No menu items!

பிரதமர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் – மிஸ் ரகசியா

பிரதமர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் – மிஸ் ரகசியா

“உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அதிமுக ஆபீஸ்ல என்ன ரியாக்‌ஷன்’ன்னு பார்க்கப் போயிருந்தேன். அதான் லேட்’ என்றவாறு ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“எடப்பாடி அணியின் மூட் எப்படி இருக்கு?”

“ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. தீர்ப்பு வந்த கொஞ்ச நேரத்துலயே அதிமுக பொதுச்செயலாளரா எடப்பாடி தேர்ந்தெடுக்கப்பட்டதா அதிகாரபூர்வமாக அறிவிச்சுட்டாங்க. எடப்பாடிக்கு எம்ஜிஆர் தொப்பியை போட்டு விடறது, பட்டாசு வெடிக்கறதுன்னு ஏரியாவையே ரணகளப்படுத்திட்டாங்க.”

“ஓபிஎஸ்தான் பாவம்.”

“ஆமாம்… இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறதுங்கிற மூட்லதான் அவர் இருக்கார். ஒருபக்கம் பாஜகவும் இன்னொரு பக்கம் கோர்ட்டும் அவரை கொஞ்சம் கொஞ்சமா கைவிட்டுட்டு வருது. இது போதாதுன்னு நெருங்கின ஆதரவாளர்கள் பலரும் கிளம்பற மூடுக்கு வந்துட்டாங்களாம். உதாரணமா வைத்திலிங்கம் கூடிய சீக்கிரம் எடப்பாடிகிட்ட ஐக்கியமாவார்னு சொல்றாங்க. இதுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னாள் அமைச்சர்கள் சிலர் எடுத்துட்டு இருக்காங்களாம்.”

“எடப்பாடியோட அடுத்த பிளான் என்ன?”

“பிரதமர் மோடியையும் அமித் ஷாவையும் சந்திக்க பிளான் வச்சிருக்கார் எடப்பாடி. இதுக்கான ஏற்பாடுகளை தம்பிதுரை செஞ்சுட்டு இருக்கார். அந்த சந்திப்புல தன்னோட நிலைபாட்டைப் பத்தி அவங்ககிட்ட தெளிவா பேசப் போறாராம். கூடவே அண்ணாமலை பத்தின சில புகார்களையும் அவர் சொல்ல வாய்ப்பிருக்கு. இந்த சந்திப்பு சீக்கிரம் நடக்கும்ங்கிற நம்பிக்கையிலதான் ராகுல் காந்தி தகுதி நீக்கம் பத்தின விஷயத்துல எடப்பாடி மவுனம் காக்கிறார்.”

“தம்பிதுரை ஏற்பாடுகளை செய்யுறாரா? அவரப் பத்தி வேறு ஒரு நியூஸ் கேள்விப்பட்டேனே?”

“ஆமாம். எனக்கும் அந்த செய்தி வந்தது. அவர் டெல்லி பாஜகவினர்கிட்ட நெருக்கமா இருக்கிறார். அவர் பாஜகவுக்கு போவார்னு டெல்லியிலிருந்து சொல்றாங்க. ஆனா இப்ப எடப்பாடிக்கு ஃபுல் பவர் வந்தப் பிறகு அவர் கட்சி மாறுவாரானு தெரியலை. இது அதிமுககாரங்களுக்கும் தெரிஞ்சிருக்கு. அதனால டெல்லி விவகாரங்கள் தவிர மத்த விஷயத்துல அவரை சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க.”

“பாஜகவுல அவரைச் சேர்த்துப்பாங்களா?”

“அது அதிமுக எப்படி நடந்துக்குதுங்கிறதை பொறுத்து இருக்குது. அது மட்டுமில்லாம டெல்லில இருக்கிற மூணு திமுக எம்.பி.க்கள் அப்புறம் ரெண்டு திமுக அமைச்சர்கள் பத்தின ஃபுல் டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணி வச்சிருக்காராம். அந்த ஊழல் லிஸ்ட் பாஜககிட்ட கொடுக்கப் போறார்னு சொல்றாங்க.”

“அவர் அதிமுககாரர். அவர் ஏன் பாஜகவிடம் லிஸ்ட்டை கொடுக்கிறார்?”

“அவர் பாஜகவில் சேரும்போது அந்த லிஸ்ட்டோடதான் போவாராம். அவர் அப்படி பாஜகவுக்கு போகலனா அதிமுகவே அந்தப் பட்டியலை வெளியிடலாம்”

“ஓஹோ அப்படி போகுதா மேட்டர். சரி, அண்ணாமலை எப்படி இருக்கார்?”

“அவர் எப்பவும்போல உற்சாகமாத்தான் இருக்கார். தன்னோட ஆதரவாளர்கள்கிட்ட, ‘நான் அமித் ஷாகிட்டயும், தேசியத் தலைவர் நட்டாகிட்டயும் பேசிட்டேன். நாடாளுமன்றத் தேர்தல்ல பாரதிய ஜனதா தலைமையில கூட்டணி அமைக்கணும்னு ரெண்டு பேரும் சொல்லியிருக்காங்க. அதனால தனி கூட்டணி அமைக்க ரெடியா இருங்கனு சொல்லியிருக்கிறார்”

“அப்ப அதிமுகவோட கூட்டணி இல்லையா?”

“இருக்காதுனுதான் சொல்றாங்க. அதிமுகவும் கூட்டணியை விரும்பல. கடைசி நேரத்துல என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. ஒரே ஒரு விஷயம் இப்போதைக்கு அண்ணாமலை பதவிக்கு ஆபத்து இல்லை. அந்த உற்சாகத்துலதான் நாகர்கோவிலில் நடந்த பாரதிய ஜனதா செயல்வீரர்கள் கூட்டத்தில், ‘கூண்டுக்குள் இருந்து கிளி வெளியே வந்துவிட்டது. நாம இனிமே சுதந்திரமா செயல்படலாம்’னு பேசி இருக்கார். ஆனா மத்திய அமைச்சர் எல்.முருகனும் வானதி சீனிவாசனும் இதை நம்பத் தயாரா இல்லை. டெல்லி தலைமை அண்ணாமலைகிட்ட தமிழக கூட்டணி பற்றி எதுவும் சொல்லலை. கர்நாடக தேர்தலை கவனிங்கன்னு மட்டும்தான் சொல்லி இருக்கு. இதுதான் உண்மைன்னு அவங்க சொல்றாங்க. அதனாலதான் சமீபத்துல செய்தியாளர்கள்கிட்ட பேசுன எல்.முருகன், ‘அதிமுக – பாரதிய ஜனதா கூட்டணி வலுவா இருக்கு’ன்னு பேசி இருக்கார்.”

“அப்போ எதை நம்புறது?”

“இப்போதைக்கு அண்ணாமலை சொல்றதைதான் நம்பணும். அவர் முகத்துல பழைய களை வந்திருக்கிறதை கவனிச்சிங்களா?”

“கவனிச்சேன்…கவனிச்சேன். ..அதோடு சட்டமன்ற வளாகத்துல எடப்பாடியும் வானதி சீனிவாசனும் பேசுனதையும் கவனிச்சேன். என்ன பேசினாங்களாம்”

“வானதிகிட்ட ‘பாஜகவுக்கு ஆதரவாத்தானே பேசிட்டு இருக்கோம். ஆனா அண்ணாமலை என் மேல இப்படி கோபப்படறாரே’ன்னு வருத்தப்பட்டிருக்கார் எடப்பாடி. அதுக்கு வானதி சீனிவாசன், ‘அண்ணாமலை பேச்சையெல்லாம் கண்டுக்காதீங்க. உங்க கட்சிக்காரங்க பாஜக பத்தி எதுவும் பேசாமல் பார்த்துக்கோங்க. மத்ததெல்லாம் தானா நடக்கும்’னு ஆறுதல் சொன்னாராம்”

“பாஜகவுல ஆள் ஆளுக்கு தனி ட்ராக் ஓட்டுறாங்க போல. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செஞ்சதால எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒண்ணாயிடுச்சு போலயே? மம்தாகூட அவங்களோட சேர்ந்துட்டாங்களே”

“இதை நினைச்சுத்தான் பாஜக இப்ப கலங்குது. தேவையில்லாம அவரை பெரிய ஆளா மாத்திட்டோமோன்னு கவலைப்படறாங்க. இன்னும் அதைப்பத்தி பேசி பெருசாக்க வேணாம்னு நினைக்கறாங்க. அதனாலதான் இப்ப பாஜகவோட மூத்த தலைவர்கள் இதைப்பத்தி கருத்து சொல்லாம இருக்கறாங்க.”

“இந்த விஷயத்துல காங்கிரஸ் கட்சியோட நிலை என்ன?”

“எத்தனை சட்டப் போராட்டங்கள் நடத்தினாலும் அடுத்த 8 வருஷங்களுக்கு ராகுல் காந்தியால தேர்தல்ல போட்டியிட முடியாதுன்னுதான் காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கறாங்க. அதனால பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திக்க திட்டமிட்டிருக்காங்க. பிரியங்கா காந்தி இந்தியா முழுக்க நடந்துபோய் மக்கள்கிட்ட நியாயம் கேட்டா நல்லா இருக்கும்னு ஆலோசனை சொல்லி இருக்காங்க”

“ஒரு வாரிசை முடக்கிப் போட்டதும் அடுத்த வாரிசு கிளம்புதோ…? திமுக நியூஸ் ஏதும் இல்லையா?”

”இருக்கு. திருவாரூர்ல கலைஞரோட நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை ஜூன் 3 ஆம் தேதி தொடங்குறாங்க. அந்த நிகழ்ச்சியை பெரிய விழாவாக நடத்தப் போறாங்க. சோனியா, ராகுல் எல்லோரையும் அழைக்கப் போறாங்க. அகில இந்திய அளவில் எதிர்க் கட்சித் தலைவர்களையும் அழைக்கப் போகிறார்கள். அந்தக் கூட்டத்தின் மூலம் எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சி எடுக்கப்படும். எதிர்க் கட்சிகள் ஒற்றுமைக்கு அந்த விழா திருப்புமுனையாக இருக்கணும்னு முதல்வர் சொல்லியிருக்கிறாராம். அந்தக் கூட்டத்துல பிரதமர் வேட்பாளர் யார்னும் முடிவெடுத்திடலாம்னு திமுககாரங்க பேசிக்கிறாங்க. முக்கியமா ராகுல் காந்தி பிரதமர் ஆகிறதுக்கு எதிர்க் கட்சிகள்கிட்ட எதிர்ப்பு இருந்ததுனா ஸ்டாலினையே பிரதமர் வேட்பாளர்னு குரல் கொடுத்துரலாம்னு திமுகவினர் முடிவு செஞ்சிருக்காங்கலாம். ராகுல் தேர்தல்ல போட்டியிடத் தடை வந்ததுனா இப்படி பண்ணலாம்னு சொல்லப்போறாங்கலாம்”

“அப்படியா? அதுக்கு முதல்வர் ஒகே சொல்லிட்டாரா?”

‘மௌனம் சம்மதம்தானே!” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...