இந்திய பணக்காரர்கள் வரிசையில் 12 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளுடன் கவுதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பற்றிய விவரங்களை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அதானி குரூப் நிறுவன தலைவர் கவுதம் அதானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு 12 லட்சத்து 11 ஆயிரத்து 40 கோடி ரூபாய்.
இதுவரை இந்தியாவின் நம்பர்-1 பணக்காரராக இருந்த முகேஷ் அம்பானி, கடந்த ஆண்டு 5 சதவீத இழப்பை சந்தித்ததால் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் ராதாகிஷன் தாம்லனி 3-வது இடத்தில் உள்ளார். இவர்களை தொடர்ந்து சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் சைரஸ், ஜின்டால் குரூப் நிறுவனத்தின் சாவித்ரி ஜின்டால், ஆனந்த் மகேந்திரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும்- மேயர் பிரியா அறிவிப்பு
அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று சென்னை மாநகராட்சி ஆனையர் பிரியா அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா, “ஏரியா சபை கூட்டத்தை மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடம், கட்டிடங்களில் நடத்தலாம். டீ, பிஸ்கட், காபி போன்ற செலவினங்களை மாநகராட்சி ஏற்கும். அம்மா உணவகம் நஷ்டத்தில் இயங்கினாலும் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். எந்த வார்டுகளில் உள்ள அம்மா உணவகங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதோ அதை குறிப்பிட்டால் அவை ஆய்வு மேற்கொண்டு மேம்படுத்தப்படும்”? என்றார்.
இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் ஊழியர்களுக்கு வேலை
இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தில் 100 நிறுவனங்கள் கையொப்பமிட்டுள்ளன
ஐரோப்பியாவில் சில நாடுகள், ஊழியர்களிடம் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை வாங்கும் திட்டத்தை கொண்டு வந்து உள்ளன. பணி நேரம் அதிகமாக இருப்பதால் ஊழியர்கள் சிரமத்தை களைய அதே வேளையில் பணியும் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இங்கிலாந்தில் சோதனை ஓட்டமாக வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டம் கடந்த ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 6 மாதங்கள் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் சுமார் 3,300 ஊழியர்கள் பங்கேற்று பணியாற்றி வந்தனர். இதன் முடிவில் 88 சதவீத நிறுவனங்கள், இத்திட்டம் தங்கள் வணிகத்துக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன. 15 சதவீதம் உற்பத்தித்திறன் உயர்ந்துள்ளதாகவும், மற்ற பணிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தன.
இந்த நிலையில் இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தில் 100 நிறுவனங்கள் கையொப்பமிட்டுள்ளன. இந்த நிறுவனங்களில் சுமார் 2,600 பேர் பணியாற்றி வருகிறார்கள்.
4 நகரங்களில் டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம்
டிசம்பர் 1 முதல் சில்லரை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் நடத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக எஸ்பிஐ, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் ஆகிய நான்கு வங்கிகளில் அறிமுகமாகிறது. விரைவில் பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா, எச்டிஎப்சி வங்கி, கொடாக் மகேந்திரா வங்கியும் இணையவுள்ளன. மும்பை, டெல்லி, பெங்களூரு, புவனேஸ்வர் நகரங்களில் டிசம்பர் 1-ம் தேதியும், ஆமதாபாத், குவாஹத்தி, இந்தூர், லக்னோ, பாட்னா, சிம்லாவில் இதைத் தொடர்ந்தும் அறிமுகமாகவுள்ளது. இதன்மூலம் நாளை மறுநாள் முதல் ரூ. 1, 2, 5, 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்பிலான டிஜிட்டல் கரன்சிகள் புழக்கத்திற்கு வரவுள்ளன. 4 நகரங்களில் நடைபெறும் சோதனை ஓட்டத்தில் 8 வங்கிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.