No menu items!

கலைஞர் 100 – உடன்பிறப்பு முதல் ஊஞ்சல் வரை

கலைஞர் 100 – உடன்பிறப்பு முதல் ஊஞ்சல் வரை

முரசொலி அலுவலகம். நிசப்தமாக இருந்தது. கலைஞர் அறையை அருகே சில ஊழியர்கள் அந்தப் பக்கம் யாரையும் வர விடாமல் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

உடன்பிறப்புக்கு கலைஞர் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துக் கொள்ள முடிந்தது. அறை அருகே நெருங்கும்போது உள்ளிருந்த உரத்த குரல் கேட்டுக் கொண்டிருந்தது.

கலைஞரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் கலைஞர் அன்றைக்கு எழுதிய உடன்பிறப்பு கடிதத்தை சப்தம் போட்டு படித்துக் கொண்டு இருந்தார். கலைஞர் அதை கேட்டு இடை இடையே திருத்தம் செய்கிறார். வரிகள் மாற்றப்படுகிறது. வார்த்தைகள் மாற்றப்படுகிறது, மீண்டும் கடிதம் படிக்கப்படுகிறது. மீண்டும் சில திருத்தங்கள். பிறகு அச்சுக்குப் போகிறது.

கலைஞர் கடிதம் எழுதும் போது கட்சி தலைவராய் இருந்து எழுதுவார். சண்முகநாதன் அதைப் படிக்கும் போது ஒரு தொண்டனாய் கேட்பார் கலைஞர். தொண்டருக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்கவே அந்த திருத்தங்கள். இதுதான் உடன்பிறப்பு கடிதங்களின் சிறப்பு ரகசியம்.

கலைஞர் முதல்வராக இருந்த போது அவது பேட்டி வாங்க வேண்டும். அறிவாலயத்தில் இருந்தார் கலைஞர். இரவு 8 மணிக்கு தனியார் சேனலில் செய்தியைப் பார்த்து விட்டு அறிவாலயத்தில் இருந்து புறப்படுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் கிளம்பினார். கூடவே தயாநிதிமாறன். கேட்டதும் பேட்டிக்கு சம்மதித்தார்.

காரின் முன் சீட்டில் முதல்வர் கலைஞர் அமர்ந்தார். பின் சீட்டில் தயாநிதிமாறனும் சண்முகநாதனும். அறிவாலய வாசலில் தொண்டர்கள் கூட்டம். கலைஞர் வாழ்க கோஷம் எழுந்துக் கொண்டிருந்தது. கார் புறப்பட்ட நேரத்தில் முன் சீட்டில் அமர்ந்து இருந்த கலைஞர் பின்னால் அமர்ந்து இருந்த தயாநிதி மாறனிடம் ஏதோ கூறினார். உடனே கார் நின்றது. தயாநிதி மாறன் காரிலிருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி வந்தார்.

கூட்டத்தில் இருந்த வயதான ஒருவரை காருக்கு அழைத்து சென்றார். கலைந்த தலைமுடி, நரை தாடி. தளர்ந்த உடல். பஞ்ச வாழ்க்கை வெளிப்படையாக தெரிந்தது. பெரியவர் தயங்கி தயங்கி கார் அருகே வந்தார். கலைஞர் அவரை நலம் விசாரித்தார், அவர் கையிலிருந்த வெள்ளை கவரை வாங்கினார். பெரியவரும் தயங்கித் தயங்கி கொடுத்தார்.அதில் என்ன எழுதி இருக்கிறது என்று கூட பார்க்கவில்லை. பின்னால் இருந்த தனது நேர்முக உதவியாளர் சண்முகநாதனிடம் கொடுத்து உடனடியாக ஆவன செய்யுமாறு உத்தரவிட்டார்.’உனக்கு எது வேண்டுமானாலும் தயங்காமல் என்னை வந்து பார்’ என்றார் கலைஞர். கார் புறப்பட்டு விட்டது.

கூட்டத்தில் இருந்தவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம். கலைஞர் எப்படி கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தக் கூட்டத்துக்குள் நிற்கும் அவரை கண்டு பிடித்தார் என்று. பெரியவரை கட்சி தொண்டர்கள் சூழ்ந்து விட்டனர். யார் அவர் என்று விசாரித்தார்கள். ஆனால் அவர் சொல்லவில்லை. வேகமாக அங்கிருந்து சென்று விட்டார்.

ஆனால் அவர் யார் என்று அங்கிருந்த ஆட்டோ டிரைவருக்கு தெரிந்திருந்தது. அந்த ஆட்டோவில்தான் பெரியவர் வந்திருந்தார். ஆனால் கூட்டம் சூழ்ந்தவுடன் ஆட்டோவில் ஏறாமல் வேகமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அரசக் கட்டளை படத்தில் இடம் பெற்ற புகழ் பெற்ற பாடலான ’ஆடிவா! ஆடிவா! ஆடப்பிறந்தவளே ஆடிவா’ பாடலை எழுதிய கவிஞர் முத்துக்கூத்தன் என்றார் அந்த ஆட்டோ டிரைவர்.

ஒரு முறை கலைஞர் போட்டோ ஷூட். கனிமொழி வீட்டில். மாடியில் பெரிய ஊஞ்சலில் கலைஞரை அமர வைத்து போட்டோ எடுப்பதாக திட்டம். ஆனால் மாடிக்கு செல்ல வேண்டும். வீட்டின் முகப்பிலேயே ஒரு சிறிய ஊஞ்சல். அதில் கலைஞரை அமர வைத்து படமெடுப்பது என்று திட்டம் மாறியது. கலைஞரும் ஒப்புக் கொண்டார். கலைஞர் நடப்பதற்கு சற்று சிரமப்பட்ட நேரம் அது.

பொதுவாய் ஊஞ்சலில் இருபுறமும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு மேலே உள்ள இரும்பு கம்பத்தில் கட்டப்பட்டு இருக்கும். ஆனால் இந்த ஊஞ்சல் ஒற்றை சங்கிலியில் இணைக்கப்பட்டிருந்தது. கலைஞர் அமர்ந்தவுடன் ஊஞ்சல் ஒரு புறமாக சரிந்தது. கண் இமைக்கும் நேரம் தான். நல்ல வேளை கலைஞரின் மெய்காப்பாளர் உடனடியாக ஊஞ்சலை தாங்கிப் பிடித்து, கலைஞரை காப்பாற்றினார். ஆனால் கலைஞர் அது குறித்து எதுவும் சொல்லவில்லை. ஊஞ்சலில் நடுப்பகுதியில் அமர்ந்து சிரித்த முகத்தோடு போஸ் கொடுத்தார்.

நான் பார்க்காத சறுக்கல்களா சரிவுகளா என்பது போல் இருந்தது அந்த சிரிப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...