No menu items!

மத்திய பட்ஜெட் 2023 – Income Tax மாற்றங்கள் பலனளிக்குமா?

மத்திய பட்ஜெட் 2023 – Income Tax மாற்றங்கள் பலனளிக்குமா?

இன்று வெளிடப்பட்ட மத்திய பட்ஜெட் பல அம்சங்களில் கவனிக்கப்பட வேண்டிய பட்ஜெட்.

இந்த பட்ஜெட்தான் பாஜகவின் இந்த ஆட்சிக் காலத்தில் கடைசி பட்ஜெட். 2024ல் பொதுத் தேர்தல் வருவதால் அந்த ஆண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய இயலாது.

இந்த பட்ஜெட்தான் 2024 பொதுத் தேர்தலுக்கு முன் வரும் முழுமையான பட்ஜெட்.

இந்த பட்ஜெட் நிர்மலா சீதாராமன தாக்கல் செய்யும் ஐந்தாவது பட்ஜெட். தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த பட்ஜெட்தான் கொரோனா நெருக்கடி சூழல் இல்லாத பட்ஜெட்.

இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் உண்டு.

இரண்டு வருடங்கள் கொரோனா பொது முடக்கத்தினால் பல பாதிப்புகள். வருமானமின்மை, தொழில் நஷ்டங்கள், வேலையில்லாமை, விலையேற்றங்கள்..இப்படி பல சிக்கல்களுடன் தான் சாமானிய மக்களின் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.

2023 பட்ஜெட் பொதுத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட்டாக இருப்பதால் அதில் பல சலுகைகள், வசதிகள் கிடைக்கும் என்பதுதான் எளிய மக்களின் எதிர்பார்ப்புகளாய் இருந்தன.

நேற்று பட்ஜெட் கூட்டத் தொடர் துவக்கத்துக்காக நாடாளுமன்றம் வந்திருந்த பிரதமர் மோடி அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘மந்தமான சர்வதேச பொருளாதார சூழலுக்கு நடுவே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பூர்த்தி செய்வார் என நம்புகிறேன். குறிப்பாக பொதுமக்களின் விருப்பம் மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்வதாக பட்ஜெட் அமையும்’ என்று குறிப்பிட்டார்.

அவர் குறிப்பிட்டபடி பொதுமக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்ததா?

சாமானிய மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியிருக்கிறதா?
பார்ப்போம்.

வருமானவரிக்கான பான் அடையாள அட்டையை இனி எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம்.

மொபைல் போன், உள்ளூரில் தயாரிக்கப்பட்ட டிவி பெட்டிகள் விலை குறையும். ஏனென்றால் இவற்றின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டிருக்கிறது.

லித்தியம் பேட்டரி விலைகள் குறையும்.

தங்கம், வைரம், வெள்ளி பொருட்களின் விலை உயரும். அவற்றின் இறக்குமதிக்கான வரிகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

வரிகள் அதிகரிக்கப்பட்டிருப்பதால் துணி விலை அதிகரிக்கும்.

சிகரெட் விலை அதிகரிக்கும்.

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலை குறித்த்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை.

எளிய மக்கள் அதிகம் எதிர்பார்த்திருந்தது தனி நபர் வருமானவரி குறித்த மாற்றங்களை.

அதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

2020 ஆண்டு முதல் நமது நாட்டில் இரு விதங்களில் – பழைய முறை, புதிய முறை என்று – தனி நபர் வருமானவரி வசூலிக்கப்படுகிறது.

பழைய முறையில் நமது வருமானத்துக்கு வரும் வரிகளை 80சி போன்ற சில சேமிப்பு முறைகள், வீடு கட்ட கடன்கள், வாடகை போன்ற சில அம்சங்கள் மூலம் வருமானவரி விலக்குகளையும் கழிப்புகளையும் சலுகைகளையும் பெற முடியும்.

ஆனால் புதிய முறையில் அது போன்ற அம்சங்கள் கிடையாது. ஒவ்வொரு வருமானத்துக்கும் ஒரு வரி என்று பிரிக்கப்பட்டது. பல அடுக்குகளில் வருமானங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அடுக்குக்கும் ஒரு வரி என்று வசூலிக்கப்படும். இதில் விலக்குகள், கழிப்புகள் கிடையாது.

இது கணக்கிட வசதியாகவும் எளிதாகவும் இருக்கும். மக்களுக்கும் சாதகமாக இருக்கும் என்று அப்போது சொல்லப்பட்டது.

இந்த இரண்டு முறைகளில் எந்த முறையில் வேண்டுமானாலும் இணைந்துக் கொள்ளலாம் என்று அப்போது கூறப்பட்டது.

இந்த பட்ஜெட்டில் புதிய முறைதான் இயல்பானது (Default) என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பழைய முறையில் தொடர விரும்புகிறவர்கள் தொடரலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் வருடத்துக்கு 7 லட்சம் வரை சம்பாதிக்கிறவர்களுக்கு வரி இல்லை என்று வரி அடுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. முன்பு ஐந்து லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் வருமானவரி கிடையாது என்று இருந்தது.

பழைய வரிமுறையில், வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2.50
லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வரி இல்லை.

வருடத்துக்கு 3 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு 5 சதவீத வரி.
வருடத்துக்கு 6 – 9 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் 10 சதவிகித வரி செலுத்த வேண்டும்.
வருடத்துக்கு 9 – 12 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் 15 சதவிகித வரி கட்ட வேண்டும்.

12 முதல் 15 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களுக்கு 20 சதவிகித வரி விதிப்பு.
15 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் 30 சதவிகித வரி கட்ட வேண்டும்.
இதுதான் இன்று அறிவிக்கப்பட்டுள்ள தனி நபர் வருமானவரியின் அளவுகள்.

இந்த பட்ஜெட்டில் வருமானவரியின் புதிய முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது.

ஆனால் இந்தப் புதிய முறை அதிகரித்தால் மக்களின் சேமிப்பு மனப்பான்மை மாறிவிடும், இது நாட்டுக்கு நல்லதல்ல என்று பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள்.

பழைய வருமான வரியில் எல்.ஐ.சி.யில் பணம் சேமித்தாலோ, வீடு வாங்கி கடன் அடைத்துக் கொண்டிருந்தாலோ, கல்விக் கடன் கட்டிக் கொண்டிருந்தாலோ அல்லது வேறு வழிகளில் பணத்தை சேமிப்புக்காக முதலீடு செய்தாலோ வருமானவரியிலிருந்து விலக்கோ கழிப்போ பெற முடியும்.

இந்த விலக்கையும் கழிப்பையும் பெற்று வருமானவரி அதிகரிப்பை தவிர்க்க மத்தியவர்க்க மக்கள் ஏதாவது ஒன்றில் சேமிப்பார்கள்.

ஆனால் புதிய நடைமுறையில் இந்த கழித்தல், விலக்கல், நீக்குதல் இல்லாமல் குறிப்பிட்ட வருவாய்க்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் கட்ட வேண்டும் என்று ஒற்றை அம்சத்தில் இருப்பதால் மக்களுக்கு சேமிப்பு பழக்கம் குறையும் என்ற அச்சத்தை பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்திய பொருளாதாரம் சேமிப்பு பொருளாதாரம் என்று நீண்டகாலமாகவே அறியப்படுகிறது.

ஆனால் அந்த நிலையை மாற்றி சேமிப்பு பொருளாதாரத்திலிருந்து செலவழிக்கும் பொருளாதாரமாக மாற்றுவதற்காக முயற்சிகளில் ஒன்றாக இந்த மாற்றத்தைப் பார்க்கலாம்.

மக்கள் அதிகமாக செலவழித்தால் பொருட்கள் அதிகமாய் வாங்கப்படும். உற்பத்தில் அதிகமாகும். உற்பத்தி அதிகரிக்க வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். பணம் சுழற்சியிலேயே இருக்கும். பொருளாதாரம் அதிகரிக்கும் என்றொரு வாதமும் வைக்கப்படுகிறது.

செலவழிக்கும் பொருளாதாரத்தின் பயன் மக்களுக்கு சேராது முதலாளிகளுக்குதான் சேரும் என்று அதற்கு எதிர்வாதமும் உண்டு.

எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் சாமானிய மக்களுக்கு இந்த நிதி நிலை அறிக்கையில் மகிழ்ச்சிக்குரிய விஷயங்கள் அதிகமில்லை என்பதுதான் நிதர்சனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...