No menu items!

கொஞ்சம் கேளுங்கள் – இந்திய ஜனநாயகம் எதையும் தாங்கிக்கொள்ளும்!

கொஞ்சம் கேளுங்கள் – இந்திய ஜனநாயகம் எதையும் தாங்கிக்கொள்ளும்!

“பார்லிமெண்டில் நடப்பதைப் பார்த்தால் கவலையாக, பயமாக இருக்கிறதே” என்றவாறு அரசியல் விமர்சகர் ஒருவர் முன் அமர்ந்தால், அவர் முகத்தில் சிரிப்பு.

“இரண்டாவது உலக யுத்தத்தின்போது லண்டன் மீது குண்டுமாரி பொழிந்தது. பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் ‘London will take it’ – லண்டன் தாங்கிக்கொள்ளும் என்றார். இந்திய ஜனநாயகம் இப்படித்தான் எதையும் தாங்கிக்கொள்ளும்” என்றார் விமர்சகர்.

இந்திய ஜனாயகம் என்றால் அதன் உருவம் நாடாளுமன்றம்தான் என்றும் அவர் கூறினார்.

“சுதந்திரம் அடைந்தவுடன் அமைந்த இந்தியாவின் முதல் மத்திய அமைச்சரவை ஒரு கூட்டணி அமைச்சரவைதான்! நல்லவர் – வல்லவர் கூட்டணி அது தெரியுமா” என்றார் சற்று பொறுத்து.

ஆம், ஜவஹர்லால் நேரு பிரதமர் என்று தீர்மானமானவுடன் மகாத்மா அவரிடம் ‘திறமைசாலிகள் அமைச்சரவையில் இடம்பெறவேண்டும்’ என்றார். அப்படிதான் நடந்தது.

காங்கிரசுடன் முழு கருத்து வேறுபாடு கொண்ட அம்பேத்கர் சட்ட அமைச்சர். பின்னர் ஜனசங்கம் துவக்கிய ஷியாம் பிரசாத் முகர்ஜி சுகாதார அமைச்சர். ஏ.கே.சண்முகம் செட்டியார் நிதியமைச்சர். ஜஸ்டிஸ் கட்சியில் இருந்த ஏ. ராமசாமி முதலியார் இப்படி பல அமைச்சர்கள். பின்னர் நேருவின் நேரடி எதிரியான ராஜாஜி உள்துறை அமைச்சர்.

கருத்து வேறுபாடுகள் பற்றிக் கவலைப்படாமல் ஒத்துழைத்து நல்லமுறையில் வேர் பாய்ந்து துவங்கியதுதான் நம் நாடாளுமன்ற ஜனநாயகம்.

தந்தையின் காலடியில் ஜனநாயக பாடம் கற்ற இந்திரா காந்தி திடீரென்று பாதை மாறி, எமர்ஜென்சி கொண்டு வந்தார். 5 ஆண்டுகள் என்ற நாடாளுமன்ற ஆயுளை ஆறாண்டுகள் நீட்டித்தார். தனது குரல் மட்டும் ஒரே குரலாக ஒலிக்க நினைத்தார். மாநிலத்தில் உள்ள தன் கட்சியில் சக்தி மிக்க தலைவர்களையே வீட்டுக்கு அனுப்பினார். தனக்கு பக்கபலமாக இருந்த காமராஜரையே தள்ளிவைத்தார். சிறைகளை நிரப்பினார். என்ன ஆயிற்று, அவர் தூக்கி எறியப்பட்டார். தேர்தல் நடத்த வேண்டியதாயிற்று. அந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்த ஜனதா கூட்டணி வெற்றி. மொரார்ஜி தேசாய் தலைமையில் ஆட்சி அமைந்தது. “ஒரு கட்டத்தில் தடி எடுத்தவர் தண்டல்காரர் என்ற நிலை அந்த ஜனதா ஆட்சியில் ஏற்பட ஆட்சி கவிழ்ந்தது. ஒரு பொறுப்பற்ற வீண் குழப்பம் இருந்தால் சரியாக இருக்காது என்பதைப் புரிந்துகொண்ட இந்திய ஜனநாயகம் மீண்டும் இந்திராவை அழைத்தது. ‘நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!’ என்று அழைத்தது.” திராவிட இயக்க அனுதாபி போல சொன்னார் விமர்சகர்.

“எல்லா கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய ஆரம்ப அ, ஆ, இ, ஈ பாடங்களை இந்திய ஜனநாயகம் புத்தியில் உறைக்குமாறு சொல்லிக் கொடுத்துவிட்டது. அது லட்சுமணன் கோட்டையும் வரைந்துவிட்டது. ஒரு போதும் அதைத் தாண்டி போக முடியாது” என்று கண்சிமிட்டினார் விமர்சகர்.

முதல் அமைச்சரவையில் ஆயிரம் ரூபாய் அளவில் நிதித்துறையில் நடந்த சிறு ஊழல். ஓர் ஐஏஎஸ் அதிகாரி செய்தது. பொறுப்பேற்று ராஜினாமா செய்தார் நிதியமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டியார். எல்லோரும் தடுத்தும் அவர் கேட்கவில்லை. பிரிவினையால் ஏற்பட்ட நிதித்துறை சங்கடங்களை சீரமைத்த பெருமை அவருக்கு உண்டு. அவர் விலகியதை பெரும் நஷ்டம் என்றார் நேரு.

நேருவின் மருமகன், இந்திரா காந்தியின் கணவர் ஃபெரோஸ் காந்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் முழங்கினார். நேருவுக்கு தலைவலியாக இருக்குமே என்று கவலைப்படவில்லை. முந்த்ரா ஊழல். எல்ஐசி பங்குகள் சம்பந்தமான குற்றச்சாட்டுக்கு ஆளானார் நிதியமைச்சர் டிடிகே. நீதிபதி சாக்ளா கமிஷன் ஒரே மாதத்தில் விசாரித்து தன் அறிக்கையை தந்தது. டிடிகே பதவி இழந்தார். நேருவின் ஜனநாயக சோஷலிஸத்தை உருவாக்கியவர் டிடிகே.

நாடாளுமன்றம் தன் ‘பலத்தை’ எப்போதும் இழந்துவிடவே இல்லை. யுத்தங்கள் வந்தபோதும் அது தாங்கிக்கொண்டது.

ராஜீவ்காந்தி கூட பத்திரிகைகளை ‘சரிக்கட்ட’ மசோதா கொண்டு வந்தார். தனது பக்கபலமான பத்திரிகை சுதந்திரத்தையும் இந்திய ஜனநாயகம் காப்பாற்றத் தவறவில்லை. மசோதாவை திரும்பப்பெற வேண்டியதாயிற்று.

இப்போது அதானி பற்றி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் ரகளை செய்கின்றன. ஆனால், ஆட்சி நடத்தும் கட்சியும் ரகளையில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்குவது இதுவே முதல்முறை.

வெளிநாட்டில் ராகுல் காந்தி மோடியையும் அவரது ஆட்சியையும் குறை கூறியது தேசத்தை அவமதித்தது போல் ஆகிவிட்டது என்பது பிஜேபியின் ரகளைக்குக் காரணம்.

ராகுல் காந்தியை பதவி நீக்கம் செய்துள்ளார்கள்.

நாடாளுமன்றத்துக்கு அந்த அதிகாரம் உண்டு. ஜனதா ஆட்சி வந்தபோது சிக்மகளூரில் மாபெரும் வெற்றி பெற்று இந்திரா காந்தி நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எமர்ஜென்சியால் தோற்றவர்தான்.

மத்தியில் நடந்த ஜனதா ஆட்சிக்கு இந்திராவின் வெற்றி வயிற்றில் புளியை கரைத்தது. நேர்மையான பிரதமர் மொரார்ஜியே தடுமாறினார். தீர்மானம் கொண்டு வந்து இந்திரா தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என்று ஆக்கப்பட்டது. சில மாதத்தில் இவர்கள் ஆட்சியே செல்லாமல் போய்விட்டது. மக்கள் கொடுத்த ஓட்டை நிராகரிப்பதை இந்திய ஜனநாயகம் வேடிக்கை பார்க்கவில்லை.

“நிறைய உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். விதவிதமான பரிசோதனைகள் அரங்கேறி இருக்கிறது. அரசியல்வாதிகள் இவற்றை படிக்க தவறிவிடக்கூடாது. உலகின் எந்த ஜனநாயகத்தை விடவும் நமது ஜனநாயகம் ஒருபடி மேலானது. ஜனத்தொகை மட்டும் காரணமல்ல. இங்குள்ள விழிப்புணர்வு. இது சைலண்டாகவே இருக்கும். புதிய நாடாளுமன்றத்தில் குடிபோக இருக்கிறோம். இந்திய ஜனநாயகத்துக்கு அது புது தெம்பு நிச்சயமாகத் தரும்.” – விமர்சகர் முடித்தார்.

“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது இளங்கோ அடிகள் கூற்று. அறம் என்பது ஜனநாயகம்தான்” என்று சொல்லியவாறு எழுந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...