ஸ்விக்கி ஆர்டர் பட்டியலில் இந்த வருடமும் பிரியாணிதான் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
ஒவ்வொரு வருட இறுதியிலும் அந்த வருடத்தில் தங்களிடம் அதிகமாய் ஆர்டர் செய்யப்பட்ட உணவுப் பட்டியலை ஸ்விக்கி நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.
2022 ஆண்டுக்கான அதிகம் கேட்கப்பட்ட பட்டியலை இப்போது ஸ்விக்கி வெளியிட்டிருக்கிறது.
அதில் முதலிடத்தில் இருப்பது பிரியாணி. தொடர்ந்து ஏழாவது முறையாக பிரியாணி முதலிடத்தில் வந்திருக்கிறது. ஒரு நொடிக்கு 2.28 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டன. ஒரு நிமிடத்துக்கு 137 பிரியாணிகள் வாங்கப்பட்டது என்கிறது அந்தப் பட்டியல். முக்கியமாய் சிக்கன் பிரியாணிதான் முந்தியிருக்கிறது.
பிரியாணிக்கு அடுத்த இடத்தில் இருப்பது மசாலா தோசை. பொதுவாய் மசாலா தோசையை சுடச்சுட வீட்டிலோ ஓட்டலிலோ சாப்பிட விரும்புவார்கள். ஆனால் ஆன்லைனில் ஆர்டர் செய்து மசாலா தோசை வாங்கியிருப்பது ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கிறது.
மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது சிக்கன் ஃப்ரைட் ரைஸ்.
நான்காவது இடத்தில் பன்னீர் பட்டர் மசாலாவும் ஐந்தாவது இடத்தை பட்டர் நானும் பிடித்திருக்கின்றன.
ஆறாவது ஏழாவது இடங்களை வெஜிடேபிள் ஃபரைட் ரைஸ்ஸும் வெஜிடேபிள் பிரியாணியும் பிடித்திருக்கின்றன. எட்டாவது இடத்தில் தந்தூரி சிக்கன் இருக்கிறது.
ஸ்விக்கி ஆர்டர்களில் அதிகம் வாங்கப்பட்ட அசைவ ஐட்டமாக சிக்கன் இருக்கிறது. 29.89 லட்சம் முறை சிக்கன் ஐட்டங்கள் வாங்கப்பட்டிருக்கின்றன.
ஸ்வீட் ஐட்டங்களில் முதலிடத்தில் இருப்பது குலோப் ஜாமூன். 27 லட்சம் முறை ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. இரண்டாவது இடத்தில் ரசமலாய். 16 லட்சம் முறை வாங்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது நான்காவது இடங்களில் சாக்கோ லவா கேக்கும் (10 லட்சம் ஆர்டர்கள்) ரசகுல்லாவும் இருக்கின்றன. ஐந்தாவது இடத்தில் சாக்கோ சிப்ஸ் ஐஸ்கிரீம் இருக்கிறது.
நொறுக்குத் தீனிகளில் முதலிடம் சமோசாவுக்கு. 40 லட்சம் முறை வாங்கப்பட்டிருக்கிறது. அடுத்த இடத்தில் பாப்கார்ன். மூன்றாவது இடத் பாவ் பாஜி.
வெளிநாட்டு உணவு வகைகளில் முதலிடத்தில் இருப்பது இத்தாலியன் பாஸ்டா. இரண்டாமிடத்தில் பீட்சா. மூன்றாமிடத்தில் மெக்சிகன் பவுல் இருக்கிறது.
இரவு பத்து மணிக்கு மேல் ஆர்டர் செய்யப்பட்ட ஐட்டங்களில் முதலிடத்தில் இருப்பது பாப்கார்ன். 22 லட்சம் முறை வாங்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இந்தியர்கள் அதிக உணவுகளை ஆர்டர் செய்திருக்கிறார்கள். கொரோனா காலம் முடிந்திருப்பதை இது காட்டுகிறது. சுமார் 25 சதவீதம் வெளியிலிருந்து உணவு வாங்குவது அதிகரித்திருக்கிறது.
தீபாவளி நாளில் ஒரு பெங்களூர்காரர் ஒரே ஆர்டரில் 75,378 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார். இதுதான் அதிகத் தொகையில் வாங்கப்பட்ட ஆர்டர். அதற்கடுத்து டெல்லியில் ஒருவர் 71,229 ரூபாய்க்கு ஆர்டர் செய்திருக்கிறார். மிக அதிக தொகை ஆர்டர்கள் இவை.