No menu items!

பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு: ஆளுநரிடம் அண்ணாமலை புகார்

பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு: ஆளுநரிடம் அண்ணாமலை புகார்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “பிரதமர் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளுக்காக ஜூலை 29-ம் தேதி 2022 அன்று தமிழ்நாடும் வந்திருந்தார். அப்போது, நேரு உள்விளையாட்டரங்கில், பிரதமரின் பாதுகாப்புக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டிய உபகரணமான மெட்டல் டிடெக்டர்ஸ் அன்று சரியாக வேலை செய்யவில்லை. மெட்டல் டிடெக்டர்ஸ் எல்லாம் பழுதடைந்து, சரிவர பராமரிக்காமல், பெயரளவில் மட்டுமே காவல்துறையினர் அதை பல இடங்களில் வைத்திருந்தனர்.

பிரதமரின் வருகை நிகழ்வு முடிந்தபின்னர், மத்திய அரசின் ஏஜென்சிகள், மாநில அரசுக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதில், பிரதமர் வருகையின்போது மாநில அரசு போலீஸார் பயன்படுத்திய மெட்டல் டிடெக்டர்ஸ்கள் வேலை செய்யவில்லை. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இது எவ்வளவு பெரிய வேதனையான விஷயம். பிரதமருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய மாநில அரசு, தனது பணியிலிருந்து தவறியிருக்கிறது, என்பதற்கான குற்றச்சாட்டை ஆதாரத்தின் அடிப்படையில் கொடுத்து வந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் கோயில்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் உள்ள மெட்டல் டிடெக்டர்கள் வேலை செய்கிறதா என்பதை ஆய்வு செய்ய, ஒரு சுதந்திரமான தணிக்கை (Independent Audit) நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைகளை ஆளுநரிடம் வலியுறுத்தி வந்திருக்கிறோம்” என்று கூறினார்.

திருப்பூர் ரெயில் நிலையத்தில் தமிழை மறைத்துவிட்டு இந்தியில் பெயர் பலகை

திருப்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு சேவை மையத்தில் தமிழ் மொழியில் ‘சேவை மையம்’ என பெயர்ப்பலகை எழுதப்பட்டு இருந்தது. அதுபோல் ஆங்கிலத்திலும் இந்தியிலும் அந்தப் பெயர் மொழி பெயர்க்கப்பட்டு ஒன்றின் கீழ், ஒன்றாக எழுதப்பட்டு இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் என்று பெயர்ப் பலகையில் இந்தி எழுத்தால் ‘சகயோக்’ என பெரிதாக எழுதி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஆங்கிலத்தில் ‘இன்பர்மேசன் சென்டர்’ என்பதற்கு பதிலாக ஆங்கில எழுத்தால் ‘சகயோக்’ எனவும் தமிழில் ‘சேவை மையம்’ என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தால் ‘சகயோக்’ என்றும் எழுதப்பட்டுள்ளது. இதை எந்த மொழியைச் சேர்ந்தவர் படித்தாலும் ‘சகயோக்’ என்றுதான் வாசிக்க முடியும். இதே போன்று இந்த சேவை மையத்தின் அருகில் காசி சங்கமம் என்ற பெரிய விளம்பரப் பதாகையில் அனைத்தும் இந்தி மொழியில் பெரிதாக எழுதப்பட்டு ஒரே ஒரு வாசகம் மட்டும் தமிழ் எழுத்தில் மிகவும் சிறியதாக எழுதப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

பொங்கல் பரிசு ரூ. 1000: வங்கி கணக்கில் போட ஏற்பாடு

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை அனைவரும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் பணத்திற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பை முழு கரும்புடன் வழங்கப்பட்டது. இதில் உருண்டை வெல்லம் வழங்கியதில் பல இடங்களில் தரமான வெல்லம் வழங்கப்படாததால் புகார்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக விமர்சனம் செய்தன.

இதனால் வருகிற பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு பதில் பணம் ரூ.1000 வழங்கி விடலாமா என்று அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய், தந்தையை கொன்றுவிட்டு சடலத்தோடு 2 நாட்கள் வீட்டில் தூங்கிய மகன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் தில்லையம்பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 80). இவரது மனைவி லட்சுமி (73). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள், ஒரு  மகள் இருந்தனர்.

இதில் இளைய மகன் ராஜேந்திரனுடன் (வயது 45) பெற்றோர்கள் வசித்து வந்துள்ளனர். ராஜேந்திரனுக்கு திருமணமாகாததால், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி தாய், தந்தையுடன் ராஜேந்திரன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக கடந்த  இரண்டு நாட்களுக்கு முன்பு தாய், தந்தையுடன் தகராறு முற்றியதால், ஆத்திரமடைந்த ராஜேந்திரன், தாய் தந்தையை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களில் சடலத்தை வீட்டிலேயே வைத்துள்ளார். எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாதவாறு வீட்டில் சடலத்தோடு சமைத்து சாப்பிட்டு உலாவி வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதை உணர்ந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர். தொடர்ந்து இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், மகன் ராஜேந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...