No menu items!

இளையராஜா இசைக் கலைஞர்கள் – தொடர் மரணங்கள்

இளையராஜா இசைக் கலைஞர்கள் – தொடர் மரணங்கள்

இசையமைப்பாளர் இளையாராஜாவுக்கு நெருக்கமான இசைத் தோழர்கள் ஒவ்வொருவராய் மறைந்து வருகிறார்கள்.

இளையராஜா இசைக் குழுவில் நீண்ட காலம் புல்லாங்குழல் இசைக் கலைஞராக இருந்த சுதாகர் நேற்று காலமானார்.

2020ஆம் ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்த மே மாதம் இளையராஜாவுக்கு வலதுகரமாக செயல்பட்டு வந்த டிரம்மர் புருஷோத்தமன் காலமானார். இளையராஜாவின் அன்னக்கிளி காலத்தில் இருந்து அவருடன் தொடர்ந்து பயணித்து வந்தவர். மடை திறந்து போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு டிரம்ஸ் வாசித்தவர். ‘என்னுடைய வாழ்நாளில் எனது குடும்பத்தாருடன் கூட நான் அவ்வளவு நேரம் இருந்தது கிடையாது. வீட்டில் ஒரு முறை மனைவியை அழைப்பதற்குப் பதிலாக புரு என்று அழைத்துவிட்டேன். அவ்வளவு தூரம் நெருக்கமான புருஷோத்தமன் காலமானது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்திருக்கிறது’ என்று இளையராஜா தனது அஞ்சலியில் குறிப்பிட்டிருந்தார்.

புருஷோத்தமனைத் தொடர்ந்து 2020 பாடகர் எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு உடல் சிக்கல்களும் சேர்ந்துக் கொள்ள சிகிச்சை பலனின்றி இறந்தார். இது இளையராஜாவுக்கு மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. கண்ணீருடன் அவர் வெளியிட்ட அஞ்சலி வீடியோவை எல்லோரும் பார்த்தோம். இளையராஜாவின் பாடல்களுக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது எஸ்.பி.பி.யின் குரல்.

அவருக்கு அடுத்தப்படியாக 2021 ஜனவரியில் இளையராஜாவின் இசைக் குழுவில் பேஸ் கிடார் வாசித்து வந்த சசிதரன் இறந்தார். இளையராஜாவின் மனைவி ஜீவாவின் தம்பி. பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு பேஸ் கிடார் வாசித்தவர். தமிழ்த் திரையிசையில் பேஸ் கிடாருக்கு ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்தவர்.

இந்த வருடம் மார்ச் மாத துவக்கத்தில் இளையராஜாவின் மீக நீண்ட நாள் கிடாரிஸ்டான சந்திரசேகரன் மறைந்தார். இவர் டிரம்மர் புருஷோத்தமனின் சகோதரர். இளைய நிலா பொழிகிறது பாடலுக்கு கிடார் இசைத்தது இவர்தான். இது போன்று எண்ணற்ற இளையராஜா பாடல்களுக்கு கிடார் வாசித்திருக்கிறார். “என்னுடன் பணியாற்றிய, எனக்கு மிகவும் பிரியமான, இசை கலைஞரான கே. சந்திரசேகரன் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். அவர் என்னிடம் இருந்த புருஷோத்தமன் அவர்களின் சகோதரர் ஆவார். நாங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் மேடையில் இருந்து திரைக்கு வந்தவர்கள். அவர் என்னுடன் இணைந்து நிறைய பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அந்தப் பாடல்கள் தற்போது வரை மக்கள் மனதிலே நீங்காமல் உள்ளன. அவருடைய இறப்பில் மிகவும் வருத்தம் அடைகிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தன்னுடைய அஞ்சலி செய்தியில் குறிப்பிட்டிருந்தார் இளையராஜா.

அவர் மறைந்து சில நாட்களுக்குள் – நேற்று மற்றொரு இசைக் கலைஞர் மறைந்திருக்கிறார். இளையராஜாவின் பல பாடல்களுக்கு புல்லாங்குழலை இசைத்திருக்கிறார் சுதாகர். குறிப்பாக நினைவெல்லாம் நித்யா திரைப்படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தது சுதாகர்தான்.

இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய திறமை மிக்க இசைக் கலைஞர்கள் மறைந்து கொண்டிருப்பது இசை ரசிகர்களுக்கு வருத்தமான செய்திகளாக தொடர்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...