No menu items!

தனிமையாகும் பாலா! – விக்ரம், சூர்யாவுடன் நடந்த பிரச்சினைகள்

தனிமையாகும் பாலா! – விக்ரம், சூர்யாவுடன் நடந்த பிரச்சினைகள்

‘வணங்கான்’ பட விஷயத்தில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே நடந்திருக்கும் மறைமுக பனிப்போர் தமிழ் சினிமாவில் இன்று பேசுபொருளாகி இருக்கிறது.

சூர்யாவைக் காயப்படுத்தாத வகையில் பாலா ஸ்டேட்மெண்ட் விட்டாலும், அதில் உள்குத்தும் இருக்கிறது.

அதாவது கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்தக் கதை தம்பி சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும், இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அன்ணனாக என்னால் ஒரு சிறு தர்மச்சங்கடமும் நேர்ந்துவிடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. இதனாலேயே ‘வணங்கான்’ படத்திலிருந்து சூர்யா விலகிக் கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒரு மனதாக முடிவெடுத்து இருக்கிறோம் என நீள்கிறது பாலாவின் ஸ்டேட்மெண்ட்.

அப்படியென்றால் என் கதைக்கான நாயகன் தம்பி சூர்யா இல்லை என்பது போன்ற ஒரு கருத்தைதான் முன்வைத்து இருக்கிறார் பாலா. கமர்ஷியல் ஹீரோவாக முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர், எனக்கு கதை ஒகே. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதில் நான் நடிக்கிறேன் என்று முன்வரும்போது இயக்குநர் அதை மறுப்பது ஏன்?

ஒருவேளை தனது கதையின் மீது பாலாவுக்கு நம்பிக்கை இல்லையா, இந்த கதை தம்பிக்கு பொருத்தமாக இருக்காது என்பது ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூல் முடிந்தபிறகுதான் இயக்குநருக்கு தெரிய வந்திருக்கிறது என்றால் பாலா குழப்பத்தில் இருக்கிறாரா என்று பல கேள்விகள் இங்கே எழுந்திருக்கின்றன.

இப்பொழுதுதான் பாலாவுக்கு சூர்யாவுடன் ஒரு உரசல் வந்திருக்கிறது.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பே பாலாவுக்கும், விக்ரமுக்கும் இடையே இதேபோல் ஒரு பிரச்சினை உருவானது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
விக்ரமைப் பொறுத்தவரை ‘சேது’ படம் மூலம் பாலா திருப்புமுனையைக் கொடுத்தவர். ‘பிதாமகன்’ மூலம் சினிமா வாழ்வை உயரத்திற்கு அழைத்துச் சென்றவர்.

இந்த மதிப்பும் மரியாதையும் இருந்ததாலேயே தனது மகன் துருவ் அறிமுகமாகும் படம் ஒரு ரீமேக் படமாக இருந்தாலும் கூட அதை பாலாதான் இயக்கவேண்டுமென்று விரும்பினார்.

அப்படிதான் தெலுங்கில் சக்கைப் போடு போட்ட ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காக ‘வர்மா’வை இயக்க பாலா கமிட்டானார்.

படம் முழுவதும் தயாரான பிறகு அதைப் பார்த்ததும், திருப்தி இல்லை என்று அப்படியே கிடப்பில் போட்டது தயாரிப்பாளர் தரப்பு.

‘என்னுடைய படைப்பு சுதந்திரம் பாதிக்கப்பட்டதாலேயே ‘வர்மா’ படத்திலிருந்து வெளியேறுவதாக பாலா கூறினார். அதோடு விட்டுவிடவில்லை. தான் ஷூட் செய்த எந்தவொரு காட்சியும் புதிதாக எடுக்கவிருக்கும் ரீமேக்கில் இடம்பெறக்கூடாது என விக்ரமுக்கு பாலா லீகல் நோட்டீஸையும் அனுப்பினார்.

மீண்டும் அப்படம் முதலில் இருந்து ஷூட் செய்யப்பட்டது.

இந்தப் பிரச்சினையில் பாலாவிடம் விக்ரம் தனிப்பட்ட முறையில் பேசினாராம். என்னுடைய மகன் படம். என்னைப் போலவே அவனுக்கும் உங்களால் ஒரு ப்ரேக் வேண்டும். அதனால் சுமூகமாக போகலாம் என்று மனம்விட்டு சொன்னாராம். ஆனால் பாலா இதை காதுகொடுத்து கேட்கவே இல்லை என்று சொல்கிறார்கள்.

‘எனக்கு நீயெல்லாம் அட்வைஸ் பண்றீயா’ என்கிற ரீதியில் பாலா விக்ரமை உதாசீனப்படுத்தியதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.

இதனால், வேறு வழியே இல்லாமல் விக்ரம் தைரியமான முடிவு எடுக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டாராம்.

தயாரிப்பாளருக்கு எந்தவித நெருக்கடியும் வந்துவிடக்கூடாது என விக்ரம் தனது சொந்தப் பணத்திலிருந்து 5 கோடியை தயாரிப்பாளர் தரப்பிற்கு கொடுத்த பிறகுதான் இந்த பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்தது என்கிறார்கள்.

அப்பொழுது விக்ரம் 5 கோடி தயாரிப்பாளருக்கு கொடுத்தார். ரொம்பவே கறாராக இருக்கும் பாலா, தன் கதைதான் சரியில்லை. ஆனால் சூர்யா நடிப்பதற்கு தயாராக இருக்கிறார் என்பதால் இதுவரை ‘வணங்கான்’ படத்தை எடுக்க ஆன செலவை சூர்யாவுக்கு திருப்பிக் கொடுப்பாரா என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

பாலாவுக்கு தோள் கொடுப்பார்கள் என்று எல்லோராலும் நம்பப்படும் விக்ரம் சூர்யா இருவரும் இன்று பாலாவுடன் இல்லை. நண்பனாக எல்லா நேரங்களிலும் தோள் கொடுத்த அமீரும் இல்லை. ஒரு உடன்பிறவா தம்பியாக இருந்த சசி குமாருக்கும் இதேபோல் நடக்க அவரும் இல்லை.

இன்று பாலா தனிமையாகி இருக்கிறார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...