No menu items!

கலைஞர் பேனா சிலை – சீமான் கோபம் – பின்னணி என்ன? – மிஸ் ரகசியா

கலைஞர் பேனா சிலை – சீமான் கோபம் – பின்னணி என்ன? – மிஸ் ரகசியா

”பனிக் காலம் போய் வெக்கை ஜாஸ்தியாகிட்டு இருக்கு. பாலிடிக்ஸும் ஹாட்டாகிட்டு இருக்கு. கொஞ்சம் கூலா குடிக்க ஏதாவது கொடுங்க” என்று சொல்லிக் கொண்டே கான்ஃப்ரென்ஸ் ரூம் நாற்காலியின் அமர்ந்தாள் ரகசியா.

“கூல்…கூல்..லைம் ஜூஸ் குடி” என்று கூல் படுத்தினோம்.

”சீமான் பாத்திங்களா..கலைஞர் நினைவா வைக்கறதா சொல்லியிருக்கிற பேனா சிலைக்கு எதிரா கொந்தளிச்சிருக்காரு”

“ஆமாம் அரசு கருத்துக் கேட்பு கூட்டத்துக்கே போய் சண்டை போட்டிருக்கிறாரே?”

“பொதுவா இது மாதிரி மக்கள் கிட்ட நடத்துற கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு தலைவர்கள் போக மாட்டார்கள். பேட்டிகள், அறிக்கைகள் மூலமாதான் கருத்துக்கள் சொல்லுவாங்க. ஆனா சீமான் நேர்ல போய் சீறி பெரிய டிராமா பண்ணியிருக்கிறார். அவரது சீற்றத்துக்குப் பின்னணில அதிமுக இருக்குனு சொல்றாங்க. கருத்துக் கேட்பு கூட்டத்துல இப்படி பேசுனாதான் பெரிய லெவல்ல ரீச்சாகும்னு அதிமுக பெருந்தலைகள் சீமானை தூண்டி விட்டிருக்கிறார்கள்”

”அதிமுக அதிமுகனா யாரு? எடப்பாடியா ஓபிஎஸ்ஸா?”

‘உங்களுக்கு இன்னும் அந்த சந்தேகம் இருக்கா. இப்பலாம் அதிமுகனா எல்லோரும் எடப்பாடியை மட்டும்தான் நினைக்கிறாங்க”

“ஓ..விஷயத்தை சொல்லு”

“சீமான் பேனா சிலை மட்டும் பேசாமா அங்க புதைக்கவே விட்டிருக்க கூடாதுனும் பேசுனது திமுகவினருக்கு கோபத்தை கொடுத்திருக்கு. இதற்கு நிச்சயம் எதிர்வினை இருக்கும்னு அறிவாலயத்துல பேச்சு”

“எதிர்வினையைதானே சீமானும் விரும்புறார். அதுலதானே பப்ளிசிட்டி கிடைக்கும். சரி, அதிமுகனா எடப்பாடினு நீ சொல்ற…ஆனா இரட்டை இலை இன்னும் கிடைக்கலையே? வழக்கு தள்ளிப் போயிருக்கே”

”எடப்பாடிக்கு இந்த விஷயத்துல பாஜக மீது கோபம், வருத்தம், கடுப்பு எல்லாம் இருக்கு”

“அதிமுக பிரச்சினையை உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும்தானே தீர்மானிக்கனும்…இதுல பாஜக மேல எதுக்கு எடப்பாடிக்கு கடுப்பு?”

“பாஜக டபுள் கேம் ஆடுறதா நினைக்கிறார். நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமா நடத்தறது பத்தி விவாதிக்க அரசியல் கட்சிகளுக்கு நாடாளுமன்ற அமைச்சகம் எல்லா கட்சிகளுக்கும் அழைப்பு கொடுத்துருந்துச்சு. அதிமுக சார்பா பங்கேற்க ஓபிஎஸ் மகனுக்கு அழைப்பு கொடுத்துருக்காங்க. இதுல எடப்பாடி கடுப்பாகிட்டார்”

“அதிமுக எம்.பி.னா அவர் மட்டும்தானே..வேறு யாருக்கு அழைப்பு கொடுக்க முடியும்? இதுக்கு பாஜக என்ன பண்ணும்”

“கட்சித் தலைமைனு எடப்பாடிக்கு அனுப்பியிருக்கணும்ன்றது இவங்க வாதம். அது மட்டுமில்லை. சுயேச்சை வேட்பாளர்களுக்கு பாஜகவோட ஆதரவு இருக்காதுன்னு அண்ணாமலை சொன்னது எடப்பாடி கோபத்துக்கு இன்னொரு காரணம். இரட்டை இலை சின்னம் அதிமுகவுக்கு கிடைக்காதுனு சொல்லாம சொல்றாரா அண்ணாமலைனு தனக்கு நெருக்கமானவர்கள்கிட்ட கோவமா கேட்டிருக்கிறார். பாஜக ஆதரவோ இல்லையோ..ஈரோடு கிழக்குல நிக்கிறோம். ஓபிஎஸ்ஸை ஓரம் கட்டுறோம்னுகிறதுதான் எடப்பாடியின் நிலைப்பாடு இப்போ”

”நிக்கிறோம் ஜெயிக்கிறோம்னு சொல்லாம ஓபிஎஸ்ஸை ஓரம் கட்டுறோம்னு சொன்னார்னு சொல்றியே..ஜெயிப்போம்னு அவருக்கு நம்பிக்கை இல்லையா?”

“இரட்டை இலையை வாங்குறதும் ஓபிஎஸ்ஸை ஓரங்கட்டுறதும்தான் வெற்றினு எடப்பாடி இப்போது நினைக்கிறார். தேர்தல் வெற்றிலாம் இரண்டாம் பட்சம்தான்”

“இதுக்கு நடுவுல எடப்பாடியைச் சந்திச்சு ஜி.கே.வாசன் பேச்சுவார்த்தை நடத்தினதா சொன்னாங்களே?”

“ஆமாம். சில நாட்களுக்கு முன்ன எடப்பாடியைச் சந்திச்சு ஜி.கே.வாசன் பேசி இருக்காரு. அப்ப, ‘இந்த தேர்தல்ல பாஜக வேட்பாளரை நீங்க ஆதரிக்கணும். அதுக்கு சம்மதம்னா இரட்டை இலை, கட்சி எல்லாம் உங்க கைக்கு தானா வந்திடும்’ன்னு சொல்லி இருக்காரு. ஆனா இதுக்கு எடப்பாடி சம்மதிக்கலை. ‘இந்த குழப்பமெல்லாம் வேண்டாம். இந்த தேர்தல்ல பாஜக போட்டியிடறதுன்னா போட்டியிடட்டும். நாங்க போட்டியிடறது உறுதி’ன்னு சொல்லி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வச்சிருக்காரு எடப்பாடி பழனிசாமி.”

“தேமுதிக தரப்புலயும் எடப்பாடியை சந்திக்க முயற்சி நடந்ததாமே?”

“தேமுதிக பொருளாளர் பிரேமலதா எடப்பாடியை சந்திக்க போன் பண்ணி நேரம் கேட்டிருந்தார். எடப்பாடி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளரை எடப்பாடி ஆதரிச்சா நாடாளுமன்ற தேர்தல்ல எடப்பாடிக்கு தேமுதிக ஆதரவு தரும்னு சொல்றதுக்காகத்தான் அவர் சந்திக்க முயற்சி பண்ணி இருக்காரு. இதைப்பத்தி எடப்பாடிக்கு முன்னாடியே தெரிஞ்சிருக்கு. அதனால ‘நாங்க தேர்தல்ல நிக்கறது நிச்சயம். தேர்தல் வேலையையும் நாங்க தொடங்கிட்டோம். நீங்க வேணும்னா உங்க வேட்பாளரை விலக்கிட்டு எங்களுக்கு ஆதரவு தாங்க. நாங்க நாடாளுமன்ற தேர்தல்ல உங்களுக்கு தொகுதி ஒதுக்கறோம்’ன்னு சொல்லி இருக்கார். இந்த திட்டம் பணால் ஆனதும், எடப்பாடியை சந்திக்க முயற்சியே பண்ணலைன்னு மறுப்பு அறிக்கை வெளியிட்டாரு சுதீஷ்.”

“ஈரோடு கிழக்கு தேர்தல் வந்ததுக்கு பிறகு அதிமுகவுல செங்கோட்டையனோட முக்கியத்துவம் கூடி இருக்கே?”

“ஆமாம். ஈரோடு தேர்தலோட செங்கோட்டையனுக்கு புதுசா இன்னொரு அசைன்மெண்டையும் எடப்பாடி கொடுத்திருக்காரு. ஓபிஎஸ் அணியில இருக்கிற சில மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை தங்கள் அணிக்கு கொண்டு வர்றதுதான் அந்த அசைன்மெண்ட். இதை ஏத்துக்கிட்ட செங்கோட்டைய்னும், ‘ஓபிஎஸ் அணியில இருந்தா உங்களுக்கு எதிர்காலம் இருக்காது. அதனால எங்க அணிக்கு வந்திடுங்க. நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள்ல உங்களுக்கு வாய்ப்பு தர்றோம்’ன்னு பேச்சுவார்த்தை நடத்திட்டு வற்றாராம். இது தவிர ஓபிஎஸ் அணியில வேகமா செயல்பட்டு வர்ற பன்ருட்டி ராமச்சந்திரனையும் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி இருக்காரு செங்கோட்டையன். ‘அந்த காலத்தில் ஜெயலலிதா உங்களை ஓரங்கட்டி வச்சிருக்க காரணமே பன்னீர்செல்வம்தான். அவருக்கு நீங்க ஆதரவு தெரிவிக்கலாமா’ன்னு கேட்டிருக்கார் செங்கோட்டையன்.”

“ஓபிஎஸ் தரப்பு என்ன மூட்ல இருக்காங்க?”

“அவங்களுக்கும் பாஜக மேல வருத்தம்தான். நாம பாஜகவுக்கு முழு ஆதரவு கொடுத்துட்டு இருக்கோம். ஆனா இந்த தேர்தல்ல நமக்குத்தான் ஆதரவுன்னு சொல்லாம இருக்காங்களேங்கிறது ஓபிஎஸ்ஸோட வருத்தம்.”

“அண்ணாமலையும் வருத்தத்துல இருக்காருனு சொல்றாங்களே…காயத்ரி ரகுராம் தொடர்ந்து அவரை கிண்டலடிச்சுக்கிட்டு இருக்கிறாங்க. அவங்களுக்கு பதில் கொடுக்க வேண்டாம்னு சொல்லியிருக்கிறாரே?”

“அவர் காயத்ரி ரகுராமையெல்லாம் கடந்து வந்துட்டாரு. அண்ணாமலையோட அடுத்த குறி வானதி சீனிவாசன்னு பாஜகவுல பேசிக்கிறாங்க. இப்போதைக்கு தமிழ்நாட்டில் தனக்கு நிகரா கட்சியில் செல்வாக்கு உள்ள பிரமுகர் வானதி சீனிவாசன்தான். அதனால அவரைக் குறிவச்சு வார் ரூம் வேலையில இறங்கி இருக்காம். அகில இந்திய மகளிர் அணி பொறுப்பில் இருக்கும் வானதி சீனிவாசனுக்கு மொழிப் பிரச்சினை இருக்கு. அதனால வடமாநிலங்களில் மகளிர் அமைப்பை வலுப்படுத்த முடியலைன்னு ஒரு புகாரை தலைமைக்கு தட்டி விட்டிருக்காங்க. இதுதவிர தொகுதிய சரியா கவனிக்கலைன்னும் புகார் சொல்லி இருக்கறத பேச்சு இருக்கு. ஆனா வானதி சீனிவாசன் இதுபத்தி பெருசா அலட்டிக்கலை. அண்ணாமலைக்கு முன்னாடியே கட்சியில சேர்ந்தவ நான். என்கிட்ட அவரோட முயற்சிகள் எதுவும் பலிக்காதுன்னு சொல்றாராம் வானதி.”

“பாஜககாரங்கள் வெளில போட்டி போடுறதைவிட உள்ளுக்குள்ள போட்டிப் போடுறதுதான் அதிகமா இருக்கும் போல..ஆமா கவர்னர் பத்தி எந்த நியூஸும் வரதில்லையே என்னாச்சு? அமைதியாய்ட்டாரா?”

“அமைதியானது மட்டுமில்ல, கல்வித் துறை அமைச்சரோட அன்பானவராகவும் மாறிவிட்டாராம். இரண்டு பேருக்குள்ள இப்போ நெருக்கம் அதிகரிச்சுருக்குனு ராஜ்பவன் வட்டாரங்கள் சொல்லுது”

”நிறைய ஐஏஎஸ் அதிகாரிகளை மாத்தியிருக்காங்களே…தொடர்ந்து ஐஏஎஸ் அதிகாரிகளை மாத்துறது இந்த கவர்ன்மெண்டுக்கு வேலையா போச்சுனு அதிகாரிகள் கிட்டருந்து புலம்பல் சத்தங்கள் வருதே”

“ஆமாம் அதிகாரிகளை அடிக்கடி மாத்துறது அதிகாரிகளுக்கு எரிச்சலைக் கொடுத்திருக்கு அதை யார் கிட்ட எப்படி சொல்றதுனு தெரியாம உக்காந்துக்கிட்டு இருக்காங்க”

“தலைமைச் செயலர்கிட்ட சொல்லலாமே?”

”அவர் காதுக்கு தகவல்களை கொண்டு போய் சேர்த்திருக்காங்க. தலைமைச் செயலாளர் இறையன்புவோட பதவிக்காலம் ஜூன் மாதத்தில் முடியுது. அவருக்கு நீட்டிப்பு தர முதல்வர் ஸ்டாலின் விரும்புறார். ஆனால் இறையன்பு பதவி நீட்டிப்பு வேண்டாம்னு சொல்றாராம். அதனால நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள ஒரு முக்கிய பதவியை இறையன்புக்குத் தந்து அவரை தன் அருகில் இருந்து வைத்துக் கொண்டு அவரது ஆலோசனை கேட்பது என்பது முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இருக்காராம். இதுக்கு இறையன்பு சம்மதம் சொல்லி இருக்காராம்.” என்று தகவல்களைத் தந்துவிட்டு ரகசியா கிளம்பினாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...