விஜய் அரசியலுக்கு வருகிறார்! – இந்த ஒற்றை வரிதான் இப்போது தமிழ் சினிமாவிலும், தமிழ் நாட்டு அரசியலிலும் பேசுப்பொருளாகி இருக்கிறது.
உண்மையில் விஜய் நேரடி அரசியலுக்கு வரப்போகிறாரா அல்லது தனது தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை சமூகப்பணிகளில் ஈடுப்படுத்தி, அரசியலில் தாக்கத்தை உருவாக்கும் ஒரு கிங் மேக்கராக இருக்கப்போகிறாரா என்பதே இப்போதைய கேள்வி.
உண்மையில் விஜய்க்கு அரசியலில் அவ்வளவு பெரிய ஆர்வம் எதுவும் ஆரம்பத்தில் இல்லை. ஆனால் இப்போதிருக்கும் அரசியல் ஆர்வத்திற்கு ஆரம்பப்புள்ளி அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர்.
ஒரு கட்டுக்கோப்பான ராணுவத்தைப் போல விஜய் ரசிகர் மன்றத்தை வழிநடத்தினார் விஜயின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர். அப்பொழுது சென்னை சாலிக்கிராமத்தில் இருந்த ஷோபா கல்யாண மண்டபத்தில்தான் விஜய் ரசிகர் மன்ற தலைமை அலுவலகம் இயங்கி வந்தது.
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் முதல் அனைத்து ரசிகர்களும் எஸ்.ஏ.சந்திரசேகரை ‘அப்பா’ என்றே அழைத்துவந்தார்கள்.
எஸ்.ஏ.சி-க்கு அரசியலில் மகன் களம் காணவேண்டுமென்ற ஆர்வம் இருந்தது. இதற்கு காரணம் அவருக்கு இருந்த அரசியல் சிந்தனைகளும், மகனுக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களும்தான்.
இதை மனதில் வைத்தே விஜய் ரசிகர் மன்றத்திற்கு என்று ஒரு கொடியையும் அறிமுகப்படுத்தினார் எஸ்.ஏ.சி.
ஆனால் தந்தைக்கு கட்டுப்பட்டே விஜய் தனது விஜய் ரசிகர் மன்ற கொடியை அறிமுகப்படுத்தும் விழாவில் புன்னகைத்தவாறே கலந்து கொண்டார்.
2008-ல் ’குருவி’ படத்தின் மூலம் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் திரைப்பட தயாரிப்பிற்குள் நுழைந்தது. அப்போது விஜய்க்கும், உதயநிதிக்கும் இடையே ஒரு நல்ல நட்பு உருவானது.
ஆனால் ‘குருவி’ எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் போனதில் தயாரிப்பு தரப்பிற்கு பெரும் வருத்தம்.
அதன்பின் 2011-ல் விஜய் நடித்த ‘காவலன்’ படத்தை கமலா திரையரங்கில் வெளியிட எதிர்பாராத பிரச்சினைகள் முளைத்தது. அப்போதைய ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர் ‘காவலன்’ படத்தை திரையிடுவதை தடுக்க திரையரங்குகளுக்கு வாய்மொழி உத்தரவு போடப்பட்டதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளானார் விஜய். அப்போதுதான் அரசியலுக்கு நுழையலாமா என்ற எண்ணம் விஜய் மனதிற்குள் அலைப்பாய்ந்தது என்கிறது விஜய்க்கு நெருங்கிய வட்டாரம்.
2011-ல் ‘வேலாயுதம்’ படம் வெளியான போது, அரசியல் களத்தில் விஜய் மறைமுகமாக ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளித்தார். ஆனாலும் அப்போது விஜய் ரசிகர்கள் தேர்தல் வெற்றிக்காக அணில் போல் உதவினார்கள் என்றார் எஸ்.ஏ.சி.
எஸ்.ஏ.சி-யின் அணில் கமெண்ட், ஜெயலலிதாவையும் ரசிக்க வைக்கவில்லை. இதை கேள்விப்பட்ட ஜெயலலிதா, எஸ்.ஏ.சி தன்னை சந்திக்க வந்த போது அவரை தவிர்த்தார். திருச்சியில் நீண்டநேரம் காத்திருந்த எஸ்.ஏ.சி. ஜெயலலிதாவைச் சந்திக்க முடியாமல் சோகத்துடன் திரும்பினார்.
இதனால் தமிழகத்தை மாற்றி மாற்றி ஆட்சி செய்து வரும் இரு பெரும் கட்சிகளின் மறைமுக எதிர்ப்பையும் விஜய் தரப்பு எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
2013-ல் ’Born to Lead’ என்ற அடைமொழியுடன் வெளியான விஜயின் ‘தலைவா’ படம் வெளியாவதில் சிக்கல்கள் கிளம்பின.
ஏறக்குறைய இங்கிருந்துதான் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் இடையில் கருத்துவேறுபாடு எழுந்தது. அரசியல் வேண்டுமென்றார் அப்பா. நடிப்பே போதுமென்றார் மகன்.
அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் 2012-ல் கருத்துவேறுபாடு பெரிதானது. ‘துப்பாக்கி’ படத்திற்கு பிறகு விஜய் படங்களுக்காக கதை கேட்பது, சம்பளம் பேசுவது என அனைத்திலிருந்தும் தனித்து செயல்பட ஆரம்பித்தார்.
அடுத்து, தனது தந்தையினால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை தனது ரசிகர் மன்றத்தில் இருந்தது நீக்கிய விஜய், புதிய பொறுப்பாளர்களை நியமிக்க தொடங்கினார். அப்படி உள்ளே ஆதிக்க வட்டத்திற்குள் வந்தவர்தான் புதுச்சேரியின் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் விஜய் மன்ற நிர்வாகி புஸ்சி ஆனந்த்.
இப்படி பிரச்சினை பெரிதாகி கொண்டே போக, 2020 ஜூன் மாதத்தில் ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற கட்சியைப் பதிவு செய்தார் எஸ்.ஏ.சி. இந்த அமைப்பின் தலைவர் விஜயின் அப்பா. பொருளாளர் விஜயின் அம்மா என முடிவானது.
ஆனால் அப்போதும் கூட விஜய், தனக்கும் என்னுடைய தந்தை தொடங்கி இருக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை. எனது பெயரையோ, புகைப்படத்தையோ அவர்கள் பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
வேறுவழியில்லாமல் எஸ்.ஏ.சி, 2021-செப்டெம்பரில் விஜய் ரசிகர் மன்றங்களை ஒரு அமைப்பாக மாற்றிய ‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’’ கலைக்கப்படுவதாக அறிவித்தார்.
இப்படியாக தந்தையின் வழியில் அரசியல் களம் காண விஜய் என்றுமே விரும்பியது இல்லை. ஆசைப்பட்டதும் இல்லை. ஆனால் அரசியல் சாயம் இல்லாமல் ‘மக்கள் தலைவர்’ ஆக வேண்டுமென்பதே விஜயின் தொலைநோக்குப் பார்வை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
ஆனால் அவருடன் இப்போது இருக்கும் தலைமை நிர்வாகிகள், அரசியலில் நேரடியாக இறங்கவேண்டாம். ஆனால் மக்களிடையே நமக்கு என்ன மாதிரியான ஆதரவு இருக்கிறது என்று பார்க்கலாம். நம்முடைய மன்றங்கள் வலுவாக இருக்கும் பகுதிகளில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடலாம் என்று விஜயிடம் தொடர்ந்து கூறவே, அரை மனதோடு விஜய் அதற்கு ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்தே 2021-ல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் ரசிகர்கள் போட்டியிட்டனர். 169 இடங்களில் போட்டியிட்ட விஜய் மன்ற நிர்வாகிகள் 115 இடங்களில் வெற்றிப்பெற்றனர். வெற்றிவிகிதம் 68% ஆக அமைந்தது. தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, கமலின் மக்கள் நீதி மய்யம், விஜய்காந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என இந்த அரசியல் கட்சிகளோடு ஒப்பிடுகையில், விஜய் மன்ற நிர்வாகிகளுக்கு கிடைத்த வெற்றி சொல்லிக்கொள்கிற வெற்றியாகவே அமைந்தது. இதுவே விஜய்க்கு ஒரு புது நம்பிக்கையைக் கொடுத்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்த வெற்றிகளை வைத்தே விஜயை அரசியல் நோக்கி நகரவைக்க அவரது மன்ற நிர்வாகிகள் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
இதையடுத்தே விஜய் தனது பனையூர் ரசிகர் மன்ற அலுவலகத்தில், ரசிகர் மன்ற நிர்வாகிகளை, மாவட்ட வாரியாக சந்திக்க ஆரம்பித்தார் சில மாதங்களுக்கு முன்பே தேர்தலுக்கு தயாராகும் வகையில் வாக்கு சேகரிப்பிலும், ஓட்டெடுப்பின் போதும் முக்கிய பங்கு வகிக்கும் பூத் ஏஜெண்ட்கள் குறித்த தகவல்கள் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் சேகரிக்கப்பட்டது. விஜய். உலக பட்டினி தினத்தில் பசியார உணவு வழங்கப்பட்டது. 10 மற்றும் 12-ம் வகுப்புகளின் பரீட்சையில் மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த 1,600 மாணவர்கள் மாணவிகளை விஜய் சந்திக்க முன்வந்தார்.
இப்படி விஜய் சமீபத்திய நடவடிக்கைகள், அவர் அரசியல் களம் காண விரும்புகிறார் என்ற எதிர்பார்பை உருவாக்கி இருக்கிறது.
ஆனால் விஜய்க்கு நெருக்கமானவர்கள், ‘விஜய் அரசியலைப் பொறுத்தவரை ரஜினியின் ஃபார்மூலாவையே பின்பற்ற விரும்புகிறார். ரஜினி திடீரென மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சித்தலைவரைப் போய் சந்திப்பார். அடுத்து இரண்டு மாதங்களில் எதிர்க்கட்சித் தலைவரையும் போய் பார்ப்பார். அரசியல்ரீதியாக கருத்துகளையும் அவ்வப்போது வாய்ஸ் ஆக கொடுப்பார். முடிந்தவரை எல்லா கட்சியினருக்கும் நண்பராக இருக்க முயற்சிப்பார். அதே பாணியில் விஜய் தனது அரசியலை தொடங்க விரும்புவதாக கூறுகிறார்கள்.
அதேநேரம், அரசியல் நிலவரம் குறித்த கள ஆய்வுகளையும் விஜய் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று தமிழ் நாட்டு அரசியலில், வீரமிக்க ஆளுமையான ஜெயலலிதாவும் இல்லை. ராஜ தந்திரத்தில் புகுந்து விளையாடும் கலைஞரும் இல்லை. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியும் போட்டியில் இல்லை. எதிர்பார்ப்பை கிளம்பிய விஜயகாந்த் களத்தில் இல்லை. கமலும் சோபிக்கவில்லை. இதனால் தனக்கான ஒரு இடம் உருவாகி இருப்பதாக விஜய் கருதுகிறாராம்.
இதனால், விஜய் தேர்தல் களம் காண வாய்ப்புகள் உருவாகி வருவதாக அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.