கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் பணமழை பெய்யும் நாளாக 23-ம் தேதி இருக்கப் போகிறது. பணமழைக்கு காரணம் ஐபிஎல் ஏலம். கோடிக்கணக்கான ரூபாயுடன் தாங்கள் கோப்பையை வெல்ல உதவும் வீரர்களைத் தேடி ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் நாளை கொச்சியை முற்றுகையிடுகிறார்கள். இதில் அதிக விலைக்கு ஏலம்போக வாய்ப்புள்ள வீரர்களில் சிலரைப் பார்ப்போம்.
பென் ஸ்டோக்ஸ் (அடிப்படை விலை ரூ.2 கோடி)
பேட்டிங், பந்துவீச்சு என்று இரு துறைகளிலும் வலிமையாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ் இந்த ஐபிஎல் ஏலத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறார். இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த பென் ஸ்டோக்ஸை வாங்க ஆர்வமாக இருப்பதாக சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் ஏற்கெனவே அறிவித்துள்ளன. அதனால் அவரை வாங்க நாளை கடும் போட்டி இருக்கும் 10 கோடி ரூபாய்க்கு மேல் அவர் ஏலம்போக அதிக வாய்ப்புகள் உள்ளன.
சாம் கரண் (அடிப்படை விலை ரூ.2 கோடி)
ஒருவேளை பென் ஸ்டோக்ஸை வாங்க முடியாமல் போனால், அவரை வாங்க முயன்ற அத்தனை அணிகளும் அடுத்ததாக சாம் கரணை குறிவைக்கும். பென் ஸ்டோக்ஸைப் போலவே இவரும் ஒரு ஆல்ரவுண்டர். இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர். வேகப்பந்து வீச்சுடன் சிறப்பாக பேட்டிங் செயுயும் ஆற்றலும் இருப்பதால் இவரது ரேட்டும் ராக்கெட் வேகத்தில் ஏற வாய்ப்புள்ளது.
ஆடம் சம்பா (அடிப்படை விலை ரூ.2 கோடி)
இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானவை. அதனாலேயே இந்த முறை ஏலத்தில் ஆடம் சம்பாவை வாங்க போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் மும்பை அணி அவர் மீது அதிக ஆர்வம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சு வலுவாக இருக்கிறது. பும்ரா, ஆர்ச்சர் என்று இரு வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் சுழற்பந்து வீச்சுதான் பலவீனமாக இருக்கிறது. இதை ஈடுகட்ட இம்முறை சம்பாவை வாங்க ஆர்வம் காட்டுகிறது மும்பை இந்தியன்ஸ். வேறு சில அணிகளும் இதே ஆர்வத்தைக் காட்ட, அவரது ஏலத் தொகை கடுமையாக உயரலாம். ஆடம் சம்பாவை வாங்க முடியாதவர்கள் அடில் ரஷித்தை வாங்க முயற்சிப்பார்கள்.
மயங்க் அகர்வால் (அடிப்படை விலை ரூ.1 கோடி)
இந்திய வீரர்களில் அதிக விலைக்கு ஏலம்போக மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தவர் மயங்க் அகர்வால். ஆனால் இப்போட்டித் தொடரில் பஞ்சாப் அணி அரையிறுதியை எட்டாததற்கு மயங்க் அகர்வாலை பலிகடாவாக்கி, அவரை அணியில் இருந்து நீக்கியது பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம். பஞ்சாப் அணியில் இருந்து நீக்கப்பட்டதால், இந்த ஆண்டில் புதிய அணியைத் தேடி ஏலத்தில் பங்கேற்கிறார் மயங்க் அகர்வால். அவரது அடிப்படை விலை ரூ.1 கோடி.
ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்படாவிட்டாலும், பேட்ஸ்மேனாக மிகச்சிறந்த ஆற்றல் கொண்டவர் என்பதால் இந்த ஏலத்தில் மயங்க் அகர்வாலுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரராக மட்டுமின்றி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்படும் மயங்க் அகர்வாலை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட பல அணிகள் ஆர்வம் காட்டும். அதனால் அவரது விலை 10 கோடி ரூபாயை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாராயண் ஜெகதீசன் (அடிப்படை விலை ரூ.20 லட்சம்):
கடந்த 2 மாதங்களுக்கு முன்புவரை ஐபிஎல்லில் அதிகம் தேடப்படாத வீரராக நாராயணன் ஜெகதீசன் இருந்தார். கடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர் இருந்தாலும், ஆட வைக்கப்படவில்லை. ஏலத்துக்கு முன்னதாக சிஎஸ்கே நிர்வாகம் அவரை அணியில் இருந்து நீக்க, 20 லட்ச ரூபாய் என்ற அடிப்படை விலையில் ஏலத்துக்கு தயாரானார்.
இந்த நேரத்தில்தான் விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டி நடந்தது. இதில் அடுத்தடுத்து 5 சதங்களை விளாசினார் ஜெகதீசன். அவசரப்பட்டு அனுப்பிட்டோமே என்று தலையை சொறிந்துகொண்டிருக்கும் சிஎஸ்கே நிர்வாகம், எப்படியாவது அவரை வாங்க திட்டமிட, அதே திட்டத்துடன் மேலும் பல அணிகள் கொச்சியில் கால் வைத்துள்ளன. அதனால் ஜெகதீசன் காட்டில் நாளை பணமழை பெய்யலாம்.
ரோஹன் குந்நுமல் (அடிப்படை விலை ரூ.20 லட்சம்)
ஜெகதீசனைப் போலவோ விஜய் ஹச்சாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடர் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் ரோஹன் குந்நுமல். கேரள வீரரான ரோஹன், இந்த தொடரில் மொத்தம் 414 ரன்களைக் குவித்தார். இந்த தொடரில் அவரது சராசரி ரன்கள் 82.41. இதனால் அவரை வாங்க பல அணிகள் போட்டி போடுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ், கில்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய அணிகள் சமீபத்தில் நடத்திய ஆரம்பகட்ட பயிற்சி முகாமுக்கு ரோஹனை அழைத்ததையும் கவனிக்க வேண்டும். இந்த 3 அணிகளும் ரோஹனுக்காக குறிவைத்துள்ள நிலையில் அவருக்கு கணிசமான சம்பளம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.