தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், பெட்ரோனஸ், கேட்டர்பில்லர் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை தமிழகம் முழுவதும் கொண்டாடுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் வருகை, மதுரை மற்றும் திருவாரூரில் நடைபெற உள்ள விழாக்களுக்கான ஏற்பாடுகளை செய்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தொடரும் மழை: காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, “தமிழ்நாட்டில் வரும் 7 அல்லது 8ம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் ஒரு சிறுமி, 4 சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஆபாச வீடியோ எடுத்த சிறுவர்கள் கைது
விழுப்புரம் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற இச்சிறுமி உடல்நிலை சரி இல்லாமல் இருந்ததைக் கண்ட ஆசிரியர் இதுபற்றி அச்சிறுமியிடம் விசாரித்துள்ளார். பின்னர் அச்சிறுமியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. தொடர்ந்து அச்சிறுமியிடம் குழந்தைகள் நல அலுவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், அச்சிறுமி வசிக்கும் பகுதியைச் சேர்ந்த 14 முதல் 17வயதுடைய நான்கு சிறுவர்கள் அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னைப் போன்ற மேலும் அப் பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களுக்கும், அவ்வாறு பாலியல் துன்புறுத்தல் நடந்ததாகவும் அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து 4 சிறுவர்கள் மீதும் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பாலியல் வன் கொடுமை, கடத்தல் மற்றும் போக்சோவில் 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் விழுப்புரம் மாவட்ட இளஞ்சிறார் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவிப்பு
தேசியவாத காங்கிரஸ் கட்சி கடந்த 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக அதன் தலைவராக இருந்து வருபவர் சரத் பவார். இந்தநிலையில் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக இன்று அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்,”நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் நிறைவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கின்றன. அதில் எந்தவிதமான பொறுப்புக்களையும் ஏற்கக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் மகாராஷ்டிரா மற்றும் தேசிய அரசியலில் கவனம் செலுத்த உள்ளேன். கடந்த மே 1, 1960 முதல் மே 1, 2023 வரையிலான நீண்ட அரசியல் தலைமைப் பதவியில் இருந்து கொஞ்சம் விலகியிருப்பது அவசியமாய் இருக்கிறது. இதனால், நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.