No menu items!

இந்திய ஒடிடி – 12 ஆயிரம் கோடி ரூபாய்!

இந்திய ஒடிடி – 12 ஆயிரம் கோடி ரூபாய்!

ஒவர்- த- டாப் மீடியா (OTT – Over The Top) என்பதே இன்றைக்கு சேட்டிலைட் சேனல்கள், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா சினிமாக்களையும் சிங்கிள் ப்ராட்பேண்ட் (Broadband) கனெக்‌ஷனில் ஓவர் டேக் செய்திருக்கும் ஒடிடி-யின் முழுப்பெயர்.

வழக்கமான கேபிள், செட் டாப் பாக்ஸ், ஆன்டெனா, ஒவ்வொரு சேனலுக்கும் தனித்தனி சந்தா எதுவும் வேண்டாம். வீட்டில் ஒரேயொரு ப்ராட்பேண்ட் கனெக்‌ஷன் இருந்தால் போதும். இப்பொழுது இன்டர்நெட் வழியே வரிசைக்கட்டி நிற்கிறது நிகழ்ச்சிகள்.

அடுத்து டிவியே வேண்டாம். கையிலிருக்கும் மொபைல் போன் போதும். இல்லையென்றால் கோவிட் நேரத்தில் பிள்ளைகளுக்கு வாங்கிய டேப் இருந்தால் போதும். நினைத்த நேரத்தில் செளகரியமாக விரும்பிய நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.

இந்த இரண்டு அம்சங்களையும் தாண்டி ஒடிடி தளங்கள் பார்வையாளர்களை கிறங்கடிக்க காரணம், நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைச் சென்றடையும் விதம். ஒரு சினிமா சேனல் என்றால், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏதாவது ஒரு திரைப்படத்தை ஒளிபரப்பும். அந்நேரத்தில் அந்தப்படத்தை மட்டுமே பார்வையாளர்கள் பார்க்க முடியும். ஒளிப்பரப்பாகும் திரைப்படம் பிடிக்கவில்லையென்றால் டிவியை ஆஃப் செய்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க கிளம்ப வேண்டியதுதான். ஆனால் ஒடிடி தளங்கள் பார்வையாளர்கள் எந்நேரத்திலும், எந்த நிகழ்ச்சிகளையும், எந்த மொழி சினிமாகளையும் எங்கிருந்தாலும் கண்டுகளிக்க விதவிதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.

பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கும் படங்கள், நிகழ்ச்சிகளின் வகையறாக்களின் அடிப்படையில், பாஸ் இதோ உங்களுக்கு பிடித்த மோனிகா பெலுச்சி நடித்தப் படங்கள், மெஸ்ஸியின் சூப்பர் கோல்கள் என அல்காரிதம் அடிப்படையில் உங்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை ஒடிடி தளங்கள் பட்டியலிட்டு கொடுத்தும் விடுகிறது.

முன்பெல்லாம் காலையில் செய்தித்தாள்களையும் புத்தகங்களையும் மட்டுமே ரெஸ்ட் ரூமுக்குள் அனுமதித்த காலம் மாறி, ஒட்டுமொத்த உலகையும், சினிமாவையும், டாக்குமெண்டரிகளையும், அரசியலையும் அந்நேரத்திலும் பார்க்க ரசிக்க அனுமதித்திருக்கிறது டிஜிட்டல் தொழில்நுட்பம்.

இப்படி பொழுதுபோக்கு துறையில் உள்ளங்கையில் உலகத்தையே பார்த்து ரசிக்கும் புரட்சியை ஒடிடி தளங்கள் உருவாக்கி இருப்பதால், அவற்றின் வளர்ச்சி அசர வைக்கிறது. இதனால் இந்தியாவில் ஒடிடி தளங்களுக்கான மவுசு, நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவுக்கும் இருக்கும் மவுசை விட, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும் இருக்கும் ரவுசை விட பல மடங்காக அதிகரித்தப்படி இருக்கிறது.

இந்தியாவில் ஒடிடி தளங்கள் முக்கியத்துவம் பெறுகையில் அவற்றின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை கொஞ்சம் சுருக்கமாக பார்க்கலாம்.

over-the-top (OTT) content provider என்றழைக்கப்படும் ஒடிடி நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனம் எந்தவொரு நிறுவனமாகவும் இருக்கலாம். இந்நிறுவனம் இன்டர்நெட் மூலமாக கண்டுரசிக்க முடிகிற லைவ் ஸ்ட்ரீமிங் அல்லது ஸ்ட்ரீமிங் மீடியாவை மட்டுமே தங்களது தயாரிப்பாக வைத்திருக்கும். இந்நிறுவனங்களின் பட்டியலில் வழக்கமான தொலைக்காட்சிகளும் அடங்கும். காரணம் ஏற்கனவே சேட்டிலைட் சேனைல்களை வைத்திருக்கும் நிறுவனங்கள் இப்பொழுது கேபிள், சேட்டிலைட் டிவி சந்தா எதுவுமில்லாமல் லைவ் ஃபீட்களை அளிக்க ஆரம்பித்திருக்கின்றன.

இந்த கோதாவில் நெட்ஃப்ளிக்ஸ், அமேஸான் என ஒடிடி ஜாம்பவான்களும் களமிறங்கி இருக்கின்றன. இந்நிறுவனங்கள் ஒரிஜினல் ப்ரோக்ராம்கள், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பம் இருந்தால் சந்தா கட்டி பார்கும் ஆன் – டிமாண்ட் படங்கள், டிவி ஷோக்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் எந்நேரத்திலும் பார்க்கும் வகையில் அளிக்கின்றன. மேலும் இப்பட்டியலில் ஃபேஸ்புக், யூட்யூப் போன்ற நிறுவனங்களும் தங்களுடைய ஸ்ட்ரீமிங் தளங்களில் நிகழ்ச்சிகளை வழங்குகின்றன.

இப்படி ஹாலிவுட் படங்களை எடுக்கும் பெரும் ஸ்டூடியோக்களும், சேட்டிலைட் சேனல்களும், சோஷியல் மீடியா நிறுவனங்களும், டிஜிட்டல் காலத்திற்கேற்ற பாணியில் ஸ்ட்ரீமிங் மீடியாவாக தங்களை அப்டேட் செய்திருப்பதால் ஒடிடி துறை கடும் போட்டியில் அதகளமாகி இருக்கிறது.

போட்டி அதிகமிருப்பதால், பார்வையாளர்களை கவர்ந்திழுக்க சலுகைகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள், இதுவரை பார்த்திராத வகையிலான மேக்கிங், புதுமையான கதையம்சமுள்ள ஒரிஜினல்கள் என ஒடிடி மக்களுக்கு கிடா விருந்தைப் போல பொழுதுபோக்கின் மெகா விருந்தை அளித்து கொண்டிருக்கின்றன.
இதனால் இந்தியாவில் ஒடிடி-யின் வளர்ச்சி நாளுக்குநாள் புதுப்புது உச்சத்தைத் தொட்டுவருகிறது.

இந்தியாவில் முன்னணியில் இருக்கும் டாப் 5 ஒடிடி நிறுவனங்கள் ஒட்டுமொத்த ஒடிடி தளத்தில் 86% பங்களிப்பை வைத்திருக்கின்றன. டிவி சேனல்களாக மாஸ் காட்டும் சோனி லைவ், ஸீ5 இவை இரண்டும் மீதமுள்ள 14%-ஐ கைப்பற்றி இருக்கின்றன.

2023-ம் ஆண்டில் இந்தியாவில் ஒடிடி மார்கெட் சுமார் 11,944 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2018-ல் வெறும் 2,590 கோடிதான் என்பதையும் கணக்கில் கொள்க என்கிறது கேபிஎம்ஜி மற்றும் எஃப்.ஐ.சி.சி.ஐ-யின் அறிக்கை. அதாவது ஒடிடி தளங்களின் ஒட்டுமொத்த வருடாந்திர வளர்ச்சி 36% என ஆச்சர்யமூட்டுகிறது.

இந்தியாவில் ஒடிடி தளங்களின் மார்கெட் ஷேர் நிலவரம் – 2022
ஃப்ராஸ்ட் & சல்லிவன் நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில், 2020-ம் ஆண்டில் இந்திய ஒடிடி வீடியோ மார்கெட் 22.62 பில்லியன் ரூபாயை வருவாயாக ஈட்டியிருக்கிறது. 2025-ல் இந்த வருவாய் அப்படியே தடாலடியாக 93.67 பில்லியனாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒடிடி-யின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம் இந்தியாவில் இன்டர்நெட் மற்றும் மொபைல் போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவது.

இதனால் 2022-ல் இந்தியாவில் இன்டர்நெட்டை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 627 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல் மொபைல் போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 1 பில்லியனை தொட்டிருக்கிறது என தெரிய வந்திருக்கிறது.

இந்த இரு அம்சங்களையும் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் இளவட்டங்கள்தான். இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் 15 வயது முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 84% பேர். இந்த 84% பேரும் ஸ்மார்ட்போனை குளிக்கும் போது கூட பாத்ரூமிற்கு ஸ்மார்ட்போனை எடுத்து செல்பவர்கள்.

ஒடிடி-க்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், களத்தில் யார் முந்தியிருக்கிறார் என்பதை கண்டறிய ஆன்லைன் வீடியோ ட்ரெண்ட்ஸ் மற்றும் ஒம்டியா கன்ஸ்யூமர் ரிசர்ச் இணைந்து மேற்கொண்ட ஆய்வை அடிப்படையாக வைத்து 2022-ல் முன்னணியில் இருக்கும் ஒடிடி தளங்களைப் பட்டியலிட்டிருக்கின்றன.
இந்திய மார்கெட் ஷேரில் முன்னணியில் இருக்கும் ஒடிடி தளங்கள் அவற்றின் பங்களிப்பு பட்டியல்

Disney+Hotstar 41%
Eros Now 24%
Amazon Prime Video 9%
Netflix 7%
ZEE5 5%
ALTBalaji 5%
SonyLIV 3%

இந்தியாவில் ஒடிடி தளங்கள் நிறையவே இருக்கின்றன. டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அமேஸான் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ் போன்ற கில்லாடிகள் இருக்கின்றன. இந்நிறுவனங்களைத் தவிர்த்து, YuppTV, Sony Liv, Viu, ALT Balaji, SONYLIV, HOOQ, Eros Now, Bigflix, ZEE5, Voot, Jio Cinema, Jetty Media, ARY Digital, Sportskeeda, Adda என பட்டியல் நீள்கிறது. இந்த ஒடிடி தளங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கான ப்ரத்யேக நிகழ்ச்சிகளை வைத்திருக்கின்றன.

சமீபத்திய அறிக்கை ஒன்றின்படி 2022-ல் முன்னணி ஒடிடி தளங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பின்வருமாறு இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
2022-ல் இந்தியாவில் ஏறக்குறைய 45 கோடி ஒடிடி வாடிக்கையாளர்கள் இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

OTT நிறுவனம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை

Disney+Hotstar 14 crores
Amazon Prime Video 6 crores
Netflix 4 crores
ZEE5 3.7 crores
SonyLIV 2.5 crores

மீடியா பார்ட்னர்ஸ் ஏஷியா [Media Partners Asia (MPA)]-ன் இந்த அறிக்கை 2022-ல் இந்தியாவில் ஒடிடி மார்க்கெட்டின் மதிப்பு 5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயரும் என தெரிவிக்கிறது. இந்த வளர்ச்சிக்கு காரணம் ப்ராட்பேன்ட் பயன்பாடு பரவலாக அதிகரித்து இருப்பது, மலிவான கட்டணத்தில் டேடா கிடைப்பது, ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது எகிற ஆரம்பித்திருப்பது.

இதன் விளைவாகவே 2018-ல் டிஜிட்டல் மீடியா படைப்புகளைப் பார்க்க செலவிடும் மொத்த நேரத்தில் ஒடிடி சேவைகளைப் பார்த்து ரசிக்கும் நேரத்தின் அளவு சுமார் 20% ஆக இருந்ததது. 2022-ல் 50% அதிகரித்து இருக்கிறது.

இந்தியாவில் ஆன்லைன் வீடியோ பயன்படுத்துவது தற்போது வெறும் 10% மட்டுமே என்கிறார்கள். இது அதிகரிக்கும் போது ஒடிடி. ஒவ்வொரு இந்தியரின் வீட்டிலும் கட்டாய விருந்தாளியாக ப்ராட்பேன்ட் டேடாவை மளமளவென கபளீகரம் செய்து கொண்டு சிரிக்க வைக்கும், அழ வைக்கும். காதல் செய்ய வைக்கும். கவலைகளை மறக்க வைக்கும்.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...