இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா ஆடாமல் இருக்கலாம். ஆனால் இதன் ஒவ்வொரு ஆட்டங்களிலும் இந்தியர்களின் பங்களிப்பு வெகுவாக உள்ளது. ஒரு பக்கம் இப்போட்டிகள் நடக்கும் மைதானங்களை கட்டியதில் இந்திய கட்டிடத் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகம் என்றால் மறுபக்கம் உலகக் கோப்பையை பார்க்கவரும் வெளிநாட்டு ரசிகர்களின் எண்ணிக்கையிலும் இந்தியர்கள் அதிகமாக இருக்கிரார்கள்.
ஒவ்வொரு போட்டியையும் காணவரும் ரசிகர்களில் 9 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இதன்படி இப்போட்டியைக் காணவரும் வெளிநாட்டு ரசிகர்களைப் பொறுத்தவரை இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது. இப்பட்டியலில் சவுதி அரேபியா (11 சதவீதம்) முதல் இடத்திலும், அமெரிக்கா (7 சதவீதம்) 3-வது இடத்திலும் உள்ளன.
இந்த பெருமைகளுக்கெல்லாம் உச்சகட்டமாக உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தின்போது, மைதானத்தில் உலகக் கோப்பையை திறந்துவைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இதற்காக அவர் அடுத்த வாரம் கத்தார் செல்கிறார்.
இந்தியர்களின் கின்னஸ் சாதனை
உலகக் கோப்பை கால்பந்தை முன்னிட்டு கத்தாரில் உள்ள கடாரா என்ற நகரில் மிகப்பெரிய காலணி ஒன்று உருவ்வாக்கப்பட்டு சாலை ஓரத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சாதாரண காலணிகளை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களை வைதே இந்த காலணி தயாரிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை காணவரும் ரசிகர்கள் பலரும் கடாரா நகருக்கு சென்று இந்த காலணியையும் ரசிக்கிறார்களாம்.
17 அடி நீளம், 7 அடி உயரம் கொண்டுள்ள இந்த காலணியின் எடை 500 கிலோ. , உலகைன் மிகப்பெரிய கால்பந்து காலணி என்ற சாதனையுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இந்த காலணியை செய்தவர்கள் நம் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இந்தியாவுக்கு பெருமையை தேடித் தந்துள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சுமார் 7 மாதங்கள் கடுமையாக உழைத்து இந்த கால்பந்தை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.
பிரேசிலின் வினோத ரசிகர்
பிரேசில் ஆடும் உலகக் கோப்பை போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் நீங்கள் வாலஸ் லெயிட்டை கண்டிப்பாக பார்க்க முடியும். பிரேசில் நாட்டின் சிறந்த டிரம்ஸ் இசைக் கலைஞரான இவர், கடந்த 1986-ம் ஆண்டுமுதல் ஒவ்வொரு உலகக் கோப்பை கால்பந்து தொடரிலும் பிரேசில் ஆடும் ஆட்டங்களின்போது பார்வையாளர் வரிசையில் அமர்ந்து டிரம்ஸ் இசைத்து வருகிறார்.
உலகக் கோப்பையில் பிரேசில் நாட்டின் ஒரு அடையாளமாகவே மாறிவிட்ட இவரது வயது 60. தன் வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள், எத்தனை வேலைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு உலகக் கோப்பையைக் காண பறந்து வருவதாகச் சொல்கிறார் வாலஸ் லெயிட்.
இந்த முறை பிரேசில் அணி நிச்சயம் உலகக் கோப்பையை வெல்லும் என்று நம்பும் அவருக்கு இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பிரேசிலை ஆதரிப்பதில் ரொம்பவே சந்தோஷம். அமெரிக்காவில் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் தொழில் செய்து வரும் இவர், அதில் கிடைக்கும் வருமானத்தை சேர்த்துவைத்து ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பை போட்டிகளை காணச் செல்வதாக கூறுகிறார்.