எலன் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கான முயற்சிகளின் இறுதிக் கட்டத்தில் இருக்க, அவர் அதை வாங்கிவிடக் கூடாதே என்ற பதைப்பில் இருக்கிறார்கள் ட்விட்டரில் பணியாற்றும் ஊழியர்கள். தான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினால் அதில் பணியாற்றும் 75 சதவீதப் பணியாளர்களை நீக்கப் போவதாக எலன் மஸ்க் கூறியுள்ளதே இந்த பயத்துக்கு காரணம்.
ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கப் போவதாக அறிவித்த காலத்தில் இருந்தே வேலை நீக்கத்தைப் பற்றி பல சர்ச்சைகள் உலாவருகின்றன. ட்ரம்பை மீண்டும் ட்விட்டரில் அனுமதிப்பது, பெரும்பாலான மக்களின் எண்ணங்களுடன் ஒத்துப் போகாதது என்று பல சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டது. இந்த வரிசையில் புதிதாக வந்திருக்கும் விஷயம்தான் 75 சதவீத ஊழியர்கள் வேலையை இழப்பது.
ட்விட்டரை தான் வாங்கியவுடன், அதில் பணிபுரியும் 7,500 ஊழியர்களில் கிட்டத்தட்ட 75% பணியாட்களை நீக்கப் போவதாக கூறியுள்ளார் எலன் மஸ்க். இது அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் எலன் மஸ்க் இந்நிறுவனத்தை வேங்கிவிடக்கூடாதே என்று அவர்கள் டென்ஷனில் இருக்கிறார்கள்.
இது ஒரு புறமிருக்க, இப்போது, ட்விட்டர் நிறுவனமே, மஸ்க் ட்விட்டரை வாங்கினாலும், வாங்காவிட்டாலும் கொஞ்சம் ஊழியர்களை குறைப்பது என்று முடிவெடுத்துவிட்டனர். சம்பள செலவை 800 மில்லியன் டாலர்களுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்துள்ளதே இதற்கு காரணம்.
இப்போதுள்ள ட்விட்டர் நிறுவனம் ஆள்குறைப்பு செய்வதாக இருந்தால் 1,900 ஊழியர்கள் பணியை இழப்பார்கள்.
ஆனால் மஸ்க்கின் திட்டப்படி ஊழியர்களைக் குறைப்பதாக இருந்தால் 5000 ஊழியர்கள் வேலையிழப்பர். இது ட்விட்டரின் நிர்வாகம் மற்றும், தரத்தை இது மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்று பலரும் தெரிவித்துள்ளனர். ஆனால் எலன் மஸ்க், செயல் திறன் குறைந்த தொழிலாளர்களை ஏன் பணியில் வைத்திருக்க வேண்டும் என்று கேள்வி கேட்கிறார்.