செங்கோல் திடீரென்று நாட்டின் பிரதான பேசு பொருளாக மாறிவிட்டது.
காரணம் புதிதாய் திறக்கப்பட உள்ள நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படுகிறது. அதுவும் 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் புதிய நாடாளுமன்றத்தை அலங்கரிக்கப் போகிறது.
இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர் சந்திப்பில் கூறினார். நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் குறித்த கதையை மத்திய அரசும் ஒரு வீடியோவாக வெளியிட்டிருக்கிறது. அதை மத்திய அமைச்சர்கள் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
மத்திய பாஜக ஆட்சியில் பல விஷயங்கள் – குறிப்பாக வரலாறு தொடர்பான விஷயங்கள் – சர்ச்சையாவது போல் இந்த செங்கோலும் சர்ச்சையாகியிருக்கிறது.
1947 ஆகஸ்ட் 14ல் சுதந்திரத்துக்கு சில மணி நேரங்கள் முன்பு என்ன நடந்தது என்பதை மத்திய அரசு வெளியிட்டுள்ள காணொலி விவரிக்கிறது. அந்தக் காணொலியிலிருப்பது இவைதான்.
இந்தியாவுக்கு சுதந்திரம் என்பது முடிவாகிவிட்டது. ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கான மரபுகள் சடங்குகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் இது குறித்து ஜவஹர்லால் நேருவிடம் பேசுகிறார். ஆட்சி மாற்றும் நிகழ்வில் என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்ளலாம் என்று கேட்கிறார்.
இது கூறித்து ராஜாஜியிடம் ஆலோசனை கேட்கிறார் நேரு. அவர் பல புத்தகங்களை ஆராய்ந்து சோழர்கள் காலத்தில் செங்கோல் என்ற மரபு இருந்தது. செங்கோலை அதிகார மாற்றத்துக்கு அடையாளமாக பயன்படுத்தினார்கள் என்று கூறுகிறார் ராஜாஜி.
உடனே செங்கோல் தயாரிக்கும் பணி ஆரம்பமாகிறது. திருவாவடுதுறை ஆதீனத்திடம் பேசுகிறார் ராஜாஜி. செங்கோல் செய்து டெல்லிக்கு கொண்டு வருவதாக சொல்கிறார் அவர்.
சென்னையிலுள்ள உம்மிடி பங்காரு செட்டி நகைக் கடையில் தங்க செங்கோல் தயாரிக்கப்படுகிறது. 1947ஆம் வருடம் ஆகஸ்ட் 14ஆம் தேதி செங்கோலை விமானத்தில் டெல்லி எடுத்து செல்கிறார்கள். ஆதீனத்தின் துணைத் தலைவர், நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளை, ஓதுவார் ஆகிய மூவரும் செங்கோலுடன் பயணிக்கிறார்கள்.
டெல்லியில் மவுண்ட்பேட்டனை சந்தித்து அவரிடம் செங்கோலைக் கொடுக்கிறார்கள். அதை அவர் வாங்கி, ஆதீனத்தை சார்ந்தவர்களிடமே திருப்பிக் கொடுக்கிறார்.
மவுண்ட்பேட்டன் தொட்டுத் தந்த செங்கோலைக் கொண்டு வந்து புனித நீர் தெளித்து பூஜைகள் செய்து நேருவின் இல்லத்துக்கு கொண்டு செல்கிறார்கள். அதிகார மாற்றத்தின் அடையாளமாக அந்த செங்கோல் நேருவிடம் தரப்படுகிறது. அப்போது தேவாரப் பாடல்கள் பாடப்படுகிறது. சில மணி நேரங்களில் பிரதமராக பொறுப்பேற்கப் போகும் ஜவஹர்லால் நேரு அதை வாங்கிக் கொள்கிறார்.
பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு அடையாளமாக அந்த செங்கோல் இருக்கிறது என்று சொல்கிறது மத்திய அரசு வெளியிட்டுள்ள காணொலி.
ஆனால் இந்தத் தகவல்களை சரித்திர ஆய்வாளர்கள் மறுக்கிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் ஜவஹர்லால் நேருவுக்கு செங்கோல் வழங்கப்பட்டது உண்மைதான். ஆனால் அது மவுண்ட்பேட்டன் வழியாக அதிகார மாற்றத்தின் அடையாளமாக வழங்கப்படவில்லை என்று குறிப்பிடுகிறார்கள். சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் நேருவுக்கு கொடுக்கப்பட்ட பரிசு என்கிறார்கள்.
ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக டெல்லி செங்கோட்டையில் பறந்த பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டதுதான் ஆட்சி மாற்றத்தின் வெளிப்படையான அடையாளமாக இருந்தது என்பது ஆய்வாளர்களின் வாதம்.
இந்திய சுதந்திரம் பெற்றது குறித்தும் ஆட்சி அதிகாரம் கைமாறியது குறித்தும் ஏராளமான சரித்திர புத்தகங்கள் இருக்கின்றன. குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் எந்த இடத்திலும் ராஜாஜியிடம் நேரு ஆலோசனைக் கேட்டதாகவோ அல்லது மவுண்ட்பேட்டனிடம் செங்கோல் வழங்கப்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. திருவாவடுதுறை ஆதினத்தை சேர்ந்தவர்களிடமிருந்து செங்கோலை நேரு வாங்கிக் கொள்ளும் புகைப்படங்கள் இருக்கின்றன. ஆனால் மவுண்ட்பேட்டன் வாங்கிக் கொள்வது போன்ற புகைப்படங்களும் இல்லை என்பதை கவனிக்க வேண்டும்.
இந்திய சுதந்திரத்துக்காக புதிய பிரதமருக்கு பரிசு அளிக்க வேண்டும் என்பதற்காக ஆதீனத்தை சேர்ந்தவர்கள் செங்கோலைக் கொண்டு சென்று நேருவிடம் கொடுத்தார்களே தவிர அதில் எந்த அதிகார, ஆட்சி மாற்ற சடங்கும் இல்லை என்று மறுக்கிறார்கள்.
தி இந்து ஆங்கில நாளிதழ் ஆகஸ்ட் 10 1947ல் வெளியிட்ட செய்தியில் திருவாவடுதுறை ஆதினம் தங்க செங்கோலை பூஜித்து ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று ஜவஹர்லால் நேருவிடம் கொடுக்க இருக்கிறார்கள். தங்க செங்கோலை சென்னையிலுள்ள உம்மிடி பங்காரு செட்டி நகைக் கடையினர் செய்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. அந்த செய்தில் மவுண்ட்பேட்டன் குறித்தோ ஆட்சி மாற்றத்தின் அடையாளம் என்றோ குறிப்பிடப்படவில்லை.
இப்படி செங்கோல் விவகாரம் இந்திய சரித்திர சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
புதிய நாடாளுமன்றத்துக்கு செங்கோல் வந்ததற்கு காரணமாக ஒரு தமிழ் வார இதழும் ஒரு பரதநாட்டிய கலைஞரும் இருந்திருக்கிறார்கள். இது குறித்து மத்திய அரசு குறிப்பும் வெளியிட்டிருக்கிறது.
2021 மே மாதம், துக்ளக் இதழில் நேருவுக்கு வழங்கப்பட்ட செங்கோல் குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதைப் படித்த பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம், பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதுகிறார். நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புனிதமான செங்கோலை அடுத்த சுதந்திர தினத்தில் பொது மக்களுக்கு காட்சிப் படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.
அதனையடுத்து அந்த செங்கோலை தேடுகிறது மத்திய அரசு. அலகாபாத்தில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்ட நேரு குடும்ப இல்லமான ஆனந்த பவனில் இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்படுகிறது.
சுதந்திர நாளன்று பிரிவினை பதற்றத்தினால் பரபரப்பாக இருந்ததால் செங்கோல் நிகழ்வு சரித்திரத்தில் பதிவாகவில்லை. அதனால் இந்தியர்களின் ஞாபகத்திலிருந்து மறைந்துவிட்டது என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
பத்மா சுப்ரமணியனின் கடிதத்துக்கு ஒரு கிளைக் கதையும் உள்ளது. 1978ஆம் வருடம் சுதந்திரதினத்தன்று காஞ்சி சங்கரமட நிகழ்ச்சி ஒன்றில் இந்த செங்கோல் குறித்து பேசியிருக்கிறார் அப்போதைய காஞ்சி மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். அது பின்னர் அவர் குறித்து தொகுக்கப்பட்ட புத்தகத்திலும் வந்திருக்கிறது. துக்ளக் கட்டுரையிலும் சங்கராச்சாரியாரின் கருத்து பதிவாகியிருக்கிறது.
செங்கோல் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய சரித்திரம் எழுதப்பட்டிருப்பதைக் குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்தார்.
“வரலாற்று ஆய்வாளர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தியாவில் பல பேரரசுகள் இருந்திருக்கின்றன. ஆனால் முகலாயப் பேரரசு குறித்து மட்டும் ஆய்வாளர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.அவர்களை பற்றி மட்டுமே எழுதுகிறார்கள். இந்தியப் பேரரசுகள் பற்றிய குறிப்புகள் எழுதப்படவில்லை. பாண்டியர்கள் 800 வருடங்கள் ஆண்டார்கள், மவுரியர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டார்கள், குப்தர்கள் 400 வருடங்கள் ஆண்டார்கள். இந்தப் பேரரசுகள் குறித்தும் எழுதப்பட வேண்டும். அப்படி எழுதப்பட்டால் தவறான சரித்திரம் மறையும் உண்மை வெளியில் வரும்” என்று குறிப்பிட்டார்.
பிரதமருக்கு செங்கோல் வழங்கப்படும் நிகழ்வை ஆன்மிக நிகழ்வாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்று டெல்லியிலிருந்து செய்திகள் வருகின்றன. அதன்படி ஓதுவார்கள் தேவாரம் பாட செங்கோல் பிரதமருக்கு வழங்கப்படும் என்று தெரிய வருகிறது. இது பண்டைய சோழர் கால நடைமுறை என்று கூறப்படுகிறது. புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் வைக்கப்படும்.
புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்காக தங்கத்திலும் வெள்ளியிலும் புதிய செங்கோல்களை தயாரித்திருக்கிறார்கள் உம்மிடி நிறுவனத்தினர். அவை பிரதமரிடம் கொடுக்கப்படுமாம்.
இப்படி பல சர்ச்சைகளுடன் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்படுகிறது. நாடாளுமன்றம் என்றாலே சர்ச்சைகளும் சச்சரவுகளும்தானே என்று கடந்தும் போகலாம். சரித்திரம் மாற்றப்படுகிறதா என்று கவலையும்படலாம்.
மக்களாட்சயானால் செங்கோல் கடாது என்று எங்கே கூறப்பட்ட இருக்கிறது ? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி தான் நாட்டை ஆள்கிறார் செங்கோல் என்பது செழுமையான ஆட்சியின் குறியீடு. மன்னராட்சிக்கும் மக்களாட்சிக்கும் இது பொருந்தும்.