19 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியனாகி ஒரு மாதம்கூட முடியவில்லை. அதற்குள் புதிய சவாலை எதிர்கொள்ள தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார்கள் நமது கிரிக்கெட் வீராங்கனைகள். இம்முறை அவர்கள் முன்புள்ள சவால் டி20 உலகக் கோப்பை. 2020-ல் நடந்த டி20 உலகக் கோப்பையில் இறுதி ஆட்டம்வரை முன்னேறியது இந்தியா. கடைசியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது. ஜூனியர் பிரிவில் கிடைத்த வெற்றியால் இம்முறை எப்படியும் ஜெயிப்போம் என்ற நம்பிக்கையில் களத்தில் இறங்குகிறார்கள்.
பெண்களுக்கான உலகக் கோப்பை டி20-யைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய வீராங்கனைகள்தான் சுடிசூடா ராணிகளாக இருக்கிறார்கள். இதுவரை நடந்த 7 உலகக் கோப்பை தொடர்களில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலிய அணி, இப்போது 6-வது முறையாக கோப்பையை வெல்லும் நம்பிக்கையுடன் உலகக் கோப்பைக்கு வந்திருக்கிறது. இப்படி யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஜல்லிக்கட்டு காளையாய் வலம் வரும் ஆஸ்திரேலிய அணியை இந்த முறை இந்தியப் பெண்கள் அடக்குவார்கள் என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. சமீபத்திய போட்டிகளில் இந்திய பெண்கள் பெற்றுள்ள வெற்றிகளே இதற்கு காரணம்.
ஆண்கள் அணியைப் போலவே இந்திய பெண்கள் அணியின் முக்கிய பலமும் பேட்டிங்தான். அதிலும் முதல் 3 இடங்களில் பேட்டிங் செய்யும் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக கருதப்படுகிறார்கள்.
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பேட்டிங்கில் 3-வது இடத்தில் உள்ள ஸ்மிருதி மந்தனா, இதுவரை 112 போட்டிகளில் 2,651 ரன்களைக் குவித்துள்ளார். 27.32 ரன்களை சராசரியாக வைத்துள்ள மந்தனாவின் ஸ்டிரைக் ரேட் 123. மைதானத்தில் ஆண்களுக்கு இணையான வேகத்தில் ஆவேசமாக ஆடும் மந்தனா, சில மாதங்களுக்கு முன் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து அவர்களைத் திணறடித்துள்ளார். அதே வேகத்தை தென் ஆப்பிரிக்க மண்ணிலும் காட்டினால் இந்திய அணிக்கு அது மிகப்பெரிய பிளஸ்ஸாக மாறும்.
மந்தனாவுக்கு இணையாக இந்தியா நம்பும் மற்றொரு பேட்டிங் நட்சத்திரம் ஷபாலி வர்மா. சச்சின் டெண்டுலகர் ஸ்டைலில் ஆடக்கூடிய வீராங்கனை. சமீபத்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனான ஷஃபாலி வர்மா, அதே வேகத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றிருக்கிறார். ஐசிசி தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஷஃபாலி வர்மாவின் ஸ்ரிரைக் ரேட் 134.
ஒரு பக்கம் ஷஃபாலியும், மறுபக்கம் மந்தனாவும் தங்கள் முழு திறமையைக் காட்டி ஆடினால் கோப்பை நம்வசம்தான் என்று உறுதியாக நம்புகிரார்கள் இந்திய ரசிகர்கள். இவர்கள் கைவிட்டாலும் இந்திய அணியின் கேப்டனும் ஷேவாக்கப் போன்ற ஆட்ட நுணுக்கத்தைக் கொண்டவருமான ஹர்மன்பிரீத் கவுரின் அனுபவம் நிச்சயம் அணியை கரைசேர்க்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை.
ஆனால் பேட்டிங்கில் இருக்கும் பலம் பந்துவீச்சில் இல்லாமல் போனதுதான் இந்திய அணியின் சோகம். இந்த தொடரைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சில் ஷிகா பாண்டேவைத்தான் இந்திய அணி பெரிதும் சார்ந்துள்ளது. அவரைத் தவிர மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் போதிய அனுபவம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். வேகப்பந்தில் போதிய பலம் இல்லாத சூழலில் தீப்தி சர்மாவின் சுழற்பந்து வீச்சையே இந்தியா அதிகம் சார்ந்திருக்கிரது.
இந்த டி20 உலகக் கோப்பையில் இந்தியா உள்ள பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து ஆகிய அணிகள் உள்ளன. இதில் பாகிஸ்தானும், அயர்லாந்தும் சற்று பலவீனமான அணிகள். அரை இறுதிப் போட்டிக்குள் நுழைய வேண்டுமானால் இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளில் ஏதாவது ஒன்றை இந்தியா பின்னுக்கு தள்ளவேண்டும். அவர்கள் நிச்சயம் அதைச் செய்வார்கள், டி20 உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று எதிர்பார்ப்போம்.