No menu items!

கறுப்பு ரஜினி போல கறுப்பு சரிதா நான்…!

கறுப்பு ரஜினி போல கறுப்பு சரிதா நான்…!

சாவித்திரி, லட்சுமி, பானுமதி, சுஜாதா வரிசையில் குணச்சித்திர நடிப்பால் தமிழ்த் திரையை ஆண்டவர் நடிகை சரிதா.

கறுப்பாக இருப்பவர்களாலும் ஹீரோவாக முடியும் என்பதற்கு ரஜினிகாந்த் எப்படி உதாரணமோ, அதேபோல் கறுப்பாக இருப்பவர்களால் ஹீரோயினாக ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் சரிதா.

இதுபற்றி சொல்லும் சரிதா, “கறுப்பாக இருக்கிறோமே என்று எப்போதுமே நான் வருந்தியதில்லை, நான் அத்தனை பெரிய அழகியாக இல்லாததால்தான் என்னை குடும்பப் பாங்கான பாத்திரங்களில் நடிக்க வைத்தார்கள் என்று நினைப்பேன். ஒருவகையில் இதுவும் எனக்கு ஒரு பிளஸ் பாயிண்ட்தான்” என்கிறார்.

எந்த சினிமா பின்னணியும் இல்லாதவர் அபிலாஷா( இதுதான் சரிதாவின் இயற்பெயர்). அப்படிப்பட்ட சூழலில் இருந்து பாலச்சந்தரின் இயக்கத்தில், கமல் ஜோடியாக முதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைப்பது அத்தனை சாதாரண விஷயம் அல்ல.

முதல் பட வாய்ப்பு வந்ததைப் பற்றி கூறும் சரிதா, “இன்றைய முன்னணி இசையமைப்பாளர் சலபதி ராவ் என் தூரத்து உறவினர். நான் 9-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது ஒரு நாள் அவர் வீட்டில் இருந்தேன். அப்போது அங்கு வந்த தெலுங்கு பட வசனகர்த்தா கணேஷ் பாத்ரோ என்னைப் பார்த்து, ‘பாலச்சந்தரின் மரோசரித்ரா படத்துக்கு 15 வயது பெண் தேவைப்படுகிறார். உன்னைப் பார்த்தால் அந்த வேடத்துக்கு ஏற்ற பெண்போல் தெரிகிறது. நீ வேண்டுமானால் போய் பாலச்சந்தரை பார். நானும் அங்கே இருப்பேன்’ என்றார்.

எனக்கு பெரிய நம்பிக்கை இல்லாவிட்டாலும், எதற்கும் போய் பார்ப்போமே என்று போனேன். பாலச்சந்தரின் ரூமுக்குள் நுழைந்தவுடன் அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி பெயர் என்ன என்பதுதான். அட்மிஷனுக்கு நிற்கும் மாணவி போல் நின்றேன். அன்றுதான் முதல் முறை புடவை கட்டி இருந்தேன்.

ஒரு பக்க வசனத்தை எழுதிக் கொடுத்து பேசச் சொன்னார். அதை மனப்பாடம் செய்து பேச 10 நிமிட அவகாசம் கொடுத்தார். நான் 5 நிமிடத்தில் பேசிக் காட்டினேன்.

பாட்டு பாடச் சொன்னார். நான் ‘ரம்பா ஊர்வசி மேனகா’ படத்தில் ரோஜா ரமணி பாடிய பாடலைப் பாடி ஆடிக்காட்டினேன். படத்தில் ரோஜா ரமணி செய்வது போல நானும் பாடிக்கொண்டே தரையில் உருண்டேன். நாற்காலியில் இருந்து எழுந்த பாலச்சந்தர் சார், என்ன இது என்று கேட்டார்.

அந்தப் படத்தில் இப்படித்தான் ஒரு கார்டனில் காதல் ஜோடி பாடி உருண்டது என்றேன். அதைக் கேட்டதும் சிரித்து விட்டார். அடுத்த நாள் மேக்கப் டெஸ்ட்டுக்கு வரச் சொன்னார். மேக்கப் டெஸ்ட் முடிந்த பிறகு 15 நாளில் நீச்சல் கற்றுக்கொள். என்றார் டைரக்டர். சபேரா ஹோட்டல் நீச்சல் குளத்தில் கற்றுக் கொண்டேன். ஆனால் படத்தில் அதற்கு அவசியமில்லாமல் போய்விட்டது.

கமலுடன் நடிக்கப் போகிறோம் என்பது பெரிய திரில்லாக இருந்தது .என் தோழிகளுக்கு ஒரு வாரம் முழுக்க ட்ரீட் கொடுத்தேன். ‘மரோசரித்ரா’வின் முதல் நாள் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடந்தது.

முதல் 2 நாட்களுக்கு என்னை திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு டைரக்டரை டார்ச்சர் பண்ணி விட்டேன். அவர் சொல்லிக் கொடுத்தபடி நடிக்க முடியவில்லை. மூன்றாவது நாளில் இருந்து தான் எல்லாம் சரியானது. ஒரு சீனில் நன்றாக நடித்தால் பாலச்சந்தர் சாக்லேட் தருவார். நான் அவரிடம் நிறைய சாக்லேட் வாங்கினேன்” என்கிறார் சரிதா.

சரிதாவின் முதல் தெலுங்கு பட ஹீரோ கமல். தமிழில் முதல் ஹீரோ ரஜினி. டைரக்டர் கே பாலசந்தர் இப்படி எத்தனை பேருக்கு அமையும். பாலசந்தர் இயக்கத்தில் அதிக படங்களில் நடித்த ஹீரோயின் சரிதாதான்.

சரிதா பிரபலமாகத் தொடங்கியதும் அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் பறந்தன. சரிதா நடிக்க வரும் முன்பே கல்யாணம் செய்து கொண்டார். இப்போது அவருக்கு முன்னாள் கணவருக்கும் விவாகரத்து வழக்கு நடக்கிறது என்றெல்லாம் கிசுகிசுக்கள் வந்தன. பாலச்சந்தருடன் அவரை இணைத்துகூட சில கிசுகிசுக்கள் வந்தன. அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

தமிழில் சரிதா நடித்த முதல் படமான ‘தப்பு தாளங்கள்’ படத்தில் விலைமாது வேடத்தில் நடித்தார். தமிழ் நடிகைகள் நடிக்க தயங்கும் வேடம் .அதனால் அடுத்து அவரை புதுப்படங்களில் ஒப்பந்தம் செய்ய சிலர் தயங்கியதும் உண்டு.

மௌன கீதங்கள் படத்திற்காக சரிதாவை தேர்வு செய்த போது. ஒரு முட்டுக்கட்டை போடப்பட்டது அந்தப் பெண் தப்புத்தாளங்கள் படத்தில் ஒரு விபச்சாரியாக நடித்தவர். அவரை மௌன கீதங்களில் நடிக்க வைத்தால் ஹோம்லியான இந்த கேரக்டரின் இமேஜ் பாதிக்கும். இதனால் அந்த படம் பாதிக்கலாம் என்று சொல்லப்பட்டது. பாக்கியராஜ் சரிதாவின் திறமைக்கு மதிப்பு கொடுத்தார். சரிதாவுக்கு திருப்புமுனையாக அந்தப் படம் அமைந்தது. அதன் பிறகு தேசிய விருது பெறும் பல படங்களில் நடித்தார் சரிதா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...