ஒடிடி-யினால் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு எகிறுவது, அதன் பட்ஜெட் இரண்டு மூன்று மடங்கு அதிகமாவது, கதையை வேற லெவலுக்கு கொண்டுப் போவது எல்லாமும் சாத்தியம்தான் என நிரூபித்திருக்கும் படம் ‘புஷ்பா’.
தெலுங்கில் ‘புஷ்பா – த ரைஸ்’ படம் திரையரங்குகளில் 17 டிசம்பர் 2021-ல் வெளியான போது கூட அந்தளவிற்கு வெற்றியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒடிடி-யில் படம் தெறிக்கவிட ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் கொஞ்சம் மிரண்டுப் போனது.
ஒடிடி-யில் இன்றும் கூட மக்களால் பார்க்கப்படும் படங்களில் ’புஷ்பா’ [Pushpa: The Rise] தொடர்ந்து இருந்து வருகிறது.
புஷ்பா இரண்டாம் பாகம் மேக்கிங்கில் கேஜிஎஃப், பாகுபலியைவிட மிரட்டலாக இருக்கவேண்டுமென்பதில் இயக்குநர் சுகுமார் உறுதியாக இருக்கிறார். இதற்காகவே கதையில் புது தினுசான அம்சங்களை அதிகம் சேர்த்திருக்கிறார்களாம்.
இந்தியாவுக்குள் சந்தனக்கட்டைகளை கடத்திய புஷ்பா இப்பொழுது இண்டர்நேஷனல் மார்க்கெட்டை தன் வசம் கொண்டு வருவதுபோல் கதை விரிவுப்படுத்தப்பட்டுள்ளதாம்.
இதற்காக இலங்கை, தாய்லாந்தில் ஷூட் செய்ய இருக்கிறார்கள்.
இதனால் பெரும் எதிர்பார்புகளுடன் புஷ்பா குழு இரண்டாம் பாகத்தில் இறங்கியிருக்கிறது.. நான்கு மாதங்களுக்கு முன்பு ’புஷ்பா 2’ ஷூட்டிங் ஆரம்பித்தது. இரண்டு ஷெட்யூல்களை முடித்திருக்கிறார்கள்.
இதனால் பு’ஷ்பா 2’ [Pushpa:: The Rule] படத்திற்கான பட்ஜெட்டை தாறுமாறாக ஏற்றியிருக்கிறார்கள். இப்பொழுது இப்படத்தின் பட்ஜெட் 300 கோடி என்று முடிவாகி இருக்கிறதாம்.
புஷ்பாவுக்கு இருக்கும் மவுசை பார்த்து, இதன் ஒடிடி உரிமையை வாங்க ஒடிடி நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. நெட்ஃப்ளிக்ஸூம், அமேசானும் களத்தில் இருக்கின்றன.
முதல் பாகம் அமேசான் ப்ரைமில் இருப்பதால், இரண்டாவது பாகத்தை எப்படியாவது வாங்கிவிடுவது என நெட்ஃப்ளிக்ஸ் மும்முரமாக இருக்கிறதாம்.
இதைப் பார்த்து சுதாரித்து கொண்ட புஷ்பா தயாரிப்பு நிறுவனம், ஒடிடி உரிமைக்கு 200 கோடி கேட்கிறதாம். இந்த ஒடிடி உரிமை மூலம் வரும் வருமானம் படத்தின் ஷூட்டிங்கை எந்தவித தடையும் இல்லாமல் எடுக்க உதவும் என எதிர்பார்க்கிறார்கள்.
ஒடிடி உரிமை பஞ்சாயத்து போய்கொண்டிருக்கையிலேயே, புஷ்பா இந்தவருடம் ரிலீஸ் இல்லை என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் இயக்குநர் சுகுமார். இரண்டாம் பாகம் அடுத்தவருடம் ஏப்ரலில்தான் வெளியாகுமாம்.