No menu items!

கே.என்.நேரு Vs திருச்சி சிவா – மிஸ் ரகசியா

கே.என்.நேரு Vs திருச்சி சிவா – மிஸ் ரகசியா

சென்னையில் திடீரென பெய்த மழையில் நனைந்தபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

‘ஊர்ல இருக்கற செய்தியாளர்களெல்லாம் ஸ்டிங் ஆபரேஷன்ல சிக்கிட்டு இருக்காங்க. நீ அப்படி ஏதும் ஆபரேஷனில் சிக்காமல் பார்த்துக்கொள்” என்றபடி அவளை வரவேற்றோம்.

“நான் பாரதி டைப் புதுமைப் பெண். ‘நிமிர்ந்த நன்னடை… நேர்கொண்ட பார்வை…’ன்னு வாழ்றவ. இதிலல்லாம் மாட்டிக்க மாட்டேன்’

“உன்னை மாதிரி கொஞ்சம் பேராவது ஒழுங்கா இருந்தா சரிதான். ரொம்ப நாள் வெளில வராம இருந்த மதன் ரவிச்சந்திரன் இப்போ திடீர்னு இதுல இறங்கினதுக்கு என்ன காரணம்?”

“கே.டி.ராகவன் தொடர்பான ஆபாச வீடியோவை வெளியிட்டப் பிறகு மதன் ரவிச்சந்திரன் காணாமல் போனார். அவர் ஊடகத் துறைக்கு வந்தது திடீர்னு பாஜகவில் சேர்ந்தது அப்புறம் அங்கிருந்து நீக்கப்பட்டு தலைமறைவா இருந்தது எல்லாமே மர்மம்தான். ஆனா இந்த வீடியோக்களுக்குப் பின்னால அண்ணாமலையால் பாதிக்கப்பட ஒரு பாஜக தலைவர் இருக்கிறதா சொல்றாங்க?”

“யாரந்த தலைவர்?”

“அதை வெளில சொல்லக் கூடாதுனு சோர்ஸ் சொல்லியிருக்காங்க. எல்லாம் அந்த முருகப் பெருமானுக்கே வெளிச்சம்”

“இத்தனை கடவுள் நம்பிக்கையா உனக்கு, சரி முழுசா சொல்லு!”

“அந்த பெரிய தலைவர்தான் மதனிடன் இந்த அசைன்மெண்ட்டைக் கொடுத்து பண்ணியிருக்கிறார்னு சொல்றாங்க. இது அந்த மீடியாக்காரங்களுக்குப் போட்ட ஸ்கெட்ச் இல்லை. தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அவர சுத்தி இருக்கிறவங்களுக்கும் போட்ட ஸ்கெட்ச்”

”நிறைய யூடியுப் செய்தியாளர்கள் இந்த விஷயத்துல காசும் பாட்டிலும் வாங்கி மாட்டியிருக்காங்களே?”

“ஆமா, இவங்களுக்கும் மதனுக்கு முன்னாடியே சில பிரச்சினைகள் இருந்திருக்கு. இப்போ இவங்களாம் அண்ணாமலையோட மறைமுக ஆதரவாளர்களா இருக்காங்க. அதனால ஒரே கல்ல ரெண்டு மாங்கா அடிச்சிருக்காங்க”

“கே.டி.ராகவன் வீடியோ வந்ததும் மதன் ரவிச்சந்திரனை உடனே ஆஃப் பண்ணிட்டாங்க. இப்ப அதுமாதிரி எதுவும் நடக்குமா?”

“இதுவரைக்கும் அப்படி எதுவும் தெரியலை. இந்த முறை கொஞ்சம் விவகாரமாதான் போகும்னு சொல்றாங்க”

“அண்ணாமலையை பொதுவெளில பார்க்க முடியலையே?”

“அவருக்கு உடம்பு சரியில்லைனு சொல்றாங்க. உடம்பு சரியானதும் வெளில வந்து அதிரடி பிரஸ் மீட் கொடுப்பார்” சிரித்தாள் ரகசியா.

“லேட்டஸ்டா முதல்வரோட தூக்கத்தைக் கெடுத்த திருச்சி பிரச்சினை அப்புறம் என்ன ஆச்சு”

“திருச்சி சிவாவோட ஆதரவாளர்கள் அமைச்சருக்கு எதிரா கருப்புக் கொடி காட்டினதுதான் பிரச்சனைக்கு ஆரம்பம். இதைத் தொடர்ந்துதான் அமைச்சர் நேருவோட ஆதரவாளர்கள் அவர் வீட்ல தாக்குதல் நடத்தி இருக்காங்க. நடந்த விஷயங்களையெல்லாம் உளவுத் துறை உடனுக்குடன் முதல்வருக்கு சொல்லி இருக்கு. இதைக் கேள்விப்பட்டதும் முதல்வர் ரொம்பவே அப்செட் ஆயிட்டாராம். இதைப்பத்தி நேருகிட்டயோ, திருச்சி சிவா கிட்டயோ பேச அவர் விரும்பலையாம். அதுக்கு பதிலா துரைமுருகன்கிட்ட தன்னோட வருத்தத்தைச் சொல்லி இருக்காரு. ‘திருச்சியில நடந்தது கொஞ்சம்கூட சரியில்லை. நீங்கதானே பொதுச் செயலாளர்… உங்களுக்கு என்ன தோணுதோ அதைச் செய்யுங்க’ன்னு அப்ப துரைமுருகன்கிட்ட முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருக்காரு.”

“துரைமுருகன் என்ன செஞ்சாராம்?”

“அவர் உடனே அமைச்சர் நேருகிட்ட துரைமுருகன் பேசி இருக்கார். கொஞ்சம் கோபமாகவே பேசியிருக்கிறார். அவர்கிட்ட நேரு, ‘அண்ணா… எனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கலாட்டா பண்ணினவங்களை கட்சியை விட்டு நீக்கறதுக்கு நான் தடையா இருக்கமாட்டே. அவங்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்திருக்கேன்’ன்னு சொல்லி இருக்கார்.”

“அன்பில் மகேசும் திருச்சிக்காரர்தானே…அவர் என்ன நிலைப்பாடு?.”

“அன்பில் மகேஸ்கிட்ட இதைப்பத்தி உதயநிதி விசாரிச்சிருக்கார். அதுக்கு அன்பில் பொய்யாமொழி, ‘திருச்சியில அமைச்சர் நேரு எனக்கே பல இடைஞ்சல்களை தந்துட்டு இருக்காருங்கிறது உணமை. ஆனா இந்த விஷயத்துல நேருவுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. அவருக்கு தெரியாமத்தான் இதெல்லாம் நடந்திருக்கு. இதைப்பத்தி கேள்விப்பட்டதும் அமைச்சர் நேரு பதறியிருக்கார். சம்பந்தப்பட்டவங்ககிட்ட பேசி ஒழுங்கா சரணடையச் சொல்லி இருக்காரு. இல்லாட்டி தானே எல்லாரையும் போலீஸ்ல ஒப்படைக்கறதா மிரட்டி இருக்காரு. அதுவும் இல்லாட்டி சம்பவத்துக்கு பொறுப்பேத்து தானே போலீஸ்ல சரணடைவேன்னு சொல்லி இருக்காரு. இந்த பிரச்சினைக்கு மூலகாரணம் திருச்சி சிவாவோட ஆட்கள் கருப்புக் கொடி காட்டினதுதான். மத்தபடி இதுக்கும் நேருவுக்கும் எந்த தொடர்பும் இல்லை’ன்னு சொல்லி இருக்காரு. உதயநிதியும் இதை அப்படியே முதல்வர் காதுல போட்டிருக்கார்.”

“22-ம் தேதி நடக்கப்போற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துல இதெல்லாம் எதிரொலிக்குமா?”

“நிச்சயம் எதிரொலிக்கும்… இது பத்தின தன்னோட உள்ளக் குமுறல்களை இந்த கூட்டத்துல முதல்வர் கொட்டுவார்னுதான் உடன்பிறப்புகள் எதிர்பார்க்கறாங்க. திமுக தலைவரா ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டப்ப ஒருவருக்கு ஒரு பதவிங்கிற திட்டத்தை அமலாக்க நினைச்சார். ஆனா அப்போ சூழ்நிலை சரியில்லாததால அந்தத் திட்டத்தை தள்ளி வச்சார். இப்ப திரும்பவும் அதைச் செயல்படுத்தற மூடுக்கு முதல்வர் வந்திருக்கார். மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் பொறுப்புகளை வச்சுட்டு மூத்த தலைவர்கள் சிலர் நாட்டாமை பண்றதை முதல்வர் விரும்பல. அதனால ஒருவருக்கு ஒரு பதவி திட்டத்தை இந்த கூட்டத்துக்கு பிறகு தீவிரமா நடைமுறைப்படுத்துவார்னு சொல்றாங்க.”

“திருச்சி சிவா ஏகப்பட்ட தனக்கு ஏகப்பட்ட மன வருத்தங்கள் இருக்குன்னு பேசி இருக்காரே?”

“தன்னோட வீட்ல நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு மூத்த தலைவர் யாரும் கண்டனம் தெரிவிக்கலங்கிறதுல அவருக்கு வருத்தம் அதுதான் மனசுக்குள்ள குமுறிட்டு இருக்கார். அவரைப் போலவே நேருவும் கட்சித் தலைமை மேல கோபமா இருக்கார்.”

“அவருக்கு என்ன கோபம்?”

“தாக்குதல்ல ஈடுபட்டதுக்காக தன்னோட ஆதரவாளர்களை நீக்கின தலைமை, கருப்புக் கொடி காட்டினதுக்காக திருச்சி சிவாவோட ஆதரவாளர்களை நீக்கலையேங்கிற கோபம் அவருக்கு. இதைப்பத்தி தன்னோட ஆதர்வாளர்கள்கிட்ட அவர் பொங்கி இருக்காரு. திமுகவுல 2 கோஷ்டி இருக்கு. ஒரு கோஷ்டி ஆரம்பத்துல இருந்தே திமுகல இருக்கறவங்க. இன்னொரு தரப்பு அதிமுகல இருந்து கட்சி மாறி வந்தவங்க. இதுல கட்சி மாறி வந்த கோஷ்டி இந்த சண்டையை கொண்டாடிட்டு இருக்காம்.”

“பட்ஜெட் தயாரிப்பு பணிகள் எப்படி போகுதாம்?”

“ பட்ஜெட்ல எங்க துறைக்கு இவ்வளவு தொகையை ஒதுக்குங்கன்னு ஒவ்வொரு தடவையும் நிதி அமைச்சர்கிட்ட மத்த அமைச்சர்கள் கேட்கறது வழக்கம். இந்த முறையும் அமைச்சர்கள் அப்படி செஞ்சிருக்காங்க. அதுக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சில அமைச்சர்கள்கிட்ட, ‘ நீங்க போன முறை ஒதுக்கின பணத்தையே சரியா செலவு செய்யல’ன்னு சொல்லி பணம் ஒதுக்க மறுத்திருக்காராம். இந்த விஷயம் முதல்வர் பஞ்சாயத்துக்கு போகும்னு தெரிஞ்சு முன்கூட்டியே அவர்கிட்ட இதுபத்தி சொல்லி இருக்காரு. முதல்வரும் யாராவது இதுபத்தி என்கிட்ட பேசினா நான் பாத்துக்கிறேன்’ன்னு சொல்லிட்டாராம்.

“முதல்வர் மேல அரசு ஊழியர்கள் ஏதோ கோபத்துல இருக்காங்களாமே?”

“விஷயம் உங்க வரைக்கும் வந்துடுச்சா. ‘நம்ம ஸ்கூல்’ திட்டத்துக்கு ஒரு நாள் ஊதியத்தை ஐஏஎஸ் அதிகாரிங்க கொடுப்பாங்கன்னு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கு. இதைத் தொடர்ந்து அவங்களோட ஒருநாள் சம்பளத்தைபி பிடிக்க ஆணை பிறப்பிச்சிருக்காங்க. இதே மாதிரி நீங்களும் ஒருநாள் ஊதியத்தைத் தாங்கன்னு அரசு ஊழியர்கள் சங்கத்துக்கிட்டயும் தலைமைச் செயலக ஊழியர் சங்கம் கிட்டயும் ஆளுங்கட்சி சார்பா கேட்டிருக்காங்க. அதுக்கு அவங்க, ‘இந்த அரசு எங்களுக்கு எதுவுமே செய்யலை. நாங்க எதுக்கு அவங்களுக்கு பணம் தரணும்’னு கேட்டிருக்காங்க. இது முதல்வரோட காதுக்கு போயிருக்கு. சரி, பார்ப்போம்னு சொல்லி இப்போதைக்கு பிரச்சினையை தள்ளி வச்சிருக்கிறார்”

“பாஜக – அதிமுக ரிலேஷன்ஷிப் எப்படி இருக்கு? எடப்பாடி பழனிசாமியோட படத்தை எரிச்சவரை சஸ்பெண்ட் பண்ணி அடுத்த நாளே திரும்ப கட்சியில சேர்த்திருக்கிறதே பாஜக?”

“இந்த விஷயத்தால அதிமுக தலைவர்கள், குறிப்பா சி.வி.சண்முகம் போன்ற தலைவர்கள் ரொம்ப கோபமா இருக்காங்க. பாஜக கூட்டணி இனி தேவையே இல்லைன்னு எடப்பாடிகிட்ட அவங்க சொல்லி இருக்காங்க. ஆனா கூட்டணி கிடையாதுன்னு சொன்னா முன்னாள் அமைச்சர்கள்மேல மத்திய அரசு பாயுமோங்கிற தயக்கத்துலதான் எடப்பாடி இப்போதைக்கு அமைதியா இருக்காராம்.”

“அண்ணாமலையை மறைமுகமா தாக்கி எஸ்.வி.சேகர் அடிக்கடி ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டு வர்றாரே? அவரும் பாஜகதானே”

“அவரும் பாஜகதான். ஆனா, அண்ணாமலையை பிடிக்காத பா.ஜக. மூத்த தலைவர்கள்ல இவரும் ஒருத்தர். இடையில ரெண்டு பேருக்கும் நடுவில சமரசம் ஏற்படறா மாதிரி இருந்தது. எஸ்.வி.சேகரைச் சந்திச்சு இதுபத்தி மனப்பூர்வமா பேசறதா அண்ணாமலை சொல்லி இருக்கார். ஆனா அவர் சொன்னபடி பேச வரலைங்கிறதுல சேகருக்கு வருத்தம். இந்த வருத்தம்தான் அடிக்கடி ட்விட்டர் பதிவுகளா வருது. இந்த விஷயத்துல இப்போதைக்கு எஸ்.வி.சேகர் எதையும் பெருசா செய்யறதா இல்லை. ஜோசியத்தை ரொம்ப நம்பற அவர், அடுத்த மாசம் சனிப்பெயர்ச்சி நடந்த பிறகுதான் பகிரங்கமா குரல் கொடுப்பார்னு அவர் தரப்பு ஆளுங்க சொல்றாங்க. அதுக்குள்ள அவருக்கு ஏதாவது முக்கியத்துவம் கொடுத்து எஸ்.வி.சேகர் தரப்பை சரிசெய்யுமான்னு தெரியலை.” என்று சொல்லி கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...