No menu items!

புத்தகம் படிப்போம்: கோட்டோவியம் மனோகர் தேவதாஸ்

புத்தகம் படிப்போம்: கோட்டோவியம் மனோகர் தேவதாஸ்

மதுரை மற்றும் சென்னையின் பாரம்பரிய கட்டடங்களை உயிர்ப்புமிக்க, அட்டகாசமான கோட்டுச் சித்திரங்களின் மூலம் காட்சிப்படுத்தியவர் என்ற வகையில் பிரபலமாக அறியப்பட்டவர், மனோகர் தேவதாஸ். குறிப்பாக 1950களின் மதுரையை தனது ஓவியங்களிலும் எழுத்திலும் ஆவணப்படுத்தியதன் மூலம் தமிழ்நாடு கடந்தும் கவனம் பெற்றவர். இவரது நூல்கள் தமிழர்கள் ஒவ்வொருவரும் பார்த்து பாதுகாக்க வேண்டியவை.

செப்டம்பர் 10, 1936 அன்று பிறந்த மனோகர் தேவதாஸின் குழந்தைப் பருவம் மதுரை வடக்கு மாசி வீதியில் கழிந்தது. சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து 1953இல் பள்ளிக் கல்வியை முடித்தார். ஆறாம் வகுப்பு படிக்கும்போது ‘பெர்ஸ்பெக்டிவ் ஆர்ட்’ மீது மனோகர் தேவதாஸுக்கு ஈடுபாடு ஏற்பட்டது. கடினமான கலையான கோட்டுச் சித்திரங்களை வரைவதென்பது அப்பருவத்திலேயே அவருக்கு எளிதாக கை வந்தது. குறிப்பாக பாரம்பரிய கட்டடங்களை ஓவியமாக வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அதுவே அவரது தனிச் சிறப்பாகவும் அமைந்தது.

கல்லூரிப் படிப்பை அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்தார். வடக்கு மாசி வீதி – சேதுபதி மேல்நிலைப் பள்ளி – அமெரிக்கன் கல்லூரி – வைகை நதி என அமைந்த தன் அக்கால வாழ்வை ‘The Green Well Years’ என்ற தன் நாவலில் எழுத்திலும் ஓவியங்களிலும் அற்புதமாக ஆவணப்படுத்தியுள்ளார், மனோகர் தேவதாஸ்.

The Green Well Yearsஇலும் அதனைத் தொடர்ந்து வந்த Multiple Facets of My Madurai நூலிலும் மதுரையின் மரபான கட்டடங்களை, வீடுகளை அவற்றின் பல்வேறு பரிமாணங்களோடு கருப்பு – வெள்ளை கோட்டுச் சித்திரங்களில் துல்லியமாக காட்சிப்படுத்தியுள்ளார். அவற்றைப் பார்க்கும்போது அந்த காலகட்டத்துக்கே நாம் சென்றுவிடுவோம்.

மனோகர் தேவதாஸின் ஓவியங்களில் கட்டடங்களுக்கு அடுத்தபடியாக கோபுரங்கள் பிரதானமான இடங்களை வகிக்கின்றன. கோவில் கோபுரங்களை வரைவது மிகச் சிக்கலானது; பெரும் உழைப்பை வேண்டுவது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், அவரது கோட்டோவியங்கள் கேமிரா கருவிகளுக்கு சவால் விடும். 

மனோகர் தேவதாஸின் 30ஆவது வயதுக்கு பின்னர் அவரது வாழ்வில் புயல் வீசத் தொடங்கியது. ஒரு மனிதன் தன் வாழ்வில் எதிர்கொள்ளவே முடியாத பல துயரங்களை எதிர்கொண்டார். தனது 9ஆவது திருமண நாளை கொண்டாடி முடித்த மூன்றாம் நாள் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தில் அவரது காதல் மனைவி மஹிமாவின் கழுத்துக்குக் கீழ் முற்றிலும் செயலிழந்துவிட்டது. அவரது வாழ்க்கை சக்கர நாற்காலியில் முடங்கியது. இன்னொரு பக்கம் மனோகர் தேவதாஸை ‘ரெட்டினிடிஸ் பிக்மென்டோசா’ என்ற கண் பார்வைக் குறைபாடு நோய் தாக்கியது. அவர் பார்வையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கினார்.

மனோகர் தேவதாஸின் பாதிப்பு, அவரது மனைவிக்கு ஏற்பட்ட பாதிப்பு இரண்டுமே மருத்துவத்தால் சரிசெய்ய முடியாதவை. அந்த பிரச்சினைகளோடே அவர்கள் வாழ்ந்தாக வேண்டிய நிர்பந்தம். ஆனால், இவற்றுக்கு மத்தியில்தான் இன்று நாம் அவரைப் போற்றும் நுணுக்கமான ஓவியங்களை தொடர்ந்து வரைந்து வந்தார். ஆம், மங்கிவந்த கண் பார்வை, கழுத்திற்குக் கீழ் செயலிழந்த மனைவியை பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம், கலையின் மீதான அவருடைய ஆர்வத்தைத் தடுக்கவில்லை, அவரும் முடங்கிவிடவில்லை.

கண் பார்வை குறையக் குறைய வண்ணப் படங்களை வரைவதை தவிர்த்துவிட்டு கோட்டுச் சித்திரங்களை மட்டும் வரைந்தார். தொடர்ந்து கண் பார்வை மங்கிக்கொண்டே வர, அந்தந்த கட்டடங்களுக்கு முன்பாகவே அமர்ந்து பென்சில் ஸ்கெட்ச்கூட போடாமல் அப்படியே பேனாவால் வரைந்தார். கண் பார்வை மேலும் குறைய க்ராஃப் ஷீட்டில் வரைய ஆரம்பித்தார். கண் பார்வை மேலும் குறைந்து இனி அவை அவருக்கு உதவாது என்ற நிலை வந்த காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் வரைவதை தொடர்ந்தார். அரவிந்த், சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனைகள் இதற்கு ஆதரவாக இருந்தார்கள். + 27 பவர் உடைய கண்ணாடியை அவருக்கு அணிவித்தார்கள்.

அதைப் பயன்படுத்தி சிறிதுகாலம் வரைந்தார். கட்டங்களை போட்டோக்கள் எடுப்பார். ஆனால், அது அவுட்லைனுக்கு மட்டும்தான் பயன்படும். போட்டோக்களில் நுணுக்கங்கள் தெரியாது. அதனால், கட்டட நுணுக்கங்களைத் தனித்தனியாகப் பார்த்து, தனித்தனியாக ஸ்கெட்ச் வரைந்து, வீட்டிற்கு வந்து எல்லாவற்றையும் ஒன்றாக இணைப்பார்.

+27 பவர் கண்ணாடியாலும் உதவ முடியாத ஒரு நாள் வந்தது. மனோகர் தேவதாஸின் 83 வயதில் அவரது பார்வை முற்றிலும் பறிபோனது. ஆனால், கலையை பறிகொடுக்கவில்லை மனோகர். பார்வையை முழுமையாக இழந்த நிலையில்தான், சென்னையின் பாரம்பரியமிக்க, கலைநயமிக்க கட்டங்களின் கோட்டுச் சித்திரங்கள், அந்தக் கட்டடங்கள் குறித்த வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய Madras Inked: Impressions of an artist புத்தகத்தை வெளியிட்டார்.

இந்தப் புத்தகத்தில் உள்ள ஓவியங்கள் 1959 – 2012 ஆண்டுகள் இடைவெளியில் அவ்வப்போது வரையப்பட்டவை. மனோகரும் மஹிமாவும் சேர்ந்து Heritage Monument cards for Charity என்ற பெயரில் வாழ்த்து அட்டைகளை வெளியிட்டு வந்தார்கள். படங்களை மனோகர் வரைந்தார். மஹிமா அந்தப் படங்களில் உள்ள கட்டங்கள் பற்றிய குறிப்புகளை எழுதினார். அந்த வாழ்த்து அட்டைகள் விற்றுவந்த வருமானத்தை தர்மகாரியங்களுக்கு செலவழித்தார்கள்.

வாழ்த்து அட்டைகளுக்காக வரைந்த இந்த ஓவியங்களை புத்தகமாக கொண்டு வரலாம் என்று மனோகர் எப்போதும் எண்ணியதில்லை. இந்நிலையில், அவற்றை எல்லாம் தொகுத்து புத்தகமாக கொண்டு வரலாம் என்ற கட்டடக்கலை நிபுணர் சுஜாதா சங்கர் ஆலோசனையை ஏற்று அவருடன் சேர்ந்துதான் இந்த நூலை உருவாக்கினார். இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறிப்புகளை தீவிரமான ஆராய்ச்சிகள் செய்து எழுதியுள்ளார் சுஜாதா சங்கர். சென்னை குறித்து சென்னைவாசிகளுக்கே தெரியாத பல விஷயங்கள் இந்த குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன. கட்டடங்களை வரைந்த பின்னணி குறித்து மனோகர் எழுதியுள்ள குறிப்புகளும் முக்கியமானவை.

‘மெட்ராஸ் இங்க்ட்’ நூலுக்குப் பிறகு Challenges, Resilience & Triumph என்ற தலைப்பில் தன் மனைவி மஹிமாவைப் பற்றிய நூலை வெளியிட்டார். மனோகருக்கும் மஹிமாவுக்கும் இடையிலான அதீத காதலும், அந்த காதலுடன் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் கொண்ட காவியம் இது. உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியை அவரது இறுதிக்காலம் வரை அன்புடன் கவனித்துக்கொண்ட மிகச் சிறந்த காதலனாக இதில் வெளிப்படுகிறார் மனோகர்.

பார்வையை முழுமையாக இழந்து, காதல் மனைவியையும் இழந்தபின்னர் தன்னந்தனியாய் வாழ்ந்து வந்தார். கலைஞனாக மட்டுமின்றி உயர்ந்த மனிதராகவும் இருந்த மனோகர் தேவதாஸ், இக்காலகட்டத்தில், தனது காதல் மனைவி மஹிமா பெயரில் தொண்டு நிறுவனம் தொடங்கி, கிராமப்புற மக்களின் கண் சிகிச்சைக்கு உதவி வந்தார். இந்நிலையில், 2020ஆம் ஆண்டு மனோகர் தேவதாஸுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

தனது இறுதி காலத்தில், சென்னை சாந்தோம் நகரில் பாபனாசம் சிவன் சாலை இல்லத்தில் வசித்து வந்த மனோகர் தேவதாஸ், 86ஆவது வயதில் கடந்த புதன்கிழமை (7-12-2022) காலையில் காலமானார். மனோகர் மறைந்தாலும் அவரது கலைப் படைப்புகள் காலத்தை வென்று வாழும்.

மனோகர் தேவதாஸ் நூல்கள்

எனது மதுரை நினைவுகள்

நிறங்களின் மொழி

பட்டாம்பூச்சியும் மஹிமாவும்

The Green Well Years

Multiple Facets of My Madurai

A Poem to Courage

From an Artist’s Perspective

Dreams, Seasons & Promises

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...