No menu items!

தமிழில் படிக்க வேண்டிய மிகச் சிறந்த புத்தகங்கள் – இமையம்

தமிழில் படிக்க வேண்டிய மிகச் சிறந்த புத்தகங்கள் – இமையம்

எழுத்தாளர் இமையம், வாவ் தமிழா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழில் படிக்க வேண்டிய மிகச் சிறந்த புத்தகங்கள் என பரிந்துரைத்த நூல்களின் தொடர்ச்சி…

முந்தின பகுதியை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

இச்சா – ஷோபா சக்தி

தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாக பலராலும் குறிப்பிடப்படும் நாவல் இது. இலங்கை போராட்டத்தை பின்புலமாக கொண்டது. தென் கிழக்கிலங்கையின் அம்பாறை பகுதியைச் சேர்ந்த அப்பாவி இளம் சிறுமியின் வாழ்வை பேசுகிறது. குழந்தையைப் பெற்றுத் தாயாகும் அச்சிறுமி புலம்பெயர்ந்த கணவனால் வஞ்சிக்கப்பட்டுகிறாள். கடைசியில் ஐரோப்பிய நாடொன்றில் இறந்து போகிறாள். அவளது புறச் செயல்களும் அகச் சிந்தனைகளும்தான் இந்நாவல்.

சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை – சுரேந்திர வர்மா

உரிய காலத்தில் சந்ததியைப் பெறச் சக்தியற்ற அரசனால் ஏமாற்றமடைந்த அமைச்சரவை, கணவன் – மனைவியின் விருப்பத்திற்கு மாறாக, இன்னொரு ஆணின் மூலமாக அரசி மகனைப் பெற வேண்டும் என்று ஆணையிடுகிறது. இந்த நிகழ்ச்சி எப்படி மணவாழ்வின் இயல்பான அமைதி நிரம்பிய உறவுகளில் பூகம்பத்தைத் தோற்றுவிக்கிறது, எவ்வாறு அந்த முறிக்க முடியாத உறவு இற்றுப்போக ஆரம்பிக்கிறது என்பதை பேசும் சிறிய நாடகம். இந்தியிலிருந்து தமிழில் வி. சரோஜா மொழிபெயர்த்திருக்கிறார்.

பட்டு – அலெசான்ட்ரோ பாரிக்கோ

பத்தொன்பதாம் நூற்றாண்டுப் பின்புலத்தில் எழுதப்பட்ட இந்த இத்தாலிய மொழி நாவல் வரலாற்று கதையாகவும் காதல் கதையாகவும் காமத்தின் தேடலாகவும் பவுத்த தரிசனமாகவும் வெவ்வேறு வடிவம் கொள்ளக்கூடியது. பிரான்ஸ் முன்னாள் ராணுவ வீரன் ஒருவன் புதிய தொழிலான பட்டு வியாபாரத்துக்காக பிரான்சிலிருந்து ஜப்பானுக்குப் போகிறான். தரமான பட்டுப் புழுக்களைக் கொள்முதல் செய்வது அவன் நோக்கம். அங்கே புதிரான சூழலில் ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். தொடாமலும் பேசாமலும் அவர்களுக்குள் வளரும் உறவு நாடு திரும்பியும் அவனை வசீகரிக்கிறது. மீண்டும் மீண்டும் கடல் கடந்து செல்கிறான். அவள் ரகசியமாகக் கொடுக்கும் கடிதம் அவனை அலைக்கழிக்கிறது. அது அவனால் வாசிக்க முடியாத மொழியில் எழுதப்பட்டது. வாசிக்க வைத்துத் தெரிந்துகொண்ட பின்பு அதில் மறைந்திருக்கும் மர்மம் அவனை வசியப்படுத்துகிறது. ஆனால், அந்த கடிதங்களை எழுதுவது அவனது மனைவிதான் என்று அறியும்போது திகைப்படைகிறான். நாமும்தான். இப்படி புதிராகவும் உள்ள இந்த நாவல் இருபதுக்கும் அதிகமான உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு – கனடிய இயக்குநர் ஃப்ரான்ஸ்வா கியார்த் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது. தமிழில் சுகுமாறன் மொழிபெயர்த்துள்ளார்.

முன்பின் தெரியாத வாழ்க்கை – ஆந்திரேயி மக்கீன்

பிரான்சில் மிக உயரிய இலக்கிய விருதுகளான கோங்கூர் விருதையும் மெதிஸிஸ் விருதையும் பெற்றுள்ள ஆந்திரேயி மக்கீனின் சிறந்த நாவல்களுள் ஒன்று இது. பாரிஸுக்குப் புலம்பெயர்ந்த ரஷ்ய நாட்டவனான ஷுட்டோவ், பல ஆண்டுகள் கழித்து தன் தாய் நாட்டுக்கு வருகிறான். இரண்டாம் உலகப்போரில் செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் முற்றுகை இடப்பட்டபோதும், பின்னர் ஸ்டாலின் ‘அரசியல் தூய்மைப்படுத்துதல் கொள்கையை அமுல் படுத்தியபோதும் கடும் துயரங்களை எதிர்கொண்டாலும் துணிவையும் மனித நேயத்தையும் நிலைநாட்டியவன், வோல்ஸ்கி. வெவ்வேறு பின்புலன்களைக் கொண்ட இந்த இருவரும் ஒரு நாள் இரவு ரஷ்யாவில் செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சந்திக்கின்றனர். இந்தச் சந்திப்பின்போது, சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு முன்னும் பின்னும், ரஷ்யாவில் ஏற்பட்ட ஏராளமான வரலாற்று நிகழ்வுகள் விவரிக்கப்ப்படுகின்றன. கடும் போராட்டமான வாழ்க்கையிலும் நிலையான – உண்மையான மகிழ்ச்சியை எவ்வாறு அடையமுடியும் என்பதை இந்நாவல் வெளிப்படுத்துகிறது. பிரான்ஸில் இருந்து தமிழில் கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்திருக்கிறார்.

ஏழு தலைமுறைகள் – அலெக்ஸ் ஹேலி

‘அங்கிள் டாம்ஸ் கேபின்’(1852) நாவலுக்குப் பிறகு அதுபோல் உலகத்தையே குலுக்கிய அடுத்த நூல் ‘ரூட்ஸ்: தி சாகா ஆஃப் அன் அமெரிக்கன் பேமிலி’ (1967). ஆங்கிலத்தில் வெளியான இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘ஏழு தலைமுறைகள்’. அமெரிக்காவில் வாழும் ஆப்பிரிக்க இன இளைஞன் ‘குண்ட்டா’வின் பரம்பரையைப் பற்றிய கதை.

குண்ட்டா பிறந்த காம்பியா நாட்டிலுள்ள ஜப்பூர் கிராமம், அந்த இன மக்களின் உழைப்பு, வாழ்க்கை, உறவு முறைகள், இயற்கை பற்றிய அறிவு வளர்ச்சி, நம்பிக்கை, அமெரிக்காவில் ஒரு முதலாளியிடம் விற்கப்படும் குண்ட்டாவின் போராட்டமான வாழ்க்கை, காதலை நாவல் பேசுகிறது. அவரது மகள், பேரன் என்று தலைமுறை தலைமுறையாக அடிமையாக இருந்தவர்கள் எப்படி விடுதலை ஆனார்கள் என்பதை ஆழ்ந்த வலியுடனும் மௌனத்துடனும் பதிவு செய்கிறது. தமிழில் ஏ.ஜி. எத்திராஜ்லு மொழிபெயர்த்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...