No menu items!

பார்ப்போம் உலக சினிமா : The Eyes of My Mother

பார்ப்போம் உலக சினிமா : The Eyes of My Mother

உமா சக்தி

ஹாரர் வகைத் திரைப்படமான தி ஐஸ் ஆஃப் மை மதர் எனும் படம் பார்வையாளர்களை முற்றிலும் ஒரு புதிய உலகிற்கு இழுத்துச் சென்றுவிடும். அது ஒரு பெண்ணின் உலகம். தனிமையாக வாழ சபிக்கப்பட்ட ஒரு பெண் அவள். இயக்குநர் நிகோலஸ் பெஸ்ஸே இத்திரைப்படத்தை கருப்பு வெள்ளையில் இயக்கியிருப்பார். காண்போரைக் காட்சியினுள் உறைய வைக்கச் செய்யும்படியான திரைக்கதை உத்திகளையும் கையாண்டிருக்கிறார். இது இயக்குநரின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ப்ரான்ஸிஸ்கா எனும் சிறுமி தன்னுடைய தாய் மற்றும் வயதான தந்தையுடன் ஊருக்கு மிகவும் ஒதுக்குபுறமான ஓரிடத்தில் வசித்து வருகிறாள். அவளுடைய தாய் ஒரு முன்னாள் அறுவை சிகிச்சை மருத்துவர். காலச் சூழலால் அவள் தன் கணவர் மற்றும் மகளுடன் இந்த தனிமை வசிப்பிடத்தில் வாழ நேர்ந்தது. மாடுகளை மேய விட்டுவிட்டு மகளிடம் அதன் கண்களைச் சுட்டிக் காட்டி, மாடுகளின் கண்களும் மனிதர்களின் கண்களைப் போலத்தான் இருக்கும்,ஒரே வித்யாசம் மனிதர்களின் கண்களை விட மாட்டின் கண்கள் மிகப் பெரியது என்கிறாள்.

தினமும் மாலை மகளுக்கு மாட்டு கறி சமைப்பத்ற்கு முன்னர், வெட்டிய மாட்டின் தலையையும், அதன் உள்ளுறுப்புகளை மகளிடம் விளக்குகிறாள். மகள் வருங்காலத்தில் ஒரு மருத்துவராக வரவேண்டும் என்ற நினைப்பில் அவளுக்கு பயத்தையும் அருவருப்பையும் போக்கவே அவள் அப்படிச் செய்திருக்கலாம். மாட்டின் கண்களிலுள்ள விழிப் படலத்தை நீக்கி மகளுக்கு காண்பிக்க அதை ஆவலுடன் பார்க்கிறாள். மனிதர்களும் இதன் வழியே தான் தங்கள் ஆன்மாவின் மூலமாகப் பார்க்கிறார்கள் என்று சொல்ல சிறுமிக்கு ஒன்றும் விளங்கவில்லை.

திடீரென்று எதிர்பாராத ஒரு சம்பவத்தால் பிரான்ஸஸ்காவின் வாழ்க்கை தலைகீழாகிறது. அவள் வீட்டினுள் நுழைந்த அந்நியன் ஒருவன் அவளது தாயை வன்புணர்விற்குக் கட்டாயப்படுத்தி கொன்றுவிட, அப்போது அங்கு வந்த தந்தை இதைப் பார்த்து அதிர்ந்து போகிறார். மனைவியின் சடலத்தை மகளின் உதவியுடன் காட்டில் புதைக்கிறார். அதற்கு முன் மனதை தயார் செய்து கொள்ள சிறிது நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கிறார். கொலையாளியை வீட்டின் ஒதுக்குபுறமாக இருந்த ஒரு இருண்ட அறையில் சங்கிலியால் பிணைத்து வைக்கிறாள் சிறுமி பிரான்ஸஸ்கா. அவன் கண்களை மாட்டின் கண்களை அகற்றியது போல அகற்றிவிடும் அதே சமயத்தில் அவனுக்கு சிகிச்சையும் அளித்து, அவனை தினமும் மடியில் வைத்து உணவு ஊட்டுகிறாள். அது சில சமயம் செத்த எலியாக கூட இருக்கலாம். ஆனால் பசியில் துடிக்கும் அந்த கொலைக்காரனுக்கு ருசி தெரிவதில்லை. அவள் தன் தாயை ஏன் கொன்றாய் என்று அவனிடம் கேட்டபோது கொல்லும் போது ஏற்படும் ஒரு வித மகிழ்வான உணர்வுக்காகவே கொன்றேன் என்று பதில் சொல்வான். ஏற்கனவே மனச் சிதைவுக்குள்ளாகிக் கொண்டிருக்கும் அவளுக்கு அவனது பதில் அதை வலிமையாக்குகிறது.

இளம் பெண்ணாக தனியாக வயதான தந்தையுடன் வளரும் அவள் யாருமே இல்லாத ஒரு உலகத்தில் தன்னந்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஒரு கட்டத்தில் தந்தையும் இறந்துவிட, அவரது உடலை பிரிய மனமில்லாத அவள் அவரை பதப்படுத்தி வீட்டினுள் வைத்திருக்கிறாள். வேறு வழியில்லாமல் கண்களைக் குருடாக்கிய ஆண்டுக்கணக்கில் அடைத்து வைத்திருக்கும் மனிதனை விடுதலை செய்து தன் படுக்கை அறைக்கு அழைத்துச் செல்கிறாள். அவனுடனான அந்த உறவுக்கு அவளிடம் தனிமையைப் போக்கிக் கொள்ள செய்யும் செயல் என்பதைத் தவிர வேறெந்த காரணமும் இல்லை.

அடிக்கடி இறந்த தாயுடன் வாய் விட்டு அழுது புலம்பி பேசுவதும்,, சிதைவில் இருக்கிறோம் என்பதைக் கூட அறியாத நிலையில் தான் செய்வதை தன் வாழ்க்கை நிலையை சரியென நினைக்கும் ஒருத்தியாக வாழ்கிறாள் அந்த இளம் பெண். அழகான வீடு, உணவுக்குப் பிரச்னையில்லை ஆனால் துரத்தும் தனிமையும், என்ன செய்வது இந்த வாழ்க்கையில் என்கிற தெளிவின்மையும் அவளை இயல்பான ஒரு மனப் பிறழ்விற்குள் இட்டுச் செல்கிறது. படத்தின் இரண்டாம் பகுதியில் அவள் செயல்படுத்தும் குரூரமும், தன் தனிமையை நீக்க எதை வேண்டுமானாலும் செய்யத் துணியும் கொடூரமும் பார்வையாளர்களை அக்கதாபத்திரத்தை வெறுக்கும்படியாக மட்டுமின்றி கொன்றே விடலாம் என நினைக்கும்படியாக இருக்கும்.

அவள் கடத்தி வந்த குழந்தையை பிரிய முடியாது எனும் நிலையில் தனிமையில் உயிருடன் இருக்க ஒரு சிறு உயிரின் அன்பு அவளுக்கு தேவையாகி விடுகிறது. யாரும் உன்னை என்னிடமிருந்து பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறும் அவள் இறுதியில் பார்வையாளர்களின் அனுமானத்தில் செய்யும் காரியம் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்துவிடுவதாக உள்ளது.

ஒரு முறை தனிமையின் துயர் தாங்காமல் தன் காரில் வேறொரு ஊரில் இருக்கும் பாருக்குச் சென்று அங்கு ஒரு இளம் பெண்ணுடன் நட்பு கொள்வாள் பிரான்ஸெஸ்கா. அந்தப் பெண்ணை காரில் தன் வனாந்த்திர வீட்டுக்கு அழைத்து வருவாள். இருவருக்கும் நடக்கும் உரையாடல்

பெண் : இந்த வீடு மிகவும் அழகாக உள்ளது

பிரான்ஸெஸ்கா : ஆமாம்

பெண் :இது உன் பெற்றோரின் வீடா

பிரான்ஸெஸ்கா : ஆமாம்

அவள் தாயின் புகைப்படம் அங்கிருப்பதைப் பார்த்து கையில் எடுத்து

பெண் : உன் அம்மாவா? மிகவும் அழகாக இருக்கிறார்கள்

பிரான்ஸெஸ்கா : அழகாக இருந்தவள் அவள்

பெண் : மன்னிக்கவும்…அப்படியென்றால்

பிரான்ஸெஸ்கா : இப்போது அவள் உயிருடன் இல்லை

ஒற்றை வரிகளில் நீளும் வசனங்களின் இறுதியில் அந்தப் பெண் தந்தையைப் பற்றிக் கேட்க வெகு இயல்பாக அவரை நான் கொன்றுவிட்டேன் என்று பிராஸெஸ்கா கூற அவள் அதிர்ச்சியில் நீ விளையாடுகிறாய் தானே என்று கேட்க, அதெல்லாம் இல்லை உண்மையிகே என் தந்தையை நான் தான் கொன்றேன் என்று கூற அந்தப் பெண் தப்பியோட முனைகிறாள். அடுத்த காட்சியில் அவளுடைய குருதி சமையல் அறையின் தரையை நனைத்திருக்க பிரான்ஸெஸ்கா அமைதியாக அதை சுத்தப்படுத்திக்கொண்டிருப்பாள். அதன் பின் ஒரு கோப்பையில் அதே ரத்த நிற வொயினை சுவைப்பாள்.

இப்படி இந்தப் படத்தின் அனைத்துக் காட்சிகளுமே திகிலையும் இனம் தெரியாத அச்சத்தையும் உள்ளடக்கி இருப்பது பார்வையாளர்களை வெகுவாய் கவரக் கூடிய சிறப்பானதொரு திரைக்கதை உத்தியாகும். அச்ச உணர்வை படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிக் காட்சி வரை தொடரச் செய்து இறுதிக் காட்சியில் கொடூரமானதொரு அதிர்ச்சியைத் தரும் படமிது. படம் முழுவதும் தொலைக்காட்சியில் வெவ்வேறு படங்களில் காட்சிகளும் வசனங்களும் இந்தப் படத்திற்கு பொருந்தும் விதமாக அமைந்திருக்கும். மேலும் பழமையான இசையும், அழுத்தமான தொனியில் கதை சொல்லுதல் முறையும் இப்படத்தை மற்ற படங்களிலிருந்து வித்யாசப்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.
இப்படத்தைப் பார்த்தபின் அதன் காட்சிகள் ஏற்படுத்தியிருந்த அழுத்தமான மனப் பாதிப்பிலிருந்து வெளிவருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது. இது திரையில் நிகழ்கிறதா அல்லது நாம் அருகிருந்து பார்க்கிறோமோ என்று தோன்றும் அளவிற்கு இப்படம் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் திரைக்கதை. மூன்று பாகங்களில் கதையை நேர்க்கோட்டில் சொல்லாமல், நான் லீனியர் தன்மையுடன் இருந்தாலும், ஒருவித ஒழுங்குமுறையில் கூறப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் தாயை பற்றியும், இரண்டாம் பாகத்தில் தந்தையின் மரணாத்தையும் மூன்றால் பாகத்தில் குடும்பம் வேண்டும் என அவள் செய்யும் ஒரு செயலையும் வெகு நிதானமாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர்.

ஒரு கொலைக்காட்சியை கூட நேரடியாக காண்பிக்காமல் அதன் தாக்கத்தை திரையிலிருந்து பார்வையாளுர்களுக்கு கடத்த இயக்குநருக்குத் தெரிந்துள்ளது. ஒரு காட்சியை எந்த இடத்தில் துவங்கி, எப்படி முடிக்க வேண்டும் என்பதை அபாரமாக காட்சிப்படுத்தியிருப்பார். படத்திற்கு தேவையில்லாத எதுவுமே இதிலிருக்காது, வசனங்கள் கூட அதிகம் இல்லாமல், இசையும், ஒருவித அமானுஷ்யத்தன்மையையும் கச்சிதமான தொழில் நுட்பத்துடன் இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படத்தில் அதிகமான வன்முறைக் காட்சிகள் வருகின்றன என்றாலும் அவற்றை நேரடியாக காண்பிக்கப்படாமல் அதே சமயம் குரூரத்தையும் மறைக்காமல் எடுக்கப்பட்டிருக்கும். பெண்கள் கொலையாளிகளாகவும் சைக்கோவாகவும் சித்தரிக்கப்படும் படங்கள் குறைவு. அதுவே இந்தப் படத்தை பார்க்கத் தூண்டுகிறது. மனதை மிகவும் தொந்திரவுக்கு உள்ளாக்கும் சித்திரங்களைக் கொண்டதாக இருந்தாலும் இப்படத்தை பார்க்கத் தொடங்கிவிட்டால் முழுமையாக பார்க்காமல் இருக்க முடியாது. ஏனெனில் வாழ்வின் இருண்மையை, துயரத்தை, ஒரு பெண்ணின் ஆழமான மனக் காயத்தை, அதனால் ஏற்பட்ட மனப் பிறழை வெகு அருகிலிருந்து பார்ப்பதைப் போன்ற பிம்பத்தை இத்திரைப்படம் நிகழ்த்திவிடுகிறது. காட்சி ரீதியிலாக இத்திரைப்படம் மிக அழுத்தமானது எனலாம்.

கொல்வது தனக்குப் பிடிக்கிறது, அது மகிழ்வளிக்கும் விஷயம் என்று ஆரம்பத்தில் தாயை கொன்றவன் கூறியது உண்மைதான் என்று ஒரு கட்டத்தில் ஒரு கொலையை நிகழ்த்தும்போது பிரான்ஸெஸ்கா கூறுகிறாள். அவளுக்கு கொலை இயல்பானதொரு விளையாட்டாகவே இருக்கிறது. மனித உடலிலிருந்து தெறிக்கும் குருதியை அதன் வெதுவெதுப்பை அவள் அதிகம் விரும்புகிறாள். தி ஐஸ் ஆஃப் மை மதர் எனும் இத்திரைப்படம் குரூரங்களை அழகியலை விளக்க முற்பட்டாலும், சாதாரண பார்வையாளனுக்கு அதிர்ச்சி மதிப்பீட்டையே அளிக்கும். மாறாக இது போன்ற திரைப்படங்களைப் பார்த்துப் பழகிய ரசிகர்களுக்கு அல்லது இயல்பிலேயே குரூரம் வாய்க்கப் பெற்றவர்கள் ரசிக்கலாம். எல்லாவற்றையும் மீறி இதுவொரு திரைப்படம், அதன் கலையை, ஒரு திரைப்படம் மூலம் ரசிகனை எவ்வித தாக்கத்திற்கும் உட்படுத்த முடியும் என்ற இயக்குநரின் சவால் நிச்சயம் நிறைவேறி விடுகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...