தங்களுக்கு நேர்ந்த துயரங்களை திரைப்படமாக எடுத்து ஆவணப்படுத்துவதில் மலையாளிகள் கெட்டிக்காரர்கள். நிஃபா வைரஸ், பணமதிப்பிழப்பு, நிலச்சரிவு என்று கேரளாவை பாதித்த பல விஷயங்கள், ‘வைரஸ்’, ‘புத்தன் பணம்’, ‘மலையன்குஞ்ஞு’ என படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.
அந்த வரிசையில் கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவில் பெய்த பெருமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தை அடிப்படையாக வைத்து வெளியான மலையாளம் படம்தான் 2018 everyone is a hero (2018 – எவரிவன் ஈஸ் அ ஹீரோ). 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த இப்படம் இப்போது சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.
இந்த படத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் முன் இதில் நடித்த நடிகர்களின் குணத்தை பாராட்டியே ஆகவேண்டும். தமிழ் திரையுலகில் ஒன்றிரண்டு ஹீரோக்களே இணைந்து நடிக்க ஈகோ பார்க்கும் இந்த காலத்தில் டொவினோ தாமஸ், வினித் சீனிவாசன், குஞ்சாக்கோ கோபன், ஆசிப் அலி, நரேன் என்று ஹீரோக்களின் ஒரு பட்டாளமே ஈகோ பார்க்காமல் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் நம்ம ஊர் கலையரசனும். அவர்களின் இந்த குணம்தான் படத்துக்கு வெற்றி தேடித் தந்தது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
கேரளாவில் பெருமழை மற்றும் வெள்ளம் கோர தாண்டவம் ஆடிய காலகட்டத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது படம். குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பெரிய கதையெல்லாம் இல்லை. ராணுவ வேலை பிடிக்காமல் ஊருக்கு ஓடிவரும் டொவினோ தாமஸ், மீனவராகப் பிடிக்காமல் மாடலாக விரும்பும் ஆசிப் அலி, அவரது அண்ணன் நரேன், கஷ்டப்பட்டு கட்டிய வீட்டை வெள்ளத்தில் இழந்த குஞ்சாக்கோ கோபன் உள்ளிட்டோர் பல்வேறு நிகழ்வுகளில் வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி காப்பாறுகிறார்கள் என்பதுதான் கதை.
ஆனால் முக்கிய கதைக்குள் வருவதற்கு முன், அவர்களை அறிமுகப்படுத்த சுமார் 40 நிமிடங்களை செலவழிக்கிறார்கள். அதைக் கொஞ்சம் பொறுமையாக பார்க்கவேண்டி இருக்கிறது.
‘சேவ் கேரளா’ என்ற வாட்ஸ் அப் குரூப்பில் அரசு அதிகாரிகள் விட்ட அழைப்பை ஏற்று உதவ குவியும் இளைஞர்கள், வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்ற ராணுவம் இன்னும் வரவில்லையே என்று முதல்வர் கவலைப்படும்போது நாங்கள் இருக்கிறோம் என்று படகுகளுடன் வந்து நிற்கும் மீனவர்கள் என்று நாம் இந்தியர்கள் என நிமிர்ந்து உட்காரவைக்கும் பல காட்சிகள் உள்ளன.
சினிமாவுக்காக எடுத்த காட்சிகளுக்கு நடுவில் நிஜ வெள்ளக் காட்சிகளையும் சேர்த்த எடிட்டர் சமன் சாக்கோவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். அவரைப் போலவே படத்தின் கலை இயக்குநர் மோகன்தாசும் பாரட்டுக்கு உரியவர். நிஜ வெள்ளம் போலவே இருக்கிறது.
துன்பமான சம்பவத்தையும் சுவாரஸ்யமாக சொல்ல முடியும் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப். நகைச்சுவை, சண்டைக்காட்சிகள், வன்முறைக் காட்சிகள் என்று எதுவுமே இல்லாமல் மழையை மட்டுமே வில்லனாக்கி, மக்கள் அனைவரையும் ஹீரோவாக்கி ஒரு பெரிய வெற்றிப் படத்தை இயக்கிய அவருக்கு பாராட்டுகள்.
படத்தில் நெருடும் ஒரே விஷயம் தமிழர்களைக் கையாண்டிருக்கும் விதம். இப்படத்தில் வரும் மலையாளிகள் கேரக்டர் எல்லாமே நல்லவர்களாக இருக்க, கேரளாவில் குண்டு வைக்கச் செல்லும் தமிழரான கலையரசனின் கேரக்டர் மட்டும் ஆரம்பத்தில் வில்லத்தனமாக சித்தரிக்கப்பட்டுள்ளது (பின்னர் அவர் திருந்துவது போல் காட்சி வைக்கப்பட்டுள்ளது). இது தமிழர்கள் மீது மலையாள சினிமா கலைஞர்கள் வைத்துள்ள வன்மத்தைக் காட்டுவதுபோல் இருக்கிறது.