்ன ஆச்சு?”

“இப்படி அவசரப்பட்டு முடிவு எடுத்திருக்க வேண்டாம்னு டெல்லிலருந்து ஆளுநரை கடிச்சிருக்காங்க. அதனாலதான் தன்னோட டிஸ்மிஸ் முடிவை அவர் நிறுத்தி வச்சுட்டாருனு ராஜ்பவன் வட்டாரங்கள் சொல்லுது”

”டெல்லியை கேக்காமலயா இந்த முடிவை கவர்னர் எடுத்திருப்பாரு? நம்பற மாதிரி இல்லையே?”

“இதே கேள்விதான் எல்லோரும் கேக்குறாங்க. நான் டெல்லில விசாரிச்சேன். ஆளுநர் ஆழம் பார்க்கிறார்னு சொல்றாங்க. அவரோட டிஸ்மிஸ் உத்தரவுல மாநிலத்தில் அரசமைப்பு இயந்திரத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்ற நியாயமான அச்சங்கள் உள்ளனனு சொல்லியிருக்கிறார். இந்த வரி முக்கியமான வரினு சொல்றாங்க. தமிழ்நாட்டுல அரசமைப்பு சட்டப்படி ஆட்சி நடக்கலங்கிறதுதான் இதோட அர்த்தம். இதுக்கு அடுத்தக் கட்டம் வேற மாதிரி இருக்கும்னு சொல்றாங்க. செந்தில் பாலாஜி மருத்துவமனைல அட்மிட் ஆனதுலருந்து அவரைப் பத்தின நியூஸ் வர்றது குறைஞ்சிருச்சு. மக்கள் மனசுலருந்து செந்தில் பாலாஜி பிரச்சினை மறைஞ்சுறக் கூடாதுனு மத்திய அரசு இப்படி பண்றாங்க. ஊழல் பண்ணவரை நீக்கணும்னு மத்திய அரசு சொல்லுது ஆனா மாநில அரசு காப்பாத்த முயற்சிக்குதுன்ற பிம்பத்தை கட்டமைக்கணும்னு பார்க்கிறாங்கனு டெல்லில சொல்றாங்க”

”ஆனா, அதிகாரமே இல்லாம டிஸ்மிஸ் பண்ண முடியுமா?”

“அதிகாரமே இல்லனு நீங்க சொல்றிங்க. ஆனா அரசமைப்பு சட்டத்தில கவர்னருக்கு தன்னிச்சையா செயல்பட சில அதிகாரம் இருக்குனு சில வழக்கறிஞர்கள் சொல்றாங்க. கவர்னர் அதிகாரத்தை விவாதப் பொருளா மாத்துறது இன்னொரு நோக்கம்?”

“அப்புறம் ஏன் டிஸ்மிஸ் ஆர்டரை நிறுத்தி வைக்கிறாங்க?”

“தேசிய அளவுல எதிர்ப்பு வரும்னு அவங்க நினைக்கல. தமிழ்நாட்டு பிரச்சினையா மட்டும் இருக்கும்னு டெல்லில நினைச்சிருக்காங்க. ஆனா தேசிய அளவுல எல்லா தலைவர்களும் ரியாக்ட் பண்ணதும் பேக் அடிச்சிட்டாங்க”

”நிறுத்தி வச்சிருக்கிற டிஸ்மிஸ் ஆர்டர் மீண்டும் வருமா?”

“வரும் என்கிறார் உள்துறை அமைச்சகத்துக்கு நெருக்கமா இருக்கிற ஒருத்தர். செந்தில்பாலாஜி விஷயம் அத்தனை சீக்கிரம் திமுகவை விட்டுப் போகாது”

“இந்த விஷயத்தில் முதல்வரின் ரியாக்‌ஷன் என்ன?”

“ரொம்ப கோபமா இருக்காராம். ஆனா கவர்னர் இப்படி செயல்படுறது நமக்கு அரசியல் ரீதியா லாபம்னும் சொல்லியிருக்கிறாரு. எதிர்க் கட்சிகள் ஓரணில வர்றதுக்கும் இது உதவும்னு கட்சிக்காரங்ககிட்ட பேசியிருக்கிறாரு?”

“என்ன செய்யப் போறாங்களாம்?”

“கவர்னர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு எதிரா ஒரு நடவடிக்கை எடுக்கணும்கிறது திமுகவின் திட்டம். நீதிமன்றம் போவது, எதிர்க் கட்சிகளை திரட்டுவது, போராட்டங்கள் நடத்துவதுனு நிறைய திட்டங்கள் வச்சிருக்காங்க”

”இனி கடுமையான மோதல் இருக்கும்னு சொல்லு”

”ஆமாம். சமீபத்துல அமைச்ச்சர்களோட பேசும்போது இதைப் பத்தி அவர் சொல்லி இருக்கார். “ஆளுநர் ஒருமுறை என்கிட்ட பேசும்போது, மிஸ்டர் ஸ்டாலின் எனக்கு உங்களை பிடிக்கும். ஆனா டெல்லி சொல்றதை கேட்க வேண்டிய இடத்தில் நான் இருக்கேன். நீங்க டெல்லியோட பேசுங்க’ன்னு சொன்னதா அமைச்சர்கள்கிட்ட சொல்லியிருக்கிறார். ஆனா முதல்வர் சொன்னதை அமைச்சர் பொன்முடி ஏத்துக்கலையாம். ‘நம்மையும் மத்திய அரசையும் மோதவிட்டு ஆளுநர்தான் வேடிக்கை பார்க்கிறார். அவர்கிட்ட நாம ஜாக்கிரதையா இருக்கணும். பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பலரும் இப்ப தமிழக அரசை மதிக்கறதில்லை. ஆளுநர் கொடுக்கற தைரியம்தான் இதுக்கெல்லாம் காரணம்’ன்னு அவர் முதல்வர்கிட்ட சொல்லி இருக்காரு.”

“பார்ப்போம் என்ன ஆகுதுனு. தமிழக டிஜிபி பதவிக்கான ரேஸ்ல நீ சொன்னபடியே சங்கர் ஜிவால் ஜெயிச்சிருக்காரே?”

“ரகசியா சொன்னா ராங்கா போகாது.” என்று சிரித்தாள் ரகசியா.

“டேவிட்சன் ஆசீர்வாதம் உளவுத் துறையிலருந்து தூக்கி டம்மி போஸ்ட்ல போட்டிருக்காங்களே?”

”அவர் மீது போலி பாஸ்போர்ட் சம்பந்தமா ஒரு புகார் இருக்கு. அது விசாரணைக்கும் வந்துடுச்சு. இதுதான் அவரை டம்மி போஸ்ட்ல போட்டதுக்கு காரணம்”

“தலைமைச் செயலாளர் நியமனம் பத்தி கோட்டை வட்டாரத்துல என்ன பேசிக்கறாங்களாம்?”

“இதை ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் ரசிக்கலைன்னு சொல்றாங்க. சிவ்தாஸ் மீனாவைவிட சீனியர்கள் பத்து பேர் இருக்கும்போது இவருக்கு எப்படி தலைமைச் செயலாளர் பதவி தரலாம்கிற பேச்சு தலைமைச் செயலகத்துல அதிகமா இருக்காம்.”

”எப்படி பத்து சீனியர்களை தாண்டி இவருக்கு தலைமைச் செயலாளர் பதவி கிடைச்சது?”

“அதிகாரிகள் அரசியல்ல சிக்காதவர்ங்கிற பேரு இவருக்கு உண்டு. அது மட்டுமில்லாம ஜெயலலிதா முதல்வரா இருந்தப்போ அவங்களோட செகரட்டரியா இருந்திருக்கிறார். அதனால அவருக்கு எப்படி கட்டுப்பாட்டோட அரசை வழி நடத்தணும்னு அவருக்குத் தெரியும்னு முதல்வர் நம்புறார்னு சொல்றாங்க”

“இப்ப தமிழ்நாட்டுல டாப் போஸ்ட்ல இருக்கிற ரெண்டு பேரும் வட இந்தியர்கள்னு பேச்சு வந்திருக்கே”

“இதுவும் அதிகாரிகள் மத்தியில் பேசப்படுது. ஆனா தமிழ் நாட்டு அதிகாரிகள் நிறைய பாலிடிக்ஸ் பண்றாங்க. வட இந்திய அதிகாரிகளிடம் இந்த சிக்கல் இல்லைனு முதல்வர் நினைக்கிறதும் முக்கிய காரணம்”

“எதிர்கட்சிகளை மாதிரியே நாடாளுமன்ற தேர்தலைப் பத்தி பாஜகவும் ஆலோசனைகளை நடத்த தொடங்கி இருக்கே?”

“ஆமா நாடாளுமன்ற தேர்தல் பத்தி அமித்ஷா, ஜே.பி.நட்டா, மூத்த அமைச்சர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களோட பிரதமர் ஆலோசனை நடத்தி இருக்கார். முக்கிய இலாக்காக்களை விரும்பற அமைச்சர்கள் நாடாளுமன்றத் தேர்தல்ல போட்டியிடணும். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இனி முக்கிய பதவிகள் கிடைக்காதுன்னும் இந்த கூட்டத்துல முடிவு செஞ்சிருக்காங்க.”

“பிரதமர் தமிழகத்துல போட்டியிடறதைப் பத்தி ஏதாவது முடிவு செஞ்சிருக்காங்களா?”

“இந்த ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு கமலாலயத்துல இந்த பேச்சு திரும்பவும் அடிபடத் தொடங்கி இருக்கு. ராமநாதபுரம் அல்லது கன்னியாகுமரியில பிரதமர் போட்டியிடுவார்னு பேசிக்கறாங்க. அதனாலதான் இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்னு அமித் ஷா பேசியிருக்கார்னு அவங்க சொல்றாங்க. ஆனா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த விஷப் பரீட்சை வேண்டாம்னு அட்வைஸ் பன்ணி இருக்காராம். ‘தாம்பரம் கூட்டத்தில் கலந்துகிட்டதை வச்சு சொல்றேன். தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா அப்படி ஒண்ணும் பலமா இல்லை. தேர்தல்ல பிரதமர் போட்டியிடணும்னா கூட்டணி கட்சியான அதிமுகவைத்தான் நாம நம்ப வேண்டி இருக்கும். திமுகவும் உங்களைத் தோற்கடிக்க எல்லா முயற்சிகளையும் எடுக்கும்’ன்னு மோடிக்கு ராஜ்நாத் சிங் அட்வைஸ் பண்ணி இருக்காராம்.”

”தென்காசில மோடி போட்டிப் போடப் போறதா ஒரு பேச்சு வந்திருக்கிறதே?”

“அப்படியும் சொல்றாங்க. ஆனா ராமநாதபுரம் இல்லாட்டி கன்னியாகுமரிக்குதான் வாய்ப்பு அதிகம்னு சொல்றாங்க”

“டாஸ்மாக்ல பாட்டிலுக்கு பதிலா டெட்ரா பேக்ல மதுவை விக்க திட்டம் போடறதா கேள்விப்பட்டேனே?”

“நானும் கேள்விப்படேன். மதுவிலக்குத் துறை அமைச்சரா பொறுப்பேத்த முத்துசாமி, டாஸ்மாக்ல இருக்கற பிரச்சினைகளை ஒவ்வொண்ணா தீர்த்துட்டு வர்றார். கடைகள்ல ஆய்வு செஞ்சு அதிக விலைக்கு மதுபானங்களை வித்தா சஸ்பெண்ட் செஞ்சிடுவேன்னு எச்சரிக்கை விட்டிருக்கார். டாஸ்மாக் கடைகளில் குடித்துவிட்டு அங்கேயே போடப்படும் பாட்டில்களில் லட்சக்கணக்கில் வருமானம் வருவதுண்டு. அதையும் அமைச்சர்களின் ஆட்கள் வாங்கிக் கொண்டு போய் விடுவார்கள் என்ற புகார் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது ஊழியர்கள் மத்தியில் இருந்த்து. இப்ப அதுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைச்சர் முத்துசாமி இனிமேல் டெட்ரா பேக் எனப்படும் காகித குடுவைகளில் மதுவை விற்க திட்டமிட்டு இருக்காராம்.”

“சிறப்பு. இதெல்லாம் ஆஸ்பத்திரில இருக்கிற செந்தில் பாலாஜிக்கு தெரியுமா?”

“தெரியாமலயா இருக்கும். ஆனா இப்போது அவருடைய கவலையெல்லாம் அமலாக்கத் துறை விசாரணைதான். அதை கடந்துட்டா போதும்னு நினைக்கிறார்”

“விசாரணை எப்போ தொடங்கும்”

“மருத்துவர்கள் சர்டிஃபிகேட் கொடுக்கும்போது”

“அவங்க எப்போ தருவாங்க?”

”அதுக்கு நீங்க காவேரி மருத்துவமனைக்குதான் போகணும்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...