அம்பாசமுத்திரத்தில் காவல்துறை உதவி கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வந்த பல்வீர் சிங், சிறிய குற்றங்களுக்காக விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. 10-க்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு தண்டனை அளித்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சர்ச்சை தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர், முகமது சபீர் ஆலத்துக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். இதனிடையே, ஏஎஸ்பி பல்வீர் சிங்கை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்குப் பதில் அளித்த முதலைமச்சர் மு.க. ஸ்டாலின்,”அம்பை ஏஎஸ்வி விவகாரத்தில் புகார் வந்த உடனேயே விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. உடனடியாக அந்த ஏஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன். முழுமையான விசாரணை அறிக்கை வந்த உடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.
லட்சத்தீவு எம்.பி முகமது பைசலின் தகுதி நீக்கம் ரத்து: மக்களவை செயலகம் அறிவிப்பு
லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து கவரட்டி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் சிறை தண்டனையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், கேரள நீதிமன்றம் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது. இருப்பினும், தகுதி நீக்க உத்தரவை ரத்து செய்யாததால் முகமது பைசல் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில், லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டு மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
மே 10ஆம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, நடப்பு கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 244 தொகுதிக்கும் மே 10ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனு பரீசிலனை ஏப்ரல் 21ஆம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற ஏப்ரல் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆறு வயதில் பாலியல் தொல்லை: குழந்தைகள் விழிப்புணர்வு முகாமில் குமுறிய பெண் கலெக்டர்
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டராக இருப்பவர் டாக்டர் திவ்யா எஸ். ஐயர். இவர் நேற்று பத்தினம்திட்டாவில் நடந்த குழந்தைகள் விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார். அப்போது தனது குழந்தை பருவம் குறித்த பல உண்மைகளை கூறிய கலெக்டர், “நான் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்தபோது என் வீட்டிற்கு 2 ஆண்கள் வந்தனர். அவர்கள் என்னிடம் அன்புடன் பேசினார்கள். பின்னர் என்னை அவர்கள் அருகில் அமர வைத்தனர். அப்போது அவர்கள் என்னை தொட்டு தொட்டு பேசினார்கள். பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். முதலில் எனக்கு எதுவும் தெரியவில்லை. பின்னர் அவர்கள் என் ஆடையை கழற்றும்படி கூறினார்கள். அது எனக்கு சங்கடமாக இருந்தது. எனவே நான் அங்கிருந்து ஓடிவிட்டேன்.
இதுபற்றி எனது பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இதனால் நான் அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வந்தேன். பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த புரிதலை ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்தான் இதனை சொல்லி கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு இதுபற்றி தெரிந்திருந்தால் அவர்கள், தன்னிடம் பேசுவோரையும், தவறான எண்ணத்தில் தொடுவோரிடம் இருந்தும் பாதுகாத்து கொள்ள முடியும். வண்ணத்து பூச்சிகள் போல் சிறகடித்து பறக்க வேண்டிய பருவத்தில் குழந்தைகள் இதுபோன்ற பிரச்சினைகளில் சிக்கி கொள்ளாமல் இருக்க பெரியவர்கள் கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
நகைச்சுவை நடிகர் செந்திலின் பீமரதசாந்தி விழா: திருக்கடையூர் கோவிலில் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்து 60 வயதில் சஸ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி, 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் செய்து வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இக்கோயிலில் ஆண்டு முழுவதும் தினமும் திருமண வைபவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
இந்நிலையில், இக்கோயிலில் இன்று திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்திலின் 70வது வயதை முன்னிட்டு பீமரத சாந்தி திருமண விழா நடைபெற்றது. நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, மிரிதிபிரபு மற்றும்’ குடும்பத்தினருடன் திருமணம் செய்து கொள்வதற்காக கோவிலுக்கு வந்தார்.