தமிழின் தற்கால எழுத்தாளர்களில் வித்தியாசமானவர் இமையம். அரசியலில் இருந்து விலகி இருக்கும் சிற்றிதழ் எழுத்தாளர்கள் மத்தியில் திமுக கரைவேட்டியுடன் உலா வரும் இமையம், தன்னை திராவிட இயக்க எழுத்தாளர்களின் தொடர்ச்சி என்றே அடையாளப் படுத்திக்கொள்கிறார். இமையம், வாவ் தமிழா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழில் படிக்க வேண்டிய மிகச் சிறந்த புத்தகங்கள் என பரிந்துரைத்த நூல்கள் இங்கே.
கவலை – அழகிய நாயகி அம்மாள்
புகழ்பெற்ற எழுத்தாளர் பொன்னீலனின் தாயார் அழகிய நாயகி அம்மாளின் தன் வரலாறு இந்த நூல். குமரி மாவட்டத்தின் ஒரு சிற்றூரின் வரலாறு தொடங்கி, அக்கால நிலவுடைமைச் சமூகத்தின் சுரண்டல் வரலாறு, ஓர் எளிய குடும்பத்தின் குல வரலாறு, குடும்ப வரலாறு என எத்தனை எத்தனையோ வாழ்வியலை இந்நூல் பேசுகிறது.
சோளகர் தொட்டி – ச. பாலமுருகன்
மனித உரிமைச் செயற்பாட்டாளரும் வழக்குரைஞருமான ச. பாலமுருகன், வீரப்பன் தேடுதல் வேட்டையில் நிகழ்ந்த பழங்குடிமக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயக்கமாக்கியவர்களுள் முக்கியமானவர். அந்த பின்னணியில் எழுதப்பட்டுள்ள இந்நாவலில் பழங்குடி மக்களின் பண்பாடு, வாழ்க்கை, தொன்மங்கள் மற்றும் வனம் போன்றவற்றுடன் தனக்குள்ள பினணப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
நாடு விட்டு நாடு – முத்தம்மாள் பழனிச்சாமி
கொங்கு நாடடிலிருந்து கூலியாக, சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் மலாயா சென்று உழைப்பால் உயர்ந்த ஒரு குடும்பத்தின் கதை இது. நகைச்சுவையான மொழி நடையுடன் தன் வரலாற்றை சொல்லும் நூலாசிரியர் முத்தம்மாள் பழனிச்சாமி, இதனூடாக கொங்கு வேளாளர்களின் பண்பாட்டை உணர்த்தும் சிறந்த ஆவணமாகவும் இதனை மாற்றியுள்ளார். பல நாடுகள், இனங்களிலிருந்து வந்த மக்கள் திருமண பந்தத்தால் ஒரு குடும்பமாகச் செழித்த வண்ணமயமான வரலாறும் இதனூடாக சொல்லப்படுகிறது.
எரியும் பனிக்காடு – பி.எச். டேனியல்
பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘பரதேசி’ படத்தின் மூலக்கதை இந்நாவல்தான். இன்று எழில்மிகுந்த மலை நகரங்களாக காட்சி தரும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்க கூட்டங் கூட்டமாகப் பலிகொடுக்கப்பட்ட ஆயிரமாயிரம் ஒடுக்கப்பட்ட மக்களின் கதைதான் ‘எரியும் பனிக்காடு. ‘ரெட் டீ’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு முப்பத்து எட்டு ஆண்டுகள் கழித்து ‘எரியும் பனிக்காடு’ என தமிழுக்கு வந்தது. எழுத்தாளர் இரா. முருகவேள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
ஸைபீரியப் பனியில் நடனக் காலனியுடன் – ஸான்ட்ரா கால்னியடே
ரஷ்யாவில் ஸ்டாலினின் கம்யூனிஸ அரசு காலத்தில் லாட்வியாவை ஆக்கிரமித்து ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்று, ஆயிரக் கணக்கானவர்களை ஸைபீரியாவுக்கு நாடு கடத்தியது வரலாறு. இந்த நாடு கடத்திலில் சிக்குண்டு, அலைக்கழிக்கப்பட்டு, கால்நடைகளுக்கான சரக்கு வண்டிப் பெட்டிகளில் ஏற்றப்பட்டு, ஸைபீரியாவின் கடும் பனியில் வாழ்ந்தும் இறந்தும் போன ஒரு குடும்பத்தின் உண்மை வரலாறு இந்நூல். பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டக் குழந்தைகள், பிரிக்கப்பட்டக் காதலர்கள், தந்தை ஒரு புறமும் தாயும் குழந்தைகளும் ஒரு புறமும் மீண்டும் சந்திக்கவே முடியாதபடி பிரிக்கப்பட்ட அவலமும் சோகமும் வாசிப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்யும். எழுத்தாளர் அம்பை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
நிரபராதிகளின் காலம் – ஸீக்ஃப்ரீட் லென்ஸ்
ஜெர்மன் நாடக ஆசிரியர்களில் புகழ்பெற்றவரான ஸீக்ஃப்ரீட் லென்ஸின் முக்கியமான இந்த நாடகம், ஜெர்மன் மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. சர்வாதிகார ஆட்சியை எவ்வாறு சாமானியர்கள் எதிர்கொள்கிறார்கள், அந்தச் சர்வாதிகார ஆட்சியின் குற்றங்களுக்கும் அவர்களுக்கும் தவிர்க்க முடியாத தொடர்புகள் எவ்வாறு ஏற்படுகின்றன, சாமானியர்கள் எந்த அளவுக்குத் தாங்களாகவே முன்வந்து சர்வாதிகாரத்துடன் ஒத்துழைக்கிறார்கள் போன்ற பிரச்சினைகள் இந்நாடகத்தில் விவரிக்கப்படுகின்றன.