No menu items!

Gujarat Results – சொல்வது என்ன?

Gujarat Results – சொல்வது என்ன?

ஏழாவது முறையாக குஜராத்தில் பாஜக வென்றிருக்கிறது. இந்த முறை மிகப் பெரிய வெற்றி. 182 தொகுதிகளில் 154 தொகுதிகளில் பாஜக வெல்லும் என்று இப்போதைய செய்திகள் கூறுகின்றன. இதற்கு முன்பு 1985ல் காங்கிரஸ் 149 தொகுதிகளில் வென்றிருக்கிறது. அதுதான் அதிக எண்ணிக்கையாக இருந்தது. இப்போது பாஜக குஜராத்தில் வரலாற்றை மாற்றியிருக்கிறது.

குஜராத்தில் பாஜக வெல்லும் என்பது எதிர்பார்க்கப்பட்ட செய்திதான். ஆனால் குஜராத் தேர்தலில் வேறு சில அரசியல் ஆர்வங்கள் இருந்தன. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்தத் தேர்தல் இருக்கும் என்பதால் ஆர்வம் சற்று அதிகமாகவே இருந்தது.

பாஜக எத்தனை தொகுதிகளில் வெல்லும்? மெல்லிய மெஜாரிட்டியில் ஆட்சியைப் பிடிக்குமா? மோடி மேஜிக் இன்னும் வேலை செய்கிறதா? ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக குஜராத் தேர்தலில் போட்டியிடுகிறது. அது எத்தனை இடங்களில் வெல்லும்? ஆம் ஆத்மி வரவு யாருக்கு பாதிப்பு? ராகுல் யாத்திரை போய்க் கொண்டிருக்கிறார், கூட்டங்களைத் திரட்டுகிறார் அதன் தாக்கம் தேர்தலில் இருக்குமா? காங்கிரசால் பிழைத்திருக்க முடியுமா? இப்படி ஏகப்பட்ட உப கேள்விகள் இருந்தன.

அத்தனைக்கும் விடை கிடைத்திருக்கிறது.

குஜராத்தில் பாஜகவின் பரப்புரையைப் பொறுத்தவரை ஒரே ஒரு ஹீரோதான். அவர் மோடி. அவரை மட்டுமே மையப்படுத்தி தேர்தல் பரப்புரை நடந்தது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால் அது டபுள் என்ஜின் ஆட்சியாக மாநிலத்தை முன்னேற்றும் என்பது மோடியின் கோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட 31 கூட்டங்களில் மோடி பேசினார். கூட்டங்களில் பேசியது மட்டுமில்லாமல் எண்ணற்ற சாலை வழி பிரச்சாரங்களையும் மேற்கொண்டார். 2017 சட்டப் பேரவைத் தேர்தலில் கூட மோடி இந்த அளவு களமிறங்கி தேர்தல் பணிகள் செய்ததில்லை.

தனது வெற்றியின் மேல் பாஜகவுக்கே சந்தேகங்கள் இருந்ததால்தான் மோடியும் அமித்ஷாவும் இத்தனை தீவிரமாய் குஜராத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். உள்ளூர் தலைவர்கள் யாரையும் முன்னிறுத்தாமல் மோடி மட்டுமே முன்னிறுத்தப்பட்டார். மண்ணின் மைந்தன் நாட்டின் பிரதமர் கேட்டார். குஜராத் மக்கள் அவருக்கு வாக்கைக் கொடுத்திருக்கிறார்கள்.

பாஜகவுக்கு காங்கிரஸ் மீது பயமில்லை. ஆம் ஆத்மி மீது இருந்தது. பஞ்சாப்பில் கோட்டைவிட்டது போல் கோட்டை விட்டு விடக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருந்தது. 27 வருடங்கள் ஆட்சியிலிருந்தும் மக்களுக்கு இன்னும் அந்த ஆட்சி அலுக்கவில்லை என்பது இந்த பிரமாண்ட வெற்றியிலிருந்து தெரிகிறது. சமீபத்தில் குஜராத்தில் மோர்பி பகுதியில் பாலம் அறுந்து விழுந்து 130க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அங்கும் பாஜகதான் முன்னிலை என்றால் மோடிக்கு இருக்கும் செல்வாக்கைப் புரிந்துக் கொள்ளலாம்.

பாஜகவின் இந்த பிரமாண்ட வெற்றிக்கு மோடி மட்டுமே காரணமல்ல. ஆம் ஆத்மியும் ஒரு காரணம். பாஜகவுக்கு எதிரான வாக்குகள் முன்பு காங்கிரசுக்கு மட்டுமே சென்றுக் கொண்டிருந்தன. இந்த முறை அது பிளந்து ஆம் ஆத்மிக்கும் சென்றிருக்கிறது. எதிர் வாக்குகள் இரண்டாக உடைந்ததும் பாஜகவுக்கு சாதகமாக இருந்தது.

குஜராத்தில் இஸ்லாமியர்கள் அதிகம். ஆனால் ஒரு இஸ்லாமிய வேட்பாளரைக் கூட பாஜக நிறுத்தவில்லை. அதனால் இஸ்லாமியர் வாக்குகள் காங்கிரஸுக்கு வரும் என்பதுதான் பழைய அரசியல் கணக்கு. ஆனால் இந்த முறை அது நிகழவில்லை. ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி இஸ்லாமிய வாக்குகளைப் பிரித்தது. காங்கிரசுக்கு முழுமையாக செல்ல வேண்டிய இஸ்லாமிய வாக்குகள் ஓவைசி கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பிரிந்து சென்றது. குஜராத்தில் 17 தொகுதிகளில் இஸ்லாமிய வாக்குகள் அதிகம். அதில் 12ல் பாஜக முன்னணி. இதற்கு காரணம் இஸ்லாமிய வாக்குகள் பிரிந்தது.

2002 குஜராத் கலவரத்தின்போது நடந்த பயங்கரத்தில் பில்கிஸ் பானு என்ற இஸ்லாமியப் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குழந்தை கொல்லப்பட்டது. அவருடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டார்கள். 11 குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தது. அந்த 11 குற்றவாளிகளும் இந்த வருடம் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் விடுதலையை காங்கிரஸ் எதிர்த்தது. பாஜக வரவேற்றது.

இஸ்லாமியர்களுக்கு ஆதரவு நிலையை எடுத்த காங்கிரஸுக்கு இஸ்லாமியர் வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. மாறாக காங்கிரசின் இந்த நிலைப்பாட்டை இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாடாக மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது. இது பாஜகவுக்கு பலமாகவும் காங்கிரசுக்கு பலவீனமாகவும் அமைந்தது.

காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி பஞ்சாப்பில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைத்துவிட்டோம், அதனால் குஜராத்திலும் வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் களமிறங்கியது ஆம் ஆத்மி. ஆனால் தேர்தல் நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் மீது ஊழல் புகார்கள் வெளிவரத் தொடங்கின. இது ஆம் ஆத்மிக்கு சங்கடத்தைக் கொடுத்தது. மக்களுக்கு அவர்கள் மீதான நம்பிக்கையை தகர்த்தது.

பாஜகவுக்கு மோடி, அமித்ஷா போல் காங்கிரசுக்கு யாருமில்லை என்பது அந்தக் கட்சியின் பரிதாப நிலை. ஆனால் சூழலை உணர்ந்த ராகுல் காந்தி புத்திசாலித்தனமாக நடந்துக் கொண்டார். இரண்டே இரண்டு தேர்தல் கூட்டங்களில்தான் கலந்துக் கொண்டார். ராகுல் பல கூட்டங்களில் கலந்துக் கொண்டு தேர்தலில் இத்தனை மோசமாக தோற்றிருந்தால் மொத்தப் பழியும் ராகுல் மீது விழுந்திருக்கும். அந்த வகையில் குஜராத் தேர்தலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி நின்றதால் ராகுல் அதிக பாதிப்பு இல்லாமல் தப்பித்துக் கொண்டார்.

குஜராத்தில் பாஜகவுக்கு பெரிய வெற்றி… ஆனால் இமாச்சலபிரதேசத்தில் ஆட்சியை இழந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இது காங்கிரசுக்கு ஆறுதல் பரிசு.

இமாச்சலப்பிரதேச தேர்தல் வரலாறு கிட்டத்தட்ட தமிழ்நாடு மாதிரிதான். ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறி மாறி வாக்களிப்பார்கள். போன முறை பாஜகவுக்கு இந்த முறை காங்கிரசுக்கு. அடுத்த ஐந்தாண்டுகளில் மீண்டும் மாறலாம். கிடைத்த ஆட்சியை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது எம்.எல்.ஏ.க்கள் வளைக்கப்பட்டு பாஜக ஆட்சியாக விரைவில் மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குஜராத், இமாச்சலப் பிரதேசம் தாண்டி நாட்டில் சில இடைத் தேர்தல்களும் நடந்திருக்கின்றன.

உத்தரப்பிரதேசத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடந்தது. இதில் நாடாளுமன்றத் தொகுதியில் சமஜ்வாதி கட்சி வென்றிருக்கிறது. இந்தத் தொகுதியில் முலாயம் சிங் யாதவின் மருமகளும் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் வென்றிருக்கிறார். சட்டமன்றத் தொகுதியில் பாஜக வென்றிருக்கிறது.

பீகார் இடைத் தேர்தலிலும் பாஜக முன்னிலையில் இருக்கிறது. ராஜஸ்தான் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் வெற்றி பெறும் நிலையில் இருக்கிறது.

இன்று வெளியான தேர்தல் முடிவுகள் சில உண்மைகளை உணர்த்துகின்றன.
பிரதமர் மோடி இன்றும் அசைக்க முடியாத தலைவராக இருக்கிறார்.
எதிர்க் கட்சிகள் பிரிந்து நிற்பது பாஜகவுக்கு சாதகமாக இருக்கிறது.
எதிர்க் கட்சிகளில் மக்களுக்கு நம்பிக்கை தரக் கூடிய தலைவர் இல்லை.

காங்கிரஸ் இன்னும் முழுமையாக பலத்தை இழக்கவில்லை.

ஆம் ஆத்மி தேசியக் கட்சி அந்தஸ்த்தை பிடித்திருக்கிறது.

இந்த பிரமாண்ட வெற்றியினால் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த பாஜக முடிவெடுக்கலாம்.

என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...