No menu items!

ஈரோடு கிழக்கில் காயத்ரி ரகுராம்

ஈரோடு கிழக்கில் காயத்ரி ரகுராம்

“தேர்தல் கள நிலவரத்தைப் பார்க்க ஈரோட்டுக்கு வந்திருக்கேன். அதனாலதான் ஆபீசுக்கு வரல” என்று டெலிபோன் லைனில் வந்தாள் ரகசியா.

“நானே உன்னை ஈரோட்டுக்கு போகச் சொல்லலாம்னுதான் இருந்தேன். அதுக்குள்ள நீயே போயிட்ட. சபாஷ். ஆமாம் அங்க நிலவரம் எல்லாம் எப்படி இருக்கு?”

“நம்ம வீடு ஈரோடு கிழக்கு தொகுதியில இல்லாம போச்சே… நாம இந்த தொகுதி வாக்காளரா இல்லையேன்னு கவலைப்படற அளவுக்கு செழுமையா இருக்கு. தேவையான விட்டமின்கள் கிடைப்பதால மக்கள் சந்தோஷமா, சுபிட்சமா இருக்காங்க.”

“பொறாமையா இருக்கு போல. ரெண்டு அணியில எந்த அணி உற்சாகமா இருக்கு?”

“ஜெயிக்கறாங்களோ இல்லையோ… இப்போதைக்கு ஓபிஎஸ் அணியை மீறி இரட்டை இலை சின்னத்தை வாங்கினதுல அதிமுககாரங்க உற்சாகமா இருக்காங்க. அது அவங்களுக்கு புது தெம்பு கொடுத்திருக்கு. வேகமா வேலை செய்யறாங்க. அதிமுக தேர்தல் பிரச்சார வியூகங்களை செங்கோட்டையன் வகுக்க, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ரெண்டு ‘மணி’களும் மணியை இறக்கறாங்க. அதிமுக தொண்டர்களோட உற்சாகத்துக்கு அதுவும் ஒரு காரணம்”

“திமுகவுல எப்படி இருக்கு நிலவரம்? எல்லா அமைச்சர்களும் அங்க போயிருக்காங்களே?”

”அதிமுககாரங்க வேகமா வேலை செய்யறது திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு. சமீபத்துல ஒரு மண்டபத்துல வச்சி அதிமுககாரங்க பணம் கொடுக்கறதா திமுககாரங்க புகார் செஞ்சு அந்த மண்டபத்துக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்திருக்காங்க. ரத்தத்தின் ரத்தங்களோட இந்த திடீர் பாய்ச்சலைப் பத்தி உளவுத்துறையும் முதல்வருக்கு ரிப்போர்ட் கொடுத்திருக்கு. அதனால தினமும் காலையில முத்துசாமிக்கு போன் போட்டு தேர்தல் நிலவரத்தை கேட்டுட்டு வர்றாராம் முதல்வர். அதோட சில ஆலோசனைகளையும் சொல்றாராம்.”

“தேர்தல் பிரச்சாரத்துல கலந்துக்காம பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இலங்கைக்கு கிளம்பிட்டாரே?”

“தன்னை முறையா அழைக்கலைங்கிற வருத்தம் அவருக்கு. இந்த நேரத்துல இலங்கை செல்ல வேண்டிய சூழலும் வர, உடனே கிளம்பிட்டார். ஆனாலும் தேர்தல் முடியறதுக்குள்ள அவர் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்வார்னு சொல்றாங்க”

”அதிமுகதான் பல கட்சிகளுக்கு உதவியா இருக்கு. அதிமுக பல கட்சிகளை தாங்கி பிடிச்சிருக்குனு எடப்பாடி பழனிசாமி நெல்லைல பேசியிருக்கிறாரே? பாஜகவைத்தானே சொல்றார்?”

“ஆமாம். ஆனா பாஜக கூட்டணி தொடரும்னும் சொல்லியிருக்கிறாரு அதை கவனிச்சிங்களா?”

“கவனிச்சோம். ஆனா இப்ப எடப்பாடி பேச்செல்லாம் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே”

”உண்மை. ஓபிஎஸ் பிரச்சினை முழுசா முடிஞ்சிருச்சுனு நினைக்கிறார். இனிமே அவருக்கு அதிமுகவுல போட்டி கிடையாதுனு நம்புறார். அதனாலதான் பாஜகவை லைட்டா அட்டாக் பண்ணிக்கிட்டே இருக்கிறார். அண்ணாமலை மட்டுமில்ல பாஜககாரங்க பிரச்சாரமே பண்ணலனா கூட பரவாயில்லைனு நினைக்கிறார். ராதாரவி மாதிரி அதிரடியா பேசற பேச்சாளர்களை பிரச்சாரத்துக்கு அனுப்ப வேண்டாம்னு தமிழக பாஜக தலைமைகிட்ட சொல்லி இருக்கார். இதுவும் பாஜககாரங்களுக்கு வருத்தம். நம்மளுக்கு கட்டளை போடுறாரேனு பேசிக்கிறாங்க. ஆனா எடப்பாடி இதைப் பத்திலாம் கவலைப்படல”

“எடப்பாடி இத்தனை தீவிரமா இருக்கிறதுக்கு என்ன காரணம்?”

“ஈரோடு கிழக்கு தொகுதியில வின் பண்ணிற முடியும்னு நினைக்கிறார். அங்க முதலியார் சமூகத்தினரும் கவுண்டர் சமூகத்தினரும் அதிகம். காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் நாயுடு சமூகத்தை சார்ந்தவர். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா முதலியார் சமூகத்தை சார்ந்தவர். அதனால் கவுண்டர் சமூகத்துக்கு வாக்குகள் முழுமயாக அதிமுகவுக்கு வரும்னும், முதலியார் வாக்குகள் பிரிஞ்சு நாம் தமிழர் பக்கம் வரும். அதனால அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்னு ஒரு சாதிக் கணக்கை போட்டு வச்சிருக்கார். ஆனால் அது ஈரோடு கிழக்கு நகரப்பகுதியை சார்ந்தது. சாதி அடிப்படையில் வாக்குகள் பிரியாதுன்னு உடன்பிறப்புகள் சொல்றாங்க. ஆனால் எடப்பாடி இந்தக் கணக்கை முழுமையா நம்பறார்.”

“ஓபிஎஸ் பிரச்சாரம் செய்வாரா?”

“தேர்தல் ஆணையம் ஓபிஎஸ் அணியோட நட்சத்திர பேச்சாளர் பட்டியலை நிராகரிச்சுடுச்சு. அதனால ஓபிஎஸ் நேரடியா மக்களை சந்திச்சு வாக்குகள் கேக்கறதுக்கு வாய்ப்பு குறைவு. அறிக்கை மட்டும் விடுவார்னு அவரோட ஆதரவாளர்கள் சொல்றாங்க. இப்ப ஓபிஎஸ்ஸோட கவலை ஈரோட்டுல இல்ல. தேர்தல் முடிஞ்சப் பிறகு காய்களை எப்படி நகர்த்துறதுன்றதுதான் அவர் பேசிக்கிட்டு இருக்கிற விஷயம்”

“அவருக்கு பாஜக உதவிக்கு வருமா?”

“டெல்லில பாஜக தலைவர்கள்கிட்ட தூது விட்டுக்கிட்டே இருக்கிறார். ஆனா, ஒபிஎஸ்ஸின் சக்தி அவங்களுக்கு தெரிஞ்சுருச்சு. பழகினவர்ன்ற பாசத்துல மட்டும்தான் அவர்கிட்ட அவங்க பேசிக்கிட்டு இருக்காங்க. மத்தப்படி அவங்களுக்கு ஒபிஎஸ் மேல நம்பிக்கை இல்ல. அது மட்டுமில்லாம பாஜகவே இப்ப குழப்பத்துல இருக்கு”

“என்ன குழப்பம்?”

“அண்ணாமலை மட்டுமில்லாம அவரது வார் ரூம் நண்பர்கள் மீது தமிழ்நாட்டு பாஜகவினருக்கு வருத்தம் இருக்கு. அண்ணாமலையுடன் நெருக்கமா இருக்கும் அமர்பிரசாத் ரெட்டி பத்தி பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் வீடியோக்கள் வெளியிட்டிருந்தார். அதில அமர்பிரசாத் ரெட்டி பத்தி கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்திருந்தார். ஆனால் அடுத்த நாள் காலைல நடந்த அண்ணாமலை பிரஸ் மீட்ல அவர்கூட அமர்பிரசாத் ரெட்டி உட்கார்ந்திருந்தார். இது கட்சிக்காரங்களுக்கு வருத்தம். ஒருத்தர் மீது குற்றச்சாட்டுக்கள் வரும்போது அவர்கிட்டருந்து தள்ளி நிக்கணும்ல. அதை விட்டுட்டு கூடவே வச்சிருக்கார்னு கமலாலயத்துல பேச்சு”

“தீவிர பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் ஏன் அப்படி ஒரு வீடியோ போட்டார்? அது பாஜகவுக்குதானே அசிங்கம்”

“ஆமா. அவரைத் தூண்டிவிட்டது சென்னையை சேர்ந்த ஒரு ஆலோசகர்னு சொல்றாங்க. கட்சி மேலிடம் மாரிதாசை கூப்பிட்டு கண்டிச்சிருக்காங்க. இது மாதிரி பாஜகவினரை குற்றஞ்சாட்டி வீடியோ போடுறது கட்சியோட வளர்ச்சியை பாதிக்கும்னு சொல்லியிருக்காங்க. இனிமே வீடியோக்கள் வராதுனு மாரிதாஸே சொல்லிட்டார்”

”அப்போ அண்ணாமலைக்குதான் வெற்றினு சொல்லலாமா?”

“இப்போதைக்குனு இரு வார்த்தை சேர்த்துக்குங்க” சிரித்தாள் ரகசியா.

“அண்ணாமலை தரப்பு நிலவரம் என்ன?”

“அவங்க இதைப் பத்தியெல்லாம் கவலைப்படல. நாடாளுமன்றத் தேர்தலைப் பத்திதான் கவலைப்படறாங்க. அதுக்காக நிதி திரட்டக்கூட ஆரம்பிச்சிருக்காங்க.”

“அப்படியா?”

“ஆமாம். ஒவ்வொரு நிர்வாகிளுக்கும் அவங்களோட தகுதிக்கு ஏற்ப 25 லட்சத்துல இருந்து 1 கோடி ரூபாய் வரைக்கும் டார்கெட் பிக்ஸ் பண்ணி இருக்காராம் அண்ணாமலை. இதுக்காக தொழிலதிபர்கள், திரையுலக பிரமுகர்கள் கிட்ட நிர்வாகிகள் நிதி திரட்டிட்டு இருக்காங்க. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை எல்லாம் பாஜக கையில இருக்கேங்கிற பயத்துல அவங்களும் பணத்தை அள்ளிக் கொடுக்கறாங்களாம். பொதுவா தமிழக பாஜகவுக்கு எப்பவும் டெல்லியில இருந்துதான் பணம் வரும். ஆனா இங்கயே பெரிய அளவுல வசூல் பண்றது இதுதான் முதல் முறை, இது அண்ணாமலை சாதனைனு பாஜககாரங்க காலரை தூக்கிவிட்டுக்கிறாங்க”

“இடதுசாரி கட்சிகள் மேல திமுக வருத்தத்துல இருக்கறதா சொல்றாங்களே?”

“எல்லாத்துக்கும் பேனா நினைவுச் சின்னம்தான் காரணம். கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னத்தை நிச்சயம் அமைக்கணும்னு முரசொலியில திமுக தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட்டு வருது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, திக போன்ற கூட்டணிக் கட்சிகளும் இதை ஆதரிச்சு பேசிட்டு வர்றாங்க. ஆனா .கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பாலகிருஷ்ணன் தற்சமயம் பேனா நினைவுச் சின்னம் தேவைதானா என்ற கேள்வி எழுந்துள்ளதுன்னு ஒரு கருத்தை சொல்லி இருக்கார். இதை திமுக ரசிக்கலை. அதனால அவங்க மேல கோபமா இருக்காங்க. இன்னொரு சர்ப்ரைஸ் நியூஸ் சொல்றேன் கேட்டுக்குங்க”

“என்ன சர்ப்ரைஸ் நியூஸ்?”

“ஈரோடு கிழக்கு தேர்தல்ல காயத்ரி ரகுராம் பரப்புரை செய்யப் போறாங்க, திமுகவுக்காக”

”நம்புற மாதிரி இல்லையே. அவங்க இப்ப கூட கலைஞர் பேனா நினைவு சின்னத்துக்கு எதிரா கருத்து தெரிவிச்சிருக்காங்களே?”

“திமுகனு நேரடியா பேசலனாகூட பாஜவில் தனக்கு ஏற்பட்ட அவமானங்களை பேசுங்கனு ஒரு குரூப் அவங்களைப் போய் கேட்டிருக்கு. அவங்களும் சம்மதிச்சிருக்காங்கனு காதுல விழுந்தது. அதை உங்ககிட்டயும் சொல்லி வச்சேன்.”

“பார்ப்போம் என்ன நடக்குதுன்னு”

லைனை கட் செய்தாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...