No menu items!

காசி தமிழ் சங்கமம் 3 – பாரதியின் இளமைக் காலம்

காசி தமிழ் சங்கமம் 3 – பாரதியின் இளமைக் காலம்

ராஜ்ஜா

நமது நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு, அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, மத்திய அரசு இந்த ஆண்டு (2022) காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நவ.17ல் தொடங்கி ஒரு மாதம் நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க பலதுறை வல்லுனர்கள் அழைக்கப்பட்டிருந்தாலும், இலக்கியத்திற்கு என பிரத்யேகமாக தமிழ்நாட்டிலிருந்து மாலனும் புதுச்சேரியில் இருந்து இருமொழி எழுத்தாளர் ராஜ்ஜாவும் (அதான் நான்) அழைக்கப்பட்டிருப்பது பெருமை பேசும்படியாகத்தான் இருந்தது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மிகப் பெரிய திடல். அதில்தான் கண்களைப் பறிக்கும் வண்ணங்களில் பிரம்மாண்டமான கொட்டகை, மேடை எல்லாம். நிறைய பேர் உட்கார நாற்காலிகள். அவை நிறைந்திருந்தது. மக்கள் கூட்டம் நடக்கவிருக்கும் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கவே கூடியிருந்தது.

மாலனின் தலைமையுரைக்குப் பின் விழா தொடங்கியது. மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என பல கிராமப்புற நிகழ்ச்சிகள் நடந்தன. ஆட்டத்திற்கு ஏது மொழி? தமிழறிந்த, தமிழறியா சொந்தங்கள் அனைவருமே ரசித்தனர். காசி தமிழ் சங்கமத்தின் மூலம் தமிழையும் தமிழ்க் கலாச்சாரத்தையும் உலகறியச் செய்யும் நோக்கம் பூர்த்தியாவதை உணர்ந்தேன். வாழ்க தமிழ். வெல்க பாரதம்.

மறுநாள் (25-11-2022) காலை மாலனும் நானும் கலந்துகொள்ள வேண்டிய இலக்கிய நிகழ்ச்சி. மாலன் ‘காசியில் வாழ்ந்த பாரதி’ என்ற தலைப்பிலும், நான் ‘பாரதி – காசியிலிருந்து புதுச்சேரிவரை’ என்ற தலைப்பிலும் பேச வேண்டியிருந்தது. இவ்விலக்கிய விழாவிற்கு தலைமை தாங்க எங்க ஊரு துணைநிலை ஆளுநர் தமிழிசை வந்திருந்தார்.

ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதலிலேயே தேசிய கீதம் ஒலிப்பது மரபு. எங்களது நிகழ்ச்சி தொடங்கிய போதும் அப்படியே நடந்தது. தேசியகீதம் ஒலித்து முடிந்ததும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடுவோம் என்று அறிவித்த ஆளுநர் தமிழிசை ‘நீராரும் கடலுடுத்த” என்று தொடங்கும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும், பின்னர் பாரதிதாசனாரின் ‘வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே” என்கிற புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் அவரே தொடங்கிப் பாடினார். பாடல்களைப் பாடத் தெரிந்தவர்கள் அவரோடு பாடினர். ஏதோ கொஞ்சம் தெரிந்தவர்கள் ஒப்புக்கு சப்பாணி போல் வாயசைத்தனர். கொஞ்சம் கூட தெரியாதவர்கள் அவரது வாயையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

தமிழிசை, இரண்டு மாநில தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்களையும் காசி மாநகரத்திலே பாடியதாலே பெருமைக்குரிய ஆளுநராக மக்கள் மத்தியிலே இடம்பிடித்தார். கைதட்டி ஆரவாரித்த மக்கள் இதை சொல்லாமல் சொல்லினர். எங்கள் மூவரின் பேச்சுமே பாரதி என்கிற மகாகவிஞனைப் பற்றித் தானே. யாருக்கு யாரும் இளைத்தவர் அல்ல என்பதை மக்கள் தெளிவுபடுத்தினர்.

இலக்கிய விழா இனிதே முடிந்தது. நாங்கள் காசி சென்ற வேலையும் இனிதே முடிந்தது.

இங்குதான் புதுடில்லி நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் தமிழ் எடிட்டர் மதன்ராஜை நேருக்கு நேர் முதல் தடவையாக சந்தித்தேன். நான் எழுதி அவர்கள் நிறுவனம் வெளிக் கொண்டுவந்த, ‘எ டிரஷெரி ஆஃப் ஏன்ஷியன்ட் தமிழ் லெஜன்ட்ஸ்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை வெளியிடப் போவதாகவும், கவர்னர் தமிழிசையின் கையால் வெளியிட அனுமதி பெற்றிருப்பதாகவும் சொன்னார். கவர்னரும் புத்தகத்தை வெளியிட்டார். இந்த புதுச்சேரிக்காரன் எழுதிய ஆங்கிலப் புத்தகத்தை புதுச்சேரி கவர்னர் தமிழிசை வாரணாசி பல்கலைக்கழக வளாகத்தில் வெளியிட வேண்டும் என்பது காசி விஸ்வநாதரின் கட்டளை போலும். மதன்ராஜிக்கு மிக்க நன்றி. சரியான தருணத்தில் மிகச் சரியானவர் கைகளால் தமிழர்களின் பாரம்பரியக் கதைகளை ஆங்கிலத்தில் வெளியாக உதவியவர் அல்லவா!

மதியம் மூன்று மணிக்கு தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜெகதீசனை சந்திக்கலாம் என்று சொல்லிவிட்டு மாலன் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். எங்களுடனே மதிய உணவருந்திய மீராவும், பிரத்தியூஷ{ம் மூன்று மணியளவில் எங்களை தமிழ்த்துறைக்கு அழைத்துச் சென்றனர்.

மிகப் பழமையான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சொல்லிக் கொடுக்காத மொழி ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால், ஒரு கைவிரல்களே போதும், எண்ணிவிடலாம். பழமையை அப்படியே பாதுகாப்பதில் வல்லவர்கள் போலும் இவர்கள். நான் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்ற சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. பழமை மாறாமல் பராமரிப்பது ஆயகலைகளில் ஒன்றாய் இருக்க வேண்டும்.

பேராசிரியர் ஜெகதீசனோடு பேசிக் கொண்டிருந்தோம். நீண்ட நேரம். பல்கலையில் ‘பாரதி சிம்மாசனம்’ அமைக்கும் வேலையில் முழு மூச்சோடு ஈடுபட்டிருப்பதைப் பற்றி பேசிவிட்டு, அதன் தொடக்கப் பணி காலத்தில் மாலனையும் என்னையும் அழைக்க இருப்பதாகச் சொன்னார். நிச்சயம் எங்களால் ஆனதை பாரதிக்காகச் செய்வோம் என்று உறுதியளித்தோம். காசிக்கு எங்களை கொண்டு போய் சேர்த்தவரே பாரதி தானே. அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோமே.

அந்த சமயத்தில்தான் மாலன், ஜெகதீசனிடம் கேட்டார், “இங்கே பாரதி தன் இளமைக் காலத்தில் தன் அத்தையின் வீட்டில் வசித்தார் என்று படித்திருக்கிறோம் அந்த இல்லத்தை பார்க்க வேண்டுமே.”

“நானே ஞாபகப்படுத்தலாம் என்று நினைத்திருந்தேன்,” என்றார் பெரியநாயகி.

“நிச்சயம் போகலாம். பாரதியின் தங்கை மகன் பேராசிரியர் கிருஷ்ணன் அந்த இல்லத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய மகள் ஜெயந்தியும் அங்குதான் வசிக்கிறார். அவரை எனக்கு நன்றாகவே தெரியும்,” என்று சொல்லியபடியே அவரை தொடர்புகொண்டார். “இன்று மாலையே ஏழு மணிக்குப் போகலாம். நானும் உங்களோடு வருகிறேன். சரியாக ஆறரை மணிக்கு நீங்கள் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகைக்கு வருகிறேன்,” என்று சொன்னார் பேரா.ஜெகதீசன்.

அப்போது மணி நான்குகூட ஆகவில்லை. “பல்கலை வளாகத்திலே புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் காசி விஸ்வநாதர் கோயில் போகலாம்,” என்று மீரா சொன்ன உடனே, பெரிய நாயகிக்கு ஏகப்பட்ட குஷி.

இந்தக் கோயிலுக்குள் செல்ல சந்து பொந்தெல்லாம் கிடையாது. கோயில் என்றதுமே நம் கண்முன் தோன்றும் மிகப் பிரம்மாண்டமான கட்டிடம்தான் இங்கும் இருந்தது. வித்தியாசமாக வேலைப்பாடுகளுடன். வடஇந்திய கட்டிடக் கலை.

கோயிலினுள் விஸ்வநாதரை மிகக் குனிந்துதான் பார்க்க முடியும். அப்போது பூசாரி என் கழுத்தில் ஒரு சிறு சாமந்தி பூ மாலையையும், மாலனின் கழுத்தில் எருக்கம் பூ மாலையையும் போட்டு ஆசீர்வதித்தார்.

கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போது மாலன் சிரித்துக் கொண்டே, “எருக்கம் பூ மாலை பிள்ளையாருக்கு மட்டும்தான் போடுவார்கள், ஒரு வேளை என் தொந்தியைப் பார்த்துவிட்டு எனக்கு போட்டுவிட்டாரோ பூசாரி?” என்றார். நானோ “நம் இருவர் தொந்தியையும் ஒப்பிட்டுப் பார்த்திருப்பாரேயானால், நியாயமாக அதை எனக்குத்தான் போட்டிருப்பார்” என்றேன்.

நாங்கள் சிரித்துக்கொள்வதற்கான காரணம் புரியாமல் எங்களையே பார்த்துக் கொண்டிருந்த மீரா, “சார், எவ்வளவோ தூரத்தில் இருந்து எங்கள் ஊர் வந்திருக்கிறீர்கள். எங்கள் ஊர் ஸ்பெஷல் ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் ருசி பார்க்க வேண்டும்,” என்றார்.

“ஆ…ஆங்… ஆமாம் சார், நிச்சயமா டேஸ்ட் பண்ணனும், நானும் அதை ருசித்து ரொம்ப நாள் ஆயிற்று,” என்றார் பிரத்தியூஷ். எங்கள் அருகில் நின்றிருந்த கார் டிரைவரும், “மலெய்யோ எங்க ஊர் ஸ்பெஷல். வாங்க ரவிதாஸ் கேட்டுக்கு அழைச்சிக்கிட்டுப் போறேன். அதுக்கு எதிரிலெதான் பெஹல்வான் லஸ்ஸி கடை. அங்கே மலெய்யோ மிகப்பிரமாதமா இருக்கும்,” என்று ஒத்து ஊதினார்.

“சரி! போகலாம். அதற்கு முன்னால் உங்கள் புராதன கால நூலகத்தைப் பார்க்க வேண்டுமே,” என்றேன். “இதோ ஒரு இருபது அடி தூரத்தில்… வாங்க போகலாம்,” என்றார் பிரத்தியூஷ்.

சயாஜி ராவ் கெய்க்வாட் நூலகம். ஒரு நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த நூலகத்தின் அடித்தளத்தில் எல்லா நாற்காலிகளிலும் மாணவர்கள். புத்தகங்களை படித்துக் கொண்டும், மடி கணினியை நோண்டிக் கொண்டும் இருந்தது அரியதொரு காட்சியாகவே எனக்கு தோன்றியது. நம்ம ஊரில் நூலகங்களில் மாணவர்களை காணவே முடியாது.

நூலகத்தில் நுழைந்து ஒரு வலம் வந்தோம். எத்தனை லட்சம் புத்தகங்களோ? கோடியில் இருக்குமோ? நூலகரே அறிவார்.

கோட்டைக்கதவு மாதிரி ஏதோ ஒன்றைத் திறந்து, உள்ளே அழைத்துச் சென்றார்கள். தமிழ்ப் புத்தகங்களைப் பார்க்க ஆர்வம் காட்டினோம். படிக்கட்டில் ஏறிச் சென்றோம். அதிக அளவில் தமிழ்ப் புத்தகங்கள் இல்லை என்றாலும், அங்கு இருந்தவை அனைத்துமே பொக்கிஷங்கள் என்று சொல்லலாம். நான் கேள்வி மட்டுமே பட்டிருந்து, கண்களால் பார்க்க இயலாத புத்தகங்களை அங்கு பார்த்து புலகாங்கிதம் அடைந்தேன். மாலன் சில புத்தகங்களை கையில் எடுத்து, பிரித்து பதிப்பிக்கப்பட்ட ஆண்டைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கினார்.

பெஹல்வான் லஸ்ஸி கடை. நம்ம தமிழ் பயில்வான்தான்; அங்கே இந்தியிலே பெஹல்வான். அவ்வளவுதான். பெரிய சமோசாவும், அதன்பின் மலெய்யோவும் வந்தன. மலெய்யோவை ரசிக்கத்தான் முடியும். வெறும் நுரை. வாய்க்குள் எடுத்துப் போட்டால் உருகி உள்ளே போய் விடுகிறது. அண்டா நிறைய சாப்பிட்டாலும் நிச்சயம் வயிற்றில் எங்கோதான் இருக்கும். ஆனால், அதன் சுவையே தனிதான். அதுவும் தெருக்கடையில் பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிடுவது மகிழ்ச்சியோ மகிழ்ச்சிதான்.

வார்த்தை தவறாமல் வந்து சேர்ந்தார் பேரா.ஜெகதீசன். கார் ஊர்ந்து சென்றது. ஹனுமன் காட் வந்தது. வீட்டினுள் இருக்கும் சிவன் கோயில் நோக்கி நடந்துதான் போக வேண்டும். வீடு போன்றே இருந்த சங்கரமடத்தைத் தாண்டிச் சென்றோம். டீ-4ஃ57 எண் இட்ட மிகப் பழைய, பெரிய்ய வீடு. சிவமடம் என்று பெயர். திருமதி. ஜெயந்தி வரவேற்றார். “அப்பா உங்களையெல்லலாம் எதிர்பார்த்து காத்திருக்கிறார். வழக்கமாக அப்பா இப்போதெல்லாம் யாரையும் சந்திப்பதில்லை. பேராசிரியர் ஜெகதீசன் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் இரண்டு எழுத்தாளர்களோடு வருகிறார் என்று சொன்னதுமே பூரித்துப் போனார்,” என்றார்.

தொன்னூற்று நான்கு வயதினைக் கடந்த பேராசிரியர் கிருஷ்ணன், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் இசைக்கல்லூரியில் மிருதங்கம் பயிற்று வித்தவர். தனது மாமா பாரதியாரைப் பற்றியும் அவரது காசி தொடர்பைப் பற்றியும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பேசி இருக்கிறார். எத்தனையோ விருதுகளையும் பெற்றிருக்கிறார். சொல்லப்போனால் பாரதி புதையலில் இவரும் ஒரு வைரம் தான்.

மாலனும் நானும் பாரதி பக்தர்கள் என்று ஜெகதீசன் அறிமுகப்படுத்தியதுமே, கிருஷ்ணன் தான் பார்த்திராத பாரதியைப் பற்றி இடைவிடாமல் அரை மணி நேரத்திற்கும் மேலாக அவரது எண்ணங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டார்.

திருமதி ஜெயந்தி “போதும்’ என்று எங்களைப் பார்த்து சைகை காட்டவே, நாங்கள் அனைவருமே எழுந்து நின்று, அவரிடம் ஆசி பெற்றோம். நாங்கள் அவரை சந்தித்ததின் ஞாபகர்த்தமாக அவர் எழுதிய “மகாகவி பாரதியாரின் வாழ்க்கைக் குறிப்புகள்’ என்ற மும்மொழி நூலினை (இந்தி, தமிழ், ஆங்கிலம்) எனக்கும், மாலனுக்கும் ஆளுக்கொரு பிரதியினை கையொப்பமிட்டுக் கொடுத்து வழியனுப்பிவைத்தார். பேராசிரியர் ஜெகதீசனுக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்.

மறுநாள் (நவ. 26, 2022) காலை எங்கும் வெளியே செல்ல முடியவில்லை. காரணம் நாங்கள் பத்து பத்தரைக்கெல்லாம் கிளம்பினால்தான் விமான நிலையத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் போய்ச் சேர முடியும். சென்னை செல்லும் இண்டிகோ விமானம் புறப்படும் நேரம் மதியம் 2.40.

எட்டு மணிக்கெல்லாம் பல்கலைக்கழக ஆங்கிலத்துறையைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் — பேராசிரியர்கள் பஞ்சனன் தலாய், திரித்தி ராய் தலாய் – விருந்தினர் மாளிகைக்கு வந்து என்னோடு அளவளாவி விட்டுச் சென்றனர். அவர்கள் இதுவரை எழுதிய புத்தகங்களையம் கையெழுத்திட்டு என்னிடம் கொடுத்தனர். அவர்கள் இருக்கும்போதே புதுடில்லியில் இருந்து வெளிவரும் ‘திட்டம்’ என்ற அரசாங்க மாத இதழின் ஆசிரியர், சஞ்சய் கோஷ், தன் பத்திரிகையில் வெளியிட என்னை நேர்காணல் கண்டார். அது முடிந்ததும் அவரை மாலனின் அறைக்கு அழைத்துச் சென்று அவரை அறிமுகப்படுத்தி வைத்தேன். மாலன் எனக்கு செய்த, செய்யும் உதவிகளுக்கு என்னால் முடிந்த சிறு கைமாறு. அவ்வளவே.

பத்தரை மணிக்கெல்லாம் பிரத்தியூஷ், மீரா, மற்றும் பல பேராசிரியர்கள், மாணவர்கள் எங்கனை வழியனுப்ப வந்துவிட்டார்கள். கார் நகர்ந்தது. இந்த தடவை குறுக்குப்பாதை, நேர் பாதையில் போனால் விமானத்தை விட்டுவிடுவோம் போல.

மனம் கனத்தது. குறுக்கு வழிப்பாதையோ டங்கு டிங்கு தான். வாரணாசியின் கிராமப்புறப் பகுதிகளை பார்க்க முடிந்தது. ஒரு வழியாக விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.

எங்களை வழியனுப்ப விமான நிலையம்வரை எங்களுக்கு பாதுகாப்பாக பயணித்த மீராவும், பிரத்தியூஷீம் சற்றே கண்கலங்கினர். அன்புதானே ஜாதி, மதம், இனம், மொழி என்கின்ற வற்றையெல்லாம் இணைக்கும் பாலம். “உங்களையெல்லாம் இனி எப்போது பார்ப்போம்,” என்று ஒரே குரலாக சொல்லினர் மீராவும், பிரத்தியூஷீம்.

“நிச்சயம் சந்திப்போம். உலகம் உருண்டைதானே.” என்று மாலன் சொல்ல, பெரிய நாயகியோ, “புதுச்சேரிக்கு வாருங்கள். உங்கள் உறவினர் நாங்கள். எப்போதும் எங்கள் பாசக்கரங்கள் நீளும்,” என்றார்.

நானோ “நாளை நடக்க இருப்பதை யாமொன்றும் அறியோம் பராபரமே” என்று அவர்களைப் பார்த்து புன்முறுவலித்துவிட்டு, விமான தளத்திற்குள் நுழைந்தேன்.


ராஜ்ஜா, ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழியாக்கம், புத்தக விமர்சனம் எழுதும் இரு மொழி எழுத்தாளர். நாற்பது ஆண்டுகள் ஆங்கிலப் பேராசிரியராக புதுச்சேரி அரசு கல்லூரிகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற இவர் இதுவரை ஆங்கிலத்தில் 35 நூல்களும், தமிழில் 17 நூல்களும் எழுதியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...