No menu items!

உப்பு ஆபத்தா? ரஜினி சொன்னது சரியா? | டாக்டர் தாரிணி கிருஷ்ணன்

உப்பு ஆபத்தா? ரஜினி சொன்னது சரியா? | டாக்டர் தாரிணி கிருஷ்ணன்

ரஜினிகாந்த் அண்மையில் ஒரு கூட்டத்தில், ‘உப்பு மிக ஆபத்து; அது உடலில் எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்’ என்று பேசியது வைரலாகியுள்ளது. உப்பு ஆபத்தா? ரஜினி சொல்வது சரியா? இது தொடர்பாக உணவியல் நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன் ‘வாவ் தமிழா’ யூ டியூப் சேனலுக்கு அளித்த விளக்கம் இங்கே.

“உப்பில் சோடியம் சத்து உள்ளது. உப்பில் மட்டுமல்ல அரிசி, பீன்ஸ், கீரை உட்பட நாம் எடுத்துக்கொள்ளும் பல உணவுப் பொருட்களில் சோடியம் சத்து உள்ளது. ஆனால், நாம் அதிகமும் சோடியம் சத்தை உப்பில் இருந்துதான் எடுத்துக்கொள்கிறோம். எனவே, உப்பு அவசியம். உப்பை நம் உணவில் சேர்த்துக்கொள்வது தவறு அல்ல.

ஆனால், ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில்தான் பிரச்சினை தொடங்குகிறது.

Dr. Dharini Krishnan
டாக்டர் தரணி கிருஷ்ணன்

ஒருவருக்கு ஒரு நாளைக்கு 2 கிராம் அளவு உப்பு என்பதுதான் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவு. ஆனால், இந்தியாவில் ஒருவர் ஒரு நாளைக்கு 5 கிராம் அளவு உப்பு எடுத்துக்கொள்ளலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) பரிந்துரை செய்துள்ளது. அதற்கு காரணம் நமது ஊர் வெயில். நம் மக்களில் பெரும்பான்மையினர் வேளாண்மை சார்ந்து இருப்பதால், வெயில் நின்றுதான் வேலை பார்க்கிறார்கள். எனவே, வேர்வை வெளியேறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்த 5 கிராம் பரிந்துரை  வெயிலில் நின்று வேலை செய்பவர்களுக்குத்தான். நகரங்களில் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் வெயிலை பார்ப்பதே அதிசயம். கட்டிடங்கள் உள்ளேயே இருக்கிறோம்; அதிலும் நிறைய அலுவலகங்கள் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வேர்வை வெளியேறுவதற்கான வாய்ப்பு மிக குறைவு. எனவே, கட்டிடங்கள் உள்ளே வேலை பார்ப்பவர்களுக்கு, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 2 கிராம் உப்புதான் சரி.

அதாவது, ஒரு நாளைக்கு வெயிலில் வேலை பார்ப்பவர்கள் 5 கிராமுக்கு மிகாமலும், அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் 2 கிராமுக்கு மிகாமலும் உப்பு எடுத்துக்கொள்வது சரியாக இருக்கும். ஆனால், எல்லோருமே எந்த வித்தியாசமும் இன்றி 15 கிராம் வரை எடுத்துகொள்கிறோம். இது மிக அபாயகரமானது.

வீட்டில் உறுகாய், வத்தல், வடாம், அப்பளம், கருவாடு என உப்பு அதிகம் உள்ள பாரம்பரிய உணவுகளை அடிக்கடி சாப்பிடுகிறோம். வீட்டுக்கு வெளியே பேக்கரி பண்டங்கள் நிறைய சாப்பிடுகிறோம். பேக்கரி பண்டங்களில் பேக்கிங் பவுடர் என்பது சோடியம் பை கார்பனேட்தான். அந்த வகையிலும் சோடியம் சத்து அதில் சேர்கிறது. ஏற்கெனவே, நம் வீட்டில் செய்யும் உணவிலேயே உப்பு அதிகமாக உள்ளது என்றால் இப்படி வெளியே சாப்பிடும் உணவுகளில் அதைவிட மூன்று மடங்கு உப்பு அதிகமாக உள்ளது.

உதாரணமாக சூப்பை எடுத்துக்கொள்வோம். வீட்டில் காயை வேகவைத்து சூப் செய்தால், ஒரு கப் சூப்பில் 500 மிலி கூட உப்பு சேராது. அதேநேரம் வெளியே சூப் குடித்தாலோ, ரெடிமேட் சூப் பாக்கெட் வாங்கி வீட்டில் செய்தாலோ, 1500 மிலி கிராம் உப்பு அதில் இருக்கும். வெளியே வாங்கும் உணவுகள் சுவையாக இருக்க இதுதான் காரணம். உப்பு மட்டுமல்லாமல் சோடியம் சத்து உள்ள வேறு பல பொருட்களையும் அதில் சேர்க்கிறார்கள்.

இப்படி நம்மூரில் ஒரு நாளைக்கு 15 கிராம் வரை உப்பு ஒருவர் உணவில் சேர்கிறது. இன்னொரு பக்கம் உடல் உழைப்பின்மை  காரணமாக வேர்வை வழியாக அந்த உப்பு வெளியேறுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் உள்ளது. இதனால், நம் உடலில் உப்பு அளவு மிக அதிகமாகிறது.

நம் உடலில் உப்பு அளவு அதிகமாவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. 120/80 தான் இயல்பான ரத்த அழுத்த அளவு. ஆனால், உப்பு சத்து காரணமாக நம் ஊரில் அனேகம் பேருக்கு 180க்கு மேலே ரத்த அழுத்தம் உள்ளது. இது கிட்னியை பாதிக்கும்.

எனவே, உப்பில் மிக கவனமாக இருக்க வேண்டும். உப்பு கெடுதல் கிடையாது; ஆனால், சரியான அளவு மட்டுமே சாப்பிட வேண்டும். உறுகாய், வத்தல், வடாம், அப்பளம், கருவாடு மற்றும் பாக்கெட் ஃபுட் என உப்பு அதிகமுள்ள உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்” என்கிறார் டாக்டர் தாரிணி கிருஷ்ணன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...