ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில், சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, தன் கடின உழைப்பு, விடா முயற்சியால் தொழில் துறையில் உச்சத்தை அடைந்தவர், ஏ.வி. வரதராஜன். கொங்கு மண்டலத்தின் தொழில்துறை சாதனையாளர்களில் முக்கியமானவராக இன்று அறியப்படுபவர். சுமார் 3,000 பணியாளர்களைக் கொண்டுள்ள ஏ.வி.வி. குரூப் தொழில் நிறுவனமும் கோவை கொடிசியாவும் இவரது சாதனைகளுக்கு சாட்சிகள். ‘வாவ் தமிழா’ யு டியூப் சேனலுக்கு ஏ.வி. வரதராஜன் அளித்த பேட்டி இங்கே.
இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருவதாக சமீப புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே வருகிறது. விரைவில் மக்கள் தொகையில் சீனாவை நாம் மிஞ்சிவிடுவோம். எனவே, கோடிக்கணக்கான வேலைகள் நமக்கு தேவை. உங்கள் புத்தகம் தலைப்பையே கேள்வியாக கேட்கிறோம், கோடிக்கணக்கான வேலைகள் சாத்தியமா?
இந்தியாவில் இப்போது மட்டுமல்ல சுதந்திரம் வாங்கியதில் இருந்தே வேலை வாய்ப்பின்மை ஒரு பிரச்சினையாக இருந்துகொண்டே இருக்கிறது. அனாலும், கோடிக்கணக்கான வேலைகள் சாத்தியம்தான். அதேநேரம், அது ஒரு நாளில் நடந்துவிடாது. கொஞ்சம் கொஞ்சமாக அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். மக்களிடையே வாங்கும் சக்தி அதிகமாகனும்; அப்போதுதான் பொருள்களுக்கு தேவை உருவாகும். தயாரிப்புகள் அதிகரித்தால்தான் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். எனவே, இதற்கான அடிப்படையான சூழலை உருவாக்க வேண்டும். அரசும் அரசு சார்ந்த நிறுவனங்களும் அதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
தொழில் வளர்ச்சியை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். புதிதாக தொழில் தொடங்கவும், தொழில் விரிவாக்கத்துக்கும் உதவ முன்வர வேண்டும். உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்க வேண்டும். வெளிநாட்டு இயந்திரங்கள், உபகரணங்களை இறக்குமதி செய்வதைக் குறைத்து, உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பயன்பாட்டை ஆதரிக்க வேண்டும். வேலை வாய்ப்புகளை நாம்தான் உருவாக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் நூலில் வெளிநாட்டு முதலீடுகள் வேண்டாம் என்று சொல்கிறீர்கள், ஏன்?
வேலை வாய்ப்பை உருவாக்கவும், தொழில்துறை வளர்ச்சிக்கும் வெளிநாட்டு முதலீடு அவசியம் என்பது தவறான பார்வை. தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சி கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. 5-10 பேர் வேலை செய்யும் சிறுதொழில் நிறுவனங்கள் தொடங்கி 1000-2000 பேர் வேலை செய்யும் பெரிய நிறுவனங்கள் என பல நிறுவனங்களால் நிறைந்துள்ளது கொங்கு மண்டலம். வேலைக்கு இங்குள்ள ஆட்கள் போதாமல் வடமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்கிறோம். அந்தளவு வளர்ச்சி வெளிநாட்டு முதலீடு இல்லாமல் நிகழ்ந்ததுதானே.
சரி, வெளிநாட்டு முதலீடுகளை ஏன் தவிர்க்கவேண்டும் என்று சொல்கிறேன்? இந்தியாவில் பணம் இல்லை என்பது தவறு. நிறைய பணம் உள்ளது. ஆனால், அப்பணத்தைத் தொழில் வளர்ச்சிக்கு ஈடுபடுத்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அந்த வாய்ப்புகள் அந்நிய முதலீட்டுக்கே வழங்கப்படுகிறது. அவர்கள் கொண்டு வரும் முதலீட்டைவிட திருப்பி எடுத்துக்கொண்டு செல்லும் வளங்கள் மிக அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு அரசு ஏராளமான சலுகைகள் வளங்குகிறது. அந்த சலுகைகளை இந்திய முதலாளிகளுக்கு வழங்குவதில்லை. இந்திய முதலாளிகளுக்கு வழங்கினால் வளங்கள் வெளியேறாமல் இங்கேயே தங்கும். இந்தியர்களுக்கு தொழில்களில் அதிக நாட்டமும், மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் தொழிலில் வளர்ச்சி பெறக்கூடிய நல்ல மூளையும் உள்ளது. இந்தியாவிலேயே நல்ல தொழில்முனைவோர்களும் இருக்கிறார்கள். இந்தியாவில் தொழில்நுட்பத்தில் தலைசிறந்த நகரம் கோவை. கோவையின் வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் இங்குள்ள தொழில்முனைவோர்தானே.
தமிழ்நாட்டில் இப்போது வடதொழிலாளர்கள் வரவு ஒரு பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் இங்கே நிறைய இருக்கிறது. ஆனால், நம் இளைஞர்கள் அந்த வேலைகளை செய்ய முன்வருவதில்லை. அதனால், வடமாநில தொழிலாளர்கள் அந்த வேலைகளை வந்து செய்கிறார்கள். அவர்கள் வரவில்லை என்றால் கோயம்புத்தூரிலும் திருப்பூரிலும் தொழில்கள் முடங்கிவிடும் என்பதுதான் உண்மை.
திருப்பூர் தொழில் வளர்ச்சி பிரமிக்கதக்க வளர்ச்சி. இந்த வளர்ச்சிக்கு பின்னால் நம் ஊர் தொழிலாளிகளின் உழைப்புதான் உள்ளது. ஆரம்பத்தில் திருப்பூருக்கு வேலைக்கு வந்தவர்கள் பெரியதாக படிப்பு இல்லாதவர்கள்தான். திருப்பூருக்கு தொழிலாளியாக வந்து, மேஸ்திரியாகி, சூப்பர்வைசராக உயர்ந்து, பின்னர் ஒரு தொழில் தொடங்கி முதலாளியானவர்கள் நிறைய பேர். இப்படி சிறு அளவில் தொடங்கி பெரியளவு உயர்ந்த ஏராளமான நிறுவனங்களை திருப்பூரிலும் கோயம்புத்தூரிலும் அதிகம் பார்க்கலாம். இனி இது வடமாநில தொழிலாளர்களுக்கு நடக்கும். வடமாநிலத்தில் இருந்து தொழிலாளியாக வருபவர்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி எல்லா பிரிவுகளிலும் காலூன்றிக்கொண்டு இருக்கிறார்கள். கொஞ்ச நாட்கள் சென்றால் அவர்களும் நிறுவனங்களை தொடங்கி முதலாளியாகிவிடுவார்கள். அதில் சந்தேகம் வேண்டாம்.