No menu items!

மே 14 தோனியின் கடைசி போட்டியா?

மே 14 தோனியின் கடைசி போட்டியா?

கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கும்போது ஒரு முக்கிய கேள்வி ரசிகர்களின் மனதில் எழும். ‘இந்த ஐபிஎல் தொடர்தான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடரா?’ என்பதே அந்தக் கேள்வி. தொடரின் தொடக்கத்திலும் நடுவிலும் ஒரு புன்னகையுடன் இந்தக் கேள்வியை கடந்துசெல்லும் தோனி, கடைசிப் போட்டியின்போது மட்டும் இந்த கேள்விக்கு பதில் சொல்வார். ‘இந்த ஐபிஎல் என் கடைசி ஐபிஎல் அல்ல. அடுத்த ஆண்டும் ஆடுவேன்’ என்பதே அந்தப் பதிலாக இருக்கும்.

ஆனால் கடந்த ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டியின் இறுதியில் தனது ஓய்வைப் பற்றிய பதிலை கிட்டத்தட்ட உறுதியாக சொல்லிவிட்டார் தோனி. “சென்னை சேப்பக்கம் மைதானத்தில் நான் எனது கடைசி ஐபிஎல் போட்டியை ஆடுவேன்’ என்பதுதான் தோனியின் பதில். அதே நேரத்தில் இந்த ஐபிஎல் தொடர்தான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று சிஎஸ்கே வட்டாரங்கள் சூசகமாக தெரிவிக்கின்றன.

“ஓய்வு பெறுவதைப் பற்றி சிஎஸ்கே நிர்வாகத்துக்கு தோனி இன்னும் தெளிவாக எதையும் கூறவில்லை. ஆனால் இது அவருக்கு கடைசி ஐபிஎல் தொடராக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. சென்னைக்கு மீண்டும் ஐபிஎல் போட்டிகள் வருவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். அதேநேரத்தில் இத்தனை ஆண்டுகள் எங்களோடு பயணித்த தோனியின் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கும் என்பதை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது” என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி ஆடும் கடைசி போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் மே.14-ம் தேதி நடக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடும் இந்த போட்டிதான் இந்த ஆண்டுக்கான சிஎஸ்கேவின் கடைசி லீக் போட்டி. சேப்பாக்கத்தில் கடைசி போட்டியில் ஆடுவேன் என்று தோனி கூறியிருப்பதால், இந்த போட்டியோடு அவர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் ஆரம்பித்த காலம் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிரிக்க முடியாத அம்சமாக தோனி இருப்பதால், அவருக்கு ஒரு சிறந்த வழியனுப்பு விழாவை நடத்த சிஎஸ்கே ரசிகர்கள் கண்ணீருடன் தயாராகி வருகிறார்கள். ஒருவேளை லீக் ஆட்டத்தை தாண்டி அப்ளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதி பெற்றால், அந்த போட்டிகளிலும் தோனி ஆடுவார். அப்படி நடக்கும் பட்சத்தில் மே14-ம் தேதி நடக்கும் போட்டிக்குப் பின்னர் தோனிக்கு ஒரு பிரிவு உபச்சார விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி ஓய்வுபெறும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னால் ஒரு மிகப்பெரிய கேள்வி நிற்கிறது. தோனிக்கு அடுத்து சென்னை அணிக்கு தலைமை தாங்கும் ஆற்றல் யாருக்கு இருக்கிறது என்பதே அந்த கேள்வி.

கடந்த ஆண்டு ஜடேஜாவுக்கு தோனியால் பட்டம் சூட்டப்பட்டாலும், அவரால் சிறந்த கேப்டனாக செயல்பட முடியவில்லை. அவரால் சாதிக்க முடியாத நிலையில் பென் ஸ்டோக்ஸ், ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்ய ரஹானே ஆகியோர் அடுத்த கேப்டனாக பொறுப்பேற்க தயாராக இருக்கிறார்கள். இவர்களில் தகுதியான நபரை அடுத்த கேப்டனாக தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுப்பது தோனியின் கையில் இருக்கிறது.

பல சவால்களைக் கடக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழிகாட்டிய தோனி, இந்தச் சவாலைக் கடக்கவும் ஓய்வு பெறுவதற்கு முன் வழிகாட்டுவார் என்று நம்புவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...