அதிகம் எதிர்பார்க்கப்படும் குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்திருக்கின்றன. இந்தக் கருத்துக் கணிப்புகள் தேர்தலுக்கு பிந்தைய – வாக்களித்த மக்களின் – எண்ணங்களை பிரதிபலிப்பவை. குஜராத்துடன் இமாச்சாலப் பிரதேசம் மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளும் வந்திருக்கின்றன.
குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி என்று அனைத்து கருத்துக் கணிப்புகளும் சொல்கின்றன. சுமார் 120 இடங்கள் முதல் 150 இடங்கள் வரை கிடைக்கும். இரண்டாமிடத்தில் காங்கிரஸ் 20லிருந்து 40 இடங்கள் வரையும், குஜராத் தேர்தலில் முழு வீச்சுடன் இறங்கியிருக்கும் ஆம் ஆத்மிக்கு 5 முதல் 20 இடங்கள் வரை கிடைப்பதற்கு வாய்ப்பிருப்பதாக இந்தக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எண்ணிக்கை மாறுகிறதே தவிர அனைத்து கணிப்புகளும் பாஜக வெற்றியை உறுதி செய்கின்றன. பாஜக வென்றால் அது குஜராத்தில் ஏழாவது தொடர் வெற்றியாகும். கடந்த 27 வருடங்களாக குஜராத்தை பாஜக ஆண்டு வருகிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் இத்தனை தெளிவான முடிவுகள் இல்லை. அங்கே பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் மெல்லிய வித்தியாசங்கள்தாம் இருக்கின்றன. அங்கே பாஜகவுக்கு 24 முதல் 38 இடங்களையும் காங்கிரசுக்கு 23 முதல் 40 இடங்கள் வரையும் கொடுக்கின்றன. ஆனால் பாஜக வெல்வதற்கான வாய்ப்புகள்தாம் அதிகம் என்கின்றன.
டெல்லி நகராட்சித் தேர்தலில் ஆம் ஆத்மிதான் வெற்றி பெறும் என்று அடித்துக் கூறுகின்றன கருத்துக்கணிப்புகள். ஆம் ஆத்மி 140 முதல் 170 இடங்களையும் பாஜக 70 முதல் 95 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பிருக்கிறதாம். காங்கிரசுக்கு மூன்றாவது இடம். 6 முதல் 10 இடங்களில் வெல்வதற்கு வாய்ப்பு.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கர்ண கடூரமாக ஏமாந்த தருணங்களும் இந்திய தேர்தல் வரலாற்றில் உண்டு.
2004ல் நாடாளுமன்ற பொதுத் தேர்தல். வாஜ்பாய் பிரதமராக இருந்த பாஜக ஆட்சி சிறப்பாக ஆண்டது என்ற கருத்து அப்போது நிலவியது. அந்தத் தேர்தலில் மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிதான் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜகவையே முன்னிறுத்தின. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 230 முதல் 275 இடங்களை வெல்லும், ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறின. ஆனால் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். அடுத்த பத்து வருடத்துக்கு மன்மோகன் சிங்தான் பிரதமர்.
2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் கருத்துக் கணிப்புகள் துல்லியமாக இல்லை. 230 முதல் 275 இடங்கள் வரை பாஜக கூட்டணி பிடித்து குறைந்த மெஜாரிட்டியில் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் பாஜக 300க்கும் மேற்பட்டு இடங்களில் வென்று பலமாகவே ஆட்சி அமைத்தது.
2017ல் பஞ்சாப் தேர்தலில் காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் கடுமையான போட்டி இருக்கும். ஆம் ஆத்மி அதிக அளவில் இடங்களை வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் ஆம் ஆத்மி பெற்றது 20 இடங்கள்தாம். காங்கிரஸ் 117 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது.
2020 பீகார் தேர்தலில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் வென்றது பாஜக கூட்டணி.
2015 டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் மற்றொரு உதாரணம். அந்தத் தேர்தலில் சிறிய மெஜாரிட்டியில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறின. அதற்கு முந்தைய வருடமான 2014ல் பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்திருந்ததால் பாஜகவுக்கு டெல்லியில் பலம் கூடியிருக்கிறது என்றன. கருத்துக் கணிப்புகள் சொன்னபடி ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது. ஆனால் மெல்லிய மெஜாரிட்டியில் அல்லா, மெகா மெஜாரிட்டியில். மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களில் ஆம் ஆத்மி வென்றது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தவறாக போவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.
இந்தக் கருத்துகணிப்புகள் குறைந்த அளவில் செய்யப்படுகின்றன. கருத்துக் கணிப்புகளில் பங்கு பெறுபவர்களின் எண்ணிக்கை குறைவு. அதனால் முடிவுகளை துல்லியமாக கணிக்க முடிவதில்லை.
கருத்துக் கணிப்பில் பங்கு பெறுபவர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக, உண்மையாக சொல்ல விரும்புவதில்லை. பல சமயங்களில் மாற்றி சொல்லுகிறார்கள். இதுவும் கருத்துக் கணிப்புகள் தோல்வியடைய ஒரு காரணம்.
கருத்துக் கணிப்பில் பங்கு பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் இருக்கும்போது அந்த எண்ணிக்கை அடிப்படையில் இடங்களை தீர்மானிக்கும் கணக்குகளை போடுபவர்களின் அரசியல் புரிதலும் திறமையும் முக்கியமானதாக மாறுகிறது. அதில் குறைகள் இருந்தாலும் கணிப்பு தடம் மாறுகிறது.
இப்படி சில கருத்துக் கணிப்புகள் குறி தப்பினாலும் பல கருத்துக் கணிப்புகள் நிஜமாகியிருக்கின்றன.