No menu items!

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துக்கு பிடித்த கவிஞர்!

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துக்கு பிடித்த கவிஞர்!

கருணாகரன்

புலிகளின் கலை பண்பாட்டுத்துறைக்குப் பொறுப்பாக இருந்தவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை. புதுவை, கவிஞர் மட்டுமல்ல நல்லதொரு சிற்பக் கலைஞரும் கூட. அவர் செய்த தேர்கள் இலங்கையின் பல இடங்களிலும் உண்டு. சிலாபம் – முன்னேஸ்வரம், நயினாதீவு, புங்குடுதீவு போன்ற இடங்களில் உள்ள கோயில்களில் சிறப்பாக தேர்த் திருவிழாவில் ஓடுகின்றன. பரம்பரையாகவே மரச் சிற்பங்களைச் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், சிறிய வயதிலேயே இந்தவகைச் சிற்பங்களைச் செய்வதில் தேர்ச்சியடைந்திருந்தார் புதுவை.

இதற்கப்பால் அவர் எல்லோரையும் கவர்ந்திழுக்கும் பேச்சாளரும்கூட . நண்பர்களோடு பேசும்போதும் சரி, அரங்கிலே – மேடையிலே பேசும்போதும் சரி, இயக்கப் பரப்புரைக்கான பேச்சுகளின்போதும் சரி பேச்சை அற்புதமான கலையாக வெளிப்படுத்தத் தெரிந்த கலைஞர். அவர் பேசும்போது அதில் வெளிப்படும் தொனியே ஆட்களைக் கட்டிப்போட்டுவிடக் கூடியது. கரகரத்துத் தடித்த குரலையும் மீறியது அதன் ஈர்ப்பு. பார்வையாளர்கள், பேச்சின் தொனிக்கு ஏற்ற மாதிரி ஏற்றி இறக்கிப் பேசி நகைச்சுவையையும் கலந்து பின்னி வெளுத்து விடுவார் மனுசன். இதனால் இலக்கியமோ அரசியலோ எதுவாக இருந்தாலும் அதைச் சுவையாகப் பார்வையாளரிடத்திலே பகிர்வதில் வல்லவராக இருந்தார் புதுவை.

புதுவை பேசும்பொழுது அவர் தன்னை வெளிப்படுத்துகின்ற முறையை ஆர்வம் குறையாமற் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். உடல் மொழியும் பேசும் தொனியும் ஒன்றிலொன்றாகக் கலந்து நாடகக் காட்சியொன்று நிகழ்வதைப் போலிருக்கும். அப்படிச் சிறப்பாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார். இதை அவர் தன்னுடைய இளமைப் பருவத்தில், அரசியல் அரங்குகளில் பெற்றிருக்கக் கூடும். புதுவையின் இளமைக்காலம் (பதின்பருவத்திலேயே) இடதுசாரிய அரசியலில் கலந்திருந்தது. புதுவை, தமிழ்நாட்டில் இருந்திருந்தால் திண்டுக்கல் லியோனி, சாலமன் பாப்பையா, ராஜா, கு. ஞானசம்மந்தன் போன்றவர்களெல்லாம் புதுவையின் தலைமையில்தான் பேச்சுத் திருவிழா, கதைப்போம் பேசுவோம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம் போன்ற நிகழ்ச்சிகளையெல்லாம் செய்து கொண்டிருப்பார்கள்.

அப்படித்தான் புதுவை கவிதை வாசிக்கும்போதும். நேரிலே நின்று கேட்டவர்களுக்குத் தெரியும் அதனுடைய அழகும் அருமையும். கவிதையைக் கேட்பவர்கள் அதனோடு கலந்து கரைந்துகொள்ளக் கூடிய அளவுக்கு அத்தனை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்துவார். அதற்கேற்ற வடிவத்திலேயே – மொழியிலே அவருடைய கவிதைகளிருக்கும். இதனால்தான் புதுவையின் கவிதைகள் பொதுவுடமை அரங்குகளிலும் உச்சத்திலிருந்தன. தமிழ்த் தேசிய – போராட்ட அரங்குகளிலும் உச்சத்திலிருந்தன.

‘நேற்று நாம் பேசா வூமை
நோயர்கள், ஆனாலின்று
காற்றைப்போற் கிளர்ந்தெழுந்து
காரியம் முடிக்க வல்ல
கூற்றுவர், சுரண்டி வாழும்
கும்பலை அரைத்துத் தின்னும்
மாற்றத்தை விரும்பி வந்த
மாபெரும் உழைப்பாளர்கள்…’

இது பொதுவுடமைக்காலக் கவிதை.

‘மான் சுட்டால் அன்றி
மரை சுட்டால், மயில் சுட்டால்
ஏன் என்று கேட்க இந்நாட்டில் சட்டமுண்டு
மாடடித்தல் கூட, மறைவான ஓரிடத்தில்
சாகடிக்க வேண்டுமெனச்
சட்டத்தில் இடமுண்டு.
கொக்குச் சுடுதல் குற்றம்
பயிரழித்து
திக்கெட்டும் நடந்து திரிகின்றன ஆனையினை
சுட்டால், அது குற்றம்
‘சுதந்திர பூமியிலே’
சட்டம் இதற்கெல்லாம் தண்டிக்கும்;
தண்டிக்க வேண்டியதே.
நாய்பிடிக்கக் கூட நகரசபைக் காரர்கள்
நீ பிடிக்கலாமென்று நியமனங்கள் செய்துள்ளார்
மானுக்கு, மாட்டுக்கு
மரையோடு, மயிலுக்கு
ஆனைக்குக் கூட அனுதாபப்படும் நாட்டில்
மனித உயிர் மட்டும் மலிவு
மிக மலிவு.
கேட்க வொரு நாதி
கிளர்ந்தெழும்ப ஒரு கூட்டம்
மீட்க வொரு இயக்கம்
மூச்சுவிட ஒரு கவிஞன்
கட்டாயம் தேவை, இது
காலத்தின் குரலாகும்…’

இது தமிழ்த்தேசியப் போராட்டக் கவிதை.

அரசியற் கவிதையில் – அரங்கக் கவிதையில் – புதுவை பெரிய வெற்றியாளரே. அவர் காலத்தில் அரங்கிலே கவிதையாடிய சில்லையூர் செல்வராஜன், முருகையன். சுபத்திரன், சுவே போன்றோருக்கு நிகராக அன்றைய இளைஞர் புதுவையும் இருந்தார். புதுவை கவிதையை வாசிக்கும் முறையும் அதைப் பார்வையாளர்களிடத்திலே கலந்து விடும் விதமும் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்திருந்தது.

ஒரு காலம் புதுவையின் கவிதையைக் கேட்பதற்காகப் பத்து, இருபது மைல்களுக்கு அப்பாலிருந்து சைக்கிள் மிதித்துக் கூடப் பயணித்தவர்களுண்டு. அந்தளவுக்கு அவருடைய அரங்கக் கவிதைகளுக்குத் தனியான ரசிகர் கூட்டமே இருந்தது. இப்படித்தான் ஒரு தடவை கண்டி – பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச் சங்கத்திற் புதுவையின் கவிதையைக் கேட்பதற்காக பிரபாகரனே இரகசியமாகச் சென்றிருக்கிறார்.

பிறகொருபோது அவருடைய கவிதை வாசிப்பில் ஒரு ஒலிப்பேழை இந்தியாவிலிருந்து தயாரித்து வெளியிடப்பட்டது. அது முழுதுவதும் புதுவையின் குரலில் வாசிக்கப்பட்ட போராட்டக் கவிதையாகவே இருந்தது.

இதைப்போல புதுவை இருக்குமிடமெல்லாம் பெரும் கொண்டாட்டமாகவே இருக்கும். பகிடியும் பம்பலுமாகக் கலகலத்துக் கொண்டிருப்பார். அந்தப் பகடி ஒன்றும் கேட்டுச் சிரிப்பதற்கானவை மட்டுல்ல. ஒரு வகையில் அது அவருடைய ஆயுதம். கவிதையை தனக்கான ஆயுதமாகப் பயன்படுத்த விளைந்ததைப்போலவே பகடிகளையும் அவர் ஆயுதமாக்கியிருந்தார். கவிதைகளில் எதிர்த் தரப்பை, அதிகாரத்தை, ஒடுக்குவோரைச் சாடினால், எதிர்த்தால், விமர்சித்தால் பகடியில் தான் சார்ந்த தரப்பை, கட்சியை அல்லது அமைப்பை விமர்சனம் செய்தார். கிண்டலடித்தார். ஆனால், இதை அவர் சினேக விமர்சனமாகவே செய்தார். இதனால், அவருடைய பகடிகள் எப்போதும் இன்னொரு வகையில் இன்னொரு அதிகாரத்தைக் கேலிப்படுத்துவதாக, கிண்டலடிப்பதாக, பேசமுடியாத, பேசத்தயங்குகிற உண்மைகளைப் பேசத் துடிப்பவையாக இருக்கும். இதற்காகவே அவரைச் சுற்றிக் கொள்ளும் ஒரு கூட்டம். அவர் இடதுசாரிய இயக்கத்தில் இருந்தபோதும் இந்தப் பண்பைப் பேணினார். விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த போராளியாக – பொறுப்பாளராக இருந்த போதும் இதைத் தொடர்ந்தார். இது அமைப்பில் உள்ளவர்கள் தாம் பேசமுடியாதிருக்கிற உண்மைகளைத் திறந்து பேசுவதற்கு தம்மிடையே ஒரு ஆளிருக்கிறார் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பின் ருசியாக இருந்தது.

புதுவையின் இந்தக் குணவியல்பை அவரோடு பழங்கியவர்களும் நண்பர்களும் ஏன் அமைப்பின் – இயக்கத்தின் தலைவர்களும் நன்றாக அறிவர். இதுதான் புதுவையோடு பலரை நெருக்கமாக்கியது. அவரை எதிர்க்கவும் முடியாது, முழுதாக அணைத்துக் கொள்ளவும் முடியாது. அப்படியான ஒரு வேறுபட்ட பாத்திரமாக இருந்தார். அவருக்கு எல்லா நிலையிலுள்ளவர்களும் எல்லா வயதினரும் நண்பர்களாக இருந்தனர். அதேயளவுக்கு அவரை முகம் கொள்ள முடியாதவர்களுமிருந்தனர்.

நானறிந்த வரையில் துக்கம், சோர்வு, அயர்ச்சி, தடுமாற்றம் என்பதெல்லாம் அவரை நெருங்க முடியாது. சிலவேளை ஏதாவது சோர்வு ஏற்பட்டாலும் அது ஒரு கணம்தான். அதை உதறிக் கொண்டு எழுந்து விடுவார். எப்போதும் உற்சாகமாகவே இருப்பார். மிக நெருக்கடியான யுத்த கால நெருக்கடியை – வாழ்க்கையைச் சந்தித்துக் கொண்டிருக்கும்போதும் புதுவையின் கலகலப்பிற்குப் பஞ்சம் இராது. இரண்டு பேர் சந்தித்தால் போதும், அந்த இடத்தை மகிழ்களமாக்கி விடுவார். ஆனாலும், அவரைக் கரும்புகை மூட்டம்போலப் பல தடவை துயரம் சூழ்ந்ததுண்டு. சோர்வு மூடப்பார்த்தது. அப்போதெல்லாம் பாரதி சொல்வதைப்போல ‘வீழ்வேன் என்று நினைத்தாயோ’ என்று எழுந்தே நின்றிருக்கிறார். இதுதான் புதுவையின் பலமும் அடையாளமும்.

இந்த மாதிரியான விசயங்கள்தான் புதுவை மீது ஈடுபாடு ஏற்படுவதற்கு புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துக்கும் காரணமாகின. முதலாவது காரணம், புதுவையின் பம்பலும் பகிடியுமான பேச்சிலுள்ள கூரான உள் விமர்சனங்களாகும். இந்தப் பகிடியிலும் பம்பலிலும் இயக்கத்தைப் பற்றிய விமர்சனங்களை மெல்லச் செய்து விடுவார் புதுவை. அப்படியே இயக்கப் பொறுப்பாளர்களைப் பற்றியும்.

இரண்டாவது புதுவை வெற்றிலை போடும் லாவகம். இயக்கத்திலேயே அவருக்கு மட்டும்தான் வெற்றிலை போடுவதற்கான சிறப்பு அனுமதியிருந்தது. அவருடைய கவிதைகளைப்போல அதையும் ஒரு கலையாகவே செய்வார் புதுவை. முதலில் வெற்றிலையை எடுத்து அதன் நுனியையும் காம்பையும் கிள்ளிச் சீராக்குவார். பிறகு பாக்குச் சீவலை எடுத்துத் துப்புரவாக்கி உள்ளங்கையில் அதைத் தொகுத்துக் கொள்வார். அப்படித் தொகுத்த சீவலை ஒரு பந்தை எறிவதைப்போல வாயிலே போட்டுக் கொள்வார். (ஒரு காலம் சிகரட்டை இந்த மாதிரித்தான் ரஜனிகாந்த் எறிந்து விளையாடினார் என்பது உங்களுக்கு நினைவிருக்கும்). பாக்கினை மென்றபடியே கையிலிருக்கும் வெற்றிலையில் அதன் நரம்புகள் ஒவ்வொன்றும் சில்லிடும் அளவுக்கு சுண்ணாம்பை கழிம்பு தடவுவதைப்போல லாவகமாகத் தடவுவார். சுண்ணாம்பேற்றிய வெற்றிலையைப் பக்குவமாக மடித்து வாயிலே ஸ்டைலாகச் சொருகிக் கொண்டு பேசத் தொடங்குவார். பேச்சு உச்சத்திற்குச் செல்லும்போது வெற்றிலைச் சிவப்பில் புதுவையின் முகம் மேலும் சிவந்து பொலியும்.

இதையெல்லாம் ஒவ்வொரு முறையும் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருப்பார் பாலசிங்கம். பாலசிங்கம் வெற்றிலைக்கு நேர்மாறான ஆள். அவர் புல்லாங்குழல்காரன். சிகரட் பிரியர்.

புதுவையின் சமூக விமர்சனம், இயக்க விமர்சனம், அரசியல் விமர்சனம் எல்லாம் பாலசிங்கத்துக்கு விருப்பமான ஒன்று. தன்னுடைய மனசில் படுவதையெல்லாம் அப்படியே வெளிப்படுத்தி விடுவார் என்பதால் சமூக நிலை என்ன? சமூகத்தின் உணர்நிலை என்ன என்று அறிவதற்கான வாசலாகப் புதுவையைப் பாலசிங்கம் கருதினார். இது புதுவைக்கும் பாலசிங்கத்துக்கும் இடையிலான நட்பை ஆழமாக்கியது. புதுவையினுடைய இந்த மாதிரியான இயல்புகளால் அவருக்குச் சில சந்தர்ப்பங்களில் நெருக்கடிகள் ஏற்பட்டதுமுண்டு. விளக்கம் குறைந்தவர்கள் குறைப்புரிதலோடு புதுவையைத் தவறாக விளங்கினார்கள். அவர் போராட்டத்தை விமர்சிக்கிறார். சமூகத்தை விமர்சிக்கிறார். இயக்கத்தைக் குறைகூறுகிறார் என்றெல்லாம் கருதினார்கள். என்றாலும் இதற்காக அவர் தன்னுடைய இயல்பை ஒரு போதும் மாற்றிக் கொண்டதுமில்லை. கதையைக் குறைத்துக் கொண்டதுமில்லை. இதேவேளை புதுவைக்குப் பல சந்தர்ப்பங்களிலும் பாலசிங்கம் ஊக்கமாகவும் கவசமாகவும் இருந்திருக்கிறார்.

புதுவை அறியப்பட்ட பெருங்கவிஞராக இருந்தாலும் அவருடைய கவிதைகளைக் குறித்து பாலசிங்கம் அதிகமாகப் பேசியதில்லை. ஆனால், அவருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார். எழுச்சிப் பாடல்களில் புதுவை அப்பொழுது கொடி கட்டிப்பறந்தார். களத்தில் கேட்கும் கானங்கள் தொடக்கம் ஏறக்குறைய நானூறு பாடல்களுக்கு மேல் எழுதியிருப்பார் புதுவை. ஈழத்தில் உள்ள சாந்தன், சுகுமார், சிட்டு, வர்ணராமேஸ்வரன். திருமலைச் சந்திரன், நிரோஜன் தொடக்கம் தமிழகப் பாடகர்களான டி.எம். சௌந்தரராஜன், ஜெயச்சந்திரன். எஸ்.பி. பாலசுப்பிரமணியம், தேனிசை செல்லப்பா, பி. சுசீலா, வாணி ஜெயராம், மனோ, ரி.எல்.மகாராஜன், ஸ்வர்ணலதா எனப் பலர் புதுவையின் பாடல்களைப் பாடியுள்ளனர். புலிகளின் மாவீர் துயிலுமில்லங்களில் ஒலிபரப்பப்படும் –

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! – இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் – அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்

என்ற பாடலைக் கூட புதுவையே எழுதியிருந்தார்.

இந்தப் பாடல்களையெல்லாம் ரசித்துக் கூறுவார் பாலசிங்கம். புதுவை மீதான பிடிப்புக்கு இவையும் ஒரு காரணம்.

ஆனால், பிரபாகரனுக்குப் புதுவையின் கவிதைகளில் பெரிய ஈர்ப்புண்டு. புதுவையைச் சந்திக்கும்போதெல்லாம் அவருடைய கவிதைகளைப் பற்றிப் பேசாமல் விட்டதில்லை அவர். இயக்கத்தைப் பற்றி புதுவை கிண்டலடிக்கிறார், மெல்லிதாக விமர்சிக்கிறார் என்பதெல்லாம் பிரபாகரனுக்கும் தெரியும். ஆனாலும் அதையெல்லாம் அவர் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அதற்கும் மேலாகப் புதுவையின் கவிதைகளின் மீதும் பாடல்களின் மீதும் பிரபாரகனுக்குப் பிடிப்பும் மதிப்புமிருந்தது. அது புதுவை புலிகளுடன் இணைவதற்கு முன்பே பிரபாகரனுக்கு ஏற்பட்டது. இதைப் பிரபாகரனே பல சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார். புதுவையின் அரங்கக் கவிதையைக் கேட்பதற்காக ஒரு தடவை தான் பல சிரமங்களின் மத்தியில் பயணம் செய்து சென்றதாக. அது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச்சங்கம் நடத்திய கவியரங்கு. அப்பொழுது சீன சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக இருந்தார் புதுவை.

புதுவையின் கவிதை வாசிப்பை அரங்கில் பார்த்த பிரபாகரன் நினைத்தாராம், தன்னுடைய இயக்கத்திற்கு இந்த மாதிரி ஒரு கவிஞன் கட்டாயம் தேவை என்று. ஏழெட்டு வருசத்துக்குள் புதுவையே புலிகள் இயக்கத்தில் – பிரபாகரனோடு – இணைந்துவிட்டார்.

பின்னாட்களில் தாக்குல்கள் ஏதாவது வெற்றியாக நடந்தால் உடனே புதுவைக்குச் சேதி போகும். அந்த வெற்றியைப் பதிவாக்கவும் கொண்டாடவும் எனப் பாடல்களை உருவாக்குங்கள். அப்பொழுதான் போராளிகளுக்கும் சனங்களுக்கும் உற்சாகமாக இருக்கும் என.

அதை வைத்து சில நாட்களில் ஒரு இசைப்பேழையை உருவாக்கி வெளியிட்டு விடுவார் புதுவை. இப்படிக் கலை, பண்பாட்டுக்கழகம் பல இசைப்பாடல் ஒலிப்பேழைகளையும் இறுவெட்டுக்களையும் வெளியிட்டது. புலிகளின் இராணுவ நடவடிக்கைகள், கரும்புலித் தாக்குதல்கள் போன்றவற்றுக்கெல்லாம் பாடல்கள் உருவாக்கப்பட்டன. ஏன், புலிகளால் இலங்கை விமானப்படையின் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போதும் புதுவையின் பாடல்கள் காற்றில் ஒலித்தன. எல்லாவற்றையும் புதுவையே பொறுப்பாக நின்று செய்வார். இந்தப் பணிகளுக்காகக் கூடுகின்ற போராளிகளும் கலைஞர்களும் புதுவையின் அங்கதப் பேச்சுக்களைக் கேட்டு வயிறு குலுங்கச் சிரிப்பார்கள். ஒரு விழாக்காலச் செயற்பாடு போல அதை ஆக்கி விடுவார் இரத்தினதுரை. அவர்களுக்கும் புதுவை வைக்கும் விமர்சனங்களில் உள்ளுரப் பெரிய ஈர்ப்புண்டு.

2002இல் ஏற்பட்டிருந்த அமைதிச் சூழலில் புதுவை இரத்தினதுரை பொறுப்பு வகித்த விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் மானுடத்தின் தமிழ்க் கூடல் என்றொரு கலை, இலக்கிய நிகழ்வை யாழ்ப்பாணத்தில் நடத்தியது. இதற்கு தமிழ் நாட்டிலிருந்து தொல் திருமாவளவன், கவிஞர் இன்குலாப், ஓவியர் மருது, எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், திரைக்கலைஞர் புகழேந்தி போன்றோர் வந்திருந்தனர். அவர்களை பிரபாகரனுக்கும் பாலசிங்கத்துக்கும் அறிமுகம் செய்து வைத்தார் புதுவை.

பாலசிங்கத்தின் வாசிப்பும் இலக்கிய ஈடுபாடும் வேறானது. அவருடைய முதல் தெரிவு தத்துவம். அவர் மேற்படிப்புப் படித்ததும் தத்துவத்தில்தான். இதனால் ஹெகல், மாக்ஸ், நீட்ஸே, ஃபூக்கோ, தெரிதா, அல்தூசர் என்று நீண்ட வரிசையில் நோம் சோம்ஸ்கி வரை அத்தனை பேரையும் வாசித்திருக்கிறார். இவர்களுடைய உலகியல், பிரபஞ்சவியல், சமூகவியல், உளவியல் அடிப்படைகளை மையப்படுத்தி ‘வெளிச்சம்’ இதழில் ஒரு தொடரை எழுதினார் பாலசிங்கம். அவர் திட்டமிட்டவாறு அந்தத் தொடரை முழுதாக எழுத முடியவில்லை. எழுதிய தொடர் கட்டுரைகள் பின்னர் ‘விடுதலை’ என்ற பேரில் ஒரு புத்தகமாக வெளியாகியுள்ளது.

இலக்கியத்தில் ஆங்கிலத்திலேயே கூடுதலாக வாசித்தார் பாலசிங்கம். அவருடைய புத்தகச் சேகரிப்புகளும் அந்த வகையிலேயே இருந்தது. தமிழில் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஜெயகாந்தன், எஸ்.பொ, புதுமைப்பித்தன் ஆகியோரில் ஈடுபாடுண்டு. கவிதைகளில் பிரமிள் என்ற தருமு சிவராமின் கவிதைப் போக்கிலே ஆர்வம்.

புதுவையின் கவிதையைக் குறித்து பாலசிங்கத்தின் மதிப்பீடு என்ன என்று தெரியாது. அவற்றை எந்த மாதிரிப் பார்த்தார் என்றும் புரியவில்லை. ஆனால், புதுவை ஒரு மக்கள் கவிஞர் என்ற எண்ணம் எப்போதும் பாலசிங்கத்திடமிருந்தது. அதை அவர் வெளிப்படையாகவே சொல்லியுமிருக்கிறார். ‘அரசியல் போராட்டத்தின்போது பங்களிக்கும் கவிஞர்கள் உலகெங்கும் இருந்திருக்கினம். அந்தப் பண்பாட்டைச் சேர்ந்தவர்தான் புதுவையர்’ என்று.

ஈடுபாடுகளால் வேறுவேறாக இருந்தாலும் உள்ளுணர்வினால் ஒருவருக்கொருவர் நெருக்கமாகியிருந்த இரண்டு ஆளுமைகள் பாலசிங்கமும் புதுவை இரத்தினதுரையும். ஒருவரை ஒருவர் இடையீடு செய்து வாழ்ந்த காலம் ஒன்று இருவருக்குமிருந்தது. அதன் நிழற்தடங்கள் இருவருடைய பதிவுகளிலும் உண்டு. அவற்றைக் கண்டுணரக் கூடியவர்கள் வரும்போது புதிய வெளிச்சம் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...