இன்றைக்கு பிரபலமாக இருக்கும் பல இயக்குநர்கள், நடிகர்கள் ஆரம்பத்தில் சினிமாவில் நுழைவதற்காக என்னென்னவோ செய்திருக்கிறார்கள்.
திரைக்கதை திலகம் கே.பாக்யராஜ் வாய்ப்புகளை தேடித் திரிந்த சமயத்தில் ஒரு தில்லுமுல்லு செய்துள்ளார். அதுபற்றி விரிவாகக் கூறுகிறார் பாக்யராஜ்.
“ சினிமாவில் நுழையவேண்டும் என்ற ஆசையில் எவ்வளவு பெரிய தவறைச் செய்தோம் என்று பழைய சம்பவங்களை நினைத்துப் பார்ப்பேன். கஜினி முகம்மது போல பலமுறை சென்னைக்குப் படையெடுத்திருக்கிறேன்.
ஒரு சூழ்நிலையில் எல்லா நண்பர்களிடமும் அளவுக்கு அதிகமாகக் கடன் வாங்கிவிட்டேன். இனி யாருக்கும் கடிதம் எழுதி பணம் கேட்க முடியாத நிலை. அப்போது என் அறையில் ஆறு பேர் இருந்தார்கள். அவர்களுக்கு தினந்தோறும் எப்படியாவது நான் தான் சாப்பாடு போட வேண்டும். இதற்கான பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்தபோது என்நண்பர் ஒரு திட்டத்தைக் கூறினார்.
‘கருமாரி ஃபிலிம்ஸ் என்று அறைக்கு வெளியே போர்டு போட்டுவிடுவோம். புதுமுகங்கள் தேவை என்று சொன்னால் பலர் வருவார்கள். ஒவ்வொருவரிடமும் மேக்கப் டெஸ்டுக்கு என்று சொல்லி 300 ரூபாய் வாங்கினால் நம் 6 பேரின் வயிற்றுப்பாட்டை தீர்த்துவிடலாம்’ என்பதுதான் அந்த நண்பரின் திட்டம்.
அவரது திட்டத்தை என்னால் ஏற்காமல் இருக்க முடியவில்லை. ‘கருமாரி பிலிம்ஸ்’ என்று வெளியே போர்டு தொங்க விடப்பட்டது. மேஜை ஒன்றைப் பெரிதாகப் போட்டு, அதன் மீது அழகான விரிப்பைப் போர்த்தி. ஆஷ்ட்ரே, பைல்கள்.பழைய செக்புக் போன்றவற்றை ஆடம்பரமாக வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன்.
ஏழ்மையான நிலையில் இருந்த ஒரு மேக்கப்மேனையும், ஒரு போட்டோகிராபரையும் தயாராக வைத்துக் கொண்டோம். நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வருபவர்கள் எங்கள் ‘செட்அப்’பைப் பார்த்து அசந்து விடுவார்கள். என் நண்பர்தான் வருகிறவர்களிடம் பேசுவார். சில சமயங்களில் நாடங்களில் படித்திருக்கிறீர்களா என்று நான் கேட்டு வைப்பேன்.
‘மேக்கப் டெஸ்ட் எடுக்கணும், ஃபோட்டோ எடுக்கணும். அதுக்கு 300 ரூபாய் செலவாகும்’ என்று நண்பர் சொல்வார். எப்படியாவது படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அவர்களும் பணம் கொடுப்பார்கள்.
ஒரு ஆள் சிக்கினால் எல்லாச் செலவும் போக 100 ரூபாய் மீதம் வரும் அதை வைத்து சாப்பாட்டு பிரச்சினையை சமாளிப்போம். அதேநேரத்தில் நானும் சினிமாவில் சான்ஸ் தேடும் என் முயற்சியை தொடர்ந்துகொண்டிருந்தேன்.
ஒரு நாள் காலையில் ஒரு முரட்டு ஆசாமி கருமாரி பிலிம்ஸ்க்கு வந்தார். அன்றைய சாப்பாட்டு பிரச்சனை தீர்ந்தது என்று நினைத்து அவரை வரவேற்றோம்.
‘நல்லா ஸ்டண்ட் செய்வேன் உங்க படத்துல எனக்கு ஒரு நல்ல ரோல் கொடுக்கணும்’ என்றார்.
நண்பர் வழக்கமான பல்லவியைப் பாடினார். எப்படியாவது பணம் ஏற்பாடு செய்து கொண்டு வருவதாக சொல்லிச் சென்றார். சொன்னபடி மறுநாள் பணத்தோடு வந்தார். அவருக்கு மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டது.
‘ எப்படியாவது ஒரு சான்ஸ்…’ என்று அவர் தலை சொரிய, நீங்க இல்லாம படமே வெளிவராது “என்று நான் நம்பிக்கை கொடுத்தேன். அவர் நம்பிக்கையோடு போனார். ஆனால் என மனசுக்குள் ஏதோ நடக்கப் போவதாக ஒரு நடுக்கம் இருந்தது.
அவர் சினிமாவில் நடிக்கப் போகிறோம் என்ற நம்பிக்கையில் தனது சைக்கிளை விற்று எங்களுக்கு 300 ரூபாய் கொடுத்திருக்கிறார். இந்த சம்பவத்துக்குப் பிறகு 4 நாட்களுக்கு ஒருமுறை எங்களை வந்து பார்த்துவிட்டுச் செல்வார். ‘எப்ப ஷூட்டிங்?’ என்று கேட்பார். அதற்கு நாங்கள் ‘டிஸ்கஷன் நடந்துட்டு இருக்கு, நடிகர்கள் தேர்வு நடக்குது’ என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்வோம்.
எவ்வளவு நாட்களுக்குதான் இப்படி புளுகிக் கொண்டிருக்க முடியும்? எங்கள் நிலை அவருக்கு விரைவிலேயே புரிந்து விட்டது. அவரது குழைவு, சிரிப்பு, பணிவு எல்லாம் படிப்படியாக குறைந்துகொண்டே வந்தது.
ஒரு நாள் நண்பரின் சட்டையைப் பிடித்து விட்டார்.
” என்னாங்கடா எப்பப் பார்த்தாலும் டபாய்ச்சுக்கினே இருக்கீங்க சான்ஸ் கொடு, இல்லைன்னா பணத்தை திரும்பக் கொடு’ என்று எகிறினார்.
ஒரு வாரத்திற்குள் இடத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால் உடம்பில் கை.கால் இடம் மாறிவிடும் என்ற பயம் எழுந்தது.
என்னுடன் அறையில் தங்கியிருந்த சிலர் கரூர் போகணும் என்றார்கள். அவர்களுக்கு டிக்கெட் எடுத்து கொடுத்து அனுப்பினேன். எனக்கு அடிக்கடி மணியார்டர் வந்து கொண்டிருந்ததால் லாட்ஜில் சந்தேகப்படவில்லை, அவர்கள் போவதை தடுக்கவும் இல்லை.ஆனால் நான் பெட்டி படுக்கையோடு போக முடியாது. காரணம் லாட்ஜில் 750 ரூபாய் வாடகை பாக்கி இருந்தது. அதனால் என் துணிமணிகளை மற்றொருவரிடம் கொடுத்து அனுப்பிவிட்டு இரவோடு இரவாக கம்பி நீட்டி விட்டேன்.
இப்போதும் பாண்டிபஜார் பக்கம் போனாலும் அந்த லாட்ஜை பார்த்துக்கொண்டே போவேன்.. என் இதயத்தில் பழைய நினைவுகள் அலை மோதும்” என்று நடந்ததை மறைக்காமல் சொல்கிறார் பாக்யராஜ்.
– சபீதாஜோசப்