No menu items!

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ சர்ச்சை: அன்று சாய் பல்லவி, இன்று நடாவ் லேபிட்

‘தி காஷ்மீர் பைல்ஸ்’ சர்ச்சை: அன்று சாய் பல்லவி, இன்று நடாவ் லேபிட்

ஆண்டுதோறும் அமைதியாக நடந்து முடியும் கோவா சர்வதேச திரைப்பட விழா இந்த ஆண்டு சர்ச்சையுடன் முடிந்துள்ளது. இந்த விழாவில் ‘பனோரமா’ பிரிவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரையிடப்பட்டதற்கு கடுமையான விமர்சனங்களை தேர்வுக்குழுத் தலைவர் நடாவ் லேபிட் வெளியிட்டதும், அவருக்கு இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நவோர் கிலோன் கண்டனம் தெரிவித்துள்ளதும்தான் சர்ச்சைக்கான காரணம்.

நடாவ் லேபிட் என்ன சொன்னார்? ஏன் அவருக்கு நவோர் கிலோன் கண்டனம் தெரிவித்தார்?

உலகளவில் பிரபலமான திரைப்பட விழாக்களில் கோவா திரைப்பட விழாவும் ஒன்று. ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் இதில் திரையிடப்படும். கோவா மாநில அரசும் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும் இணைந்து இந்த விழாவை நடத்துகிறது. இந்தாண்டு 53ஆவது கோவா திரைப்பட விழா நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்தாண்டு கோவா திரைப்பட விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்திய பனோரமாவில் 25 திரைப்படங்கள் மற்றும் 20 திரைப்படம் இல்லாத படங்கள் ஒளிபரப்பப்பட்டன.

‘இந்திய பனோரமா’ பிரிவில் தங்க மயில் விருதுக்காக போட்டியிட்ட மூன்று இந்திய படங்களில் விவேக் அக்னிஹோத்ரியின் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படமும் ஒன்று. இதனால் இப்படத்தை தேர்வுக் குழுவின் தலைவரான நடாவ் லேபிட் தேர்வுக் குழுவினருடன் சேர்ந்து பார்த்தார். ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்துக்கு விருது எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், நேற்று நிறைவு விழாவில் பேசிய நாடவ் லேபிட், “தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். சர்வதேச திரைப்பட விழாவைப் போன்ற மதிப்புமிக்க, கவரவம் வாய்ந்த இதுபோன்ற திரைப்பட விழாக்களின் கலைப் போட்டிப் பிரிவுக்குப் பொருத்தமற்ற, அருவருக்கத்தக்க, பிரசார பாணியிலான படம் இது. இந்த விழாவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரையிடப்பட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தத் திரைப்படம் எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும் மன உளைச்சலையும் தருகிறது. இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டதற்கு நாங்கள் வெளிப்படையாகவே அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறினார்.

இஸ்ரேலிய எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான நடாவ் லேபிட்டின் குறிப்பிடத்தக்க படங்களான ‘போலீஸ்மேன்’, ‘தி கிண்டர்கார்டன் டீச்சர்’ ஆகியவை ‘கோல்டன் பியர்’, ‘கான் ஜூரி’ விருதுகளை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

நடாவ் லேபிட் பேசிய வீடியோவை எதிர்கட்சியினர் சமூக வலைதளங்களில் வைரலாக்கியதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நவோர் கிலோன் ட்விட்டர் பக்கத்தில் நடாவ் லேபிட்டை கண்டித்தார். அதில், “நடாவ் லேபிட் நீங்கள் வெட்கப்படவேண்டும். இந்திய கலாசாரம், விருந்தாளி என்பவர் கடவுளைப் போன்றவர் எனக் கூறுகிறது. சர்வதேச திரைப்பட விழாவில் விருது தேர்வுக் குழுவில் பங்கேற்குமாறு இந்தியா உங்களுக்கு விடுத்த அழைப்பையும் உங்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை, மரியாதை, விருந்தோம்பல் ஆகியவற்றைத் தவறாகப் பயன்படுத்திவிட்டீர்கள்” என்று கூறியுள்ளார். இது இப்போது பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

இப்போது மட்டுமல்ல, கடந்த மார்ச் 11இல் வெளியான போதே ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ சர்ச்சைகளுடன் பிறந்த படம்தான். (Read: The Kashmir Files – பாஜகவின் 2024 தேர்தல் வியூகமா?)

இந்திய முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ரஷ்யாவில் தாஷ்காண்ட் நகரில் மரணமடைந்தது குறித்த ‘தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ்’ படத்தின் இயக்குநரான விவேக் அக்னிஹோத்ரி இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கெர், புனித் ஹிஸ்ஸார், பல்லவி ஜோஷி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

1990-களில் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக காஷ்மீரில் இருந்து வெளியேறிய இந்து பண்டிட்டுகள் பற்றிய கதைதான் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. டெல்லியில் வசிக்கும் ஒரு கல்லூரி மாணவர், தனது தாத்தாவின் அஸ்தியைக் கரைப்பதற்காக காஷ்மீரில் உள்ள சொந்த கிராமத்துக்கு செல்கிறார். தனது பெற்றோர் ஒரு விபத்தில் இறந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் கிருஷ்ணாவுக்கு, அங்கு சென்ற பிறகு காஷ்மீரில் இந்து பண்டிதர்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களும், அதில் தனது பெற்றோர் கொல்லப்பட்டதும் தெரியவருகிறது.

படம் வெளியானதும் இந்துத்துவ அமைப்புகள் வரவேற்றன. பாஜக நாடாளுன்ற கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “காஷ்மீர் விஷயத்தில் நீண்ட நாட்களாக அமுக்கி வைக்கப்பட்டிருந்த உண்மைகளை ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ வெளிக்கொண்டு வந்திருக்கிறது” என்றார்.

உத்தரப் பிரதேசம், கோவா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் அரசுகள் இப்படத்துக்கு வரி விலக்கு அளித்தன. இப்படத்தை அரசு ஊழியர்கள் பார்க்க வசதியாக, அவர்களுக்கு அரை நாள் விடுப்பு அளித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உத்தரவிட்டார். தமிழ்நாட்டின் பாஜக சார்பில் இப்படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

படத்தை பாஜகவினரும் வலதுசாரிகளும் பாராட்டிய அதேநேரம், இப்படம் வரலாற்றை திரித்து சொல்கிறது, இஸ்லாமியர்களை தவறாக காட்டுகிறது என்று விமர்சனங்களும் கடுமையாக எழுந்தன. இது வெறுப்பு வாதத்தை பரப்பும் வகையிலேயே உள்ளதாகப் பலரும் சாடியிருந்தனர்.

நடிகை சாய் பல்லவி, “காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பண்டிட்டுகள் கொல்லப்பட்டதாக காட்டி இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள். அந்த நபர் கொல்லப்பட்டவுடன் `ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடுகிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம்?” என்று கூறியதும், அவருக்கு இந்துத்துவ அமைப்பினர் கண்டனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் அரசியல் மட்டுமில்லாமல் டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தையும் இப்படம் தவறாக காட்டுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. மாணவர்களின் போராட்டங்களுக்கு புகழ்பெற்றது டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். அங்கு படிக்கும் மாணவர்களை பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்க இந்தப் படம் முயற்சிக்கிறது என்று விமர்சகர்கள் கண்டித்தார்கள்.

சர்வதேச அரங்கிலும் அப்போதே இந்தத் திரைப்படம் சர்ச்சையைக் கிளப்பியது. சிங்கப்பூர் இத்திரைப்படத்தைத் திரையிடவே மறுத்துவிட்டது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநரின் நிகழ்ச்சியும் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில்தான் தற்போது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து எழுத்தாளரும், தமிழின் சிறந்த படங்களில் ஒன்றான ‘அவள் அப்படித்தான்’ படத்தின் வசன கர்த்தாவுமான வண்ணநிலவன், “தேர்ந்த சினிமா ரசிகருக்கான எந்த அம்சமும் இந்தப் படத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப் படத்தைப் பார்க்க அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளித்தது அரசியல் எவ்வளவு தரம் தாழ்ந்து விட்டது என்பதையும், நாட்டின் பிரதமரே படத்தைச் சிலாகித்துப் பேசியதும் தவறான முன்னுதாரணங்கள்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...