பொன்னியின் செல்வன் – பாகம் 1 பெரும் வெற்றியடைந்தைத் தொடர்ந்து ரசிகர்கள் அதை இரண்டாம், மூன்றாம் முறை பார்க்கத் தொடங்கியுள்ளனர். சிலருக்கு முதல் முறை பார்க்கும் போது படம் புரியாததால் இரண்டாம் முறை பார்க்கிறார்கள். படம் புரிந்தவர்கள் பாடல்களுக்காக அல்லது ஐமேக்ஸ் அரங்கில் பார்க்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். கதை படித்தவர்களும் கூட ஓரிரு முறை இப்படத்தை பார்த்துள்ளனர். வெகு ஆண்டுகள் கழித்து குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு மக்கள் படையெடுப்பத்துள்ளதே பொன்னியின் செல்வனின் வெற்றி.
கதை படித்தவர்களுள் சிலருக்கு இப்படத்தில் விடுபட்ட கதாபாத்திரங்களும் சம்பவங்களும் பெரும் வினாவாக உள்ளன. இரண்டாவது பாகத்திலாவது இதற்கான தீர்வு கிடைக்குமா என்று அவர்கள் காத்திருக்கின்றனர். இரண்டு பாகங்களில் இத்தனை விஷயங்களை காட்சிரீதியாக உள்ளடக்குவதிலுள்ள சிரமம் என்னவென்பதையும் அவர்கள் அறிவார்கள். ஆனாலும் மந்தாகினியையும், மணிமேகலையையும் எப்படி இயக்குனர் மணிரத்னம் புறக்கணித்தார் என்று ஆதங்கப்படுகின்றனர். படம் வெளியான நாளிலிருந்து அது குறித்த காணொளிகளும், சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளும் நாளொரு வண்ணம் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதே அதற்கு சாட்சி.
முதல் பாகமே இன்னும் பார்க்காத ரசிகர்கள் சிலர் முதலில் கதையை ஆடியோ புக்கிலாவது கேட்டுவிட்டு படம் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவில் உள்ளார்கள். இவ்வாறிருக்க, ஒரு சில ரசிகர்கள் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டில் என்னவெல்லாம் இருக்கலாம் என்னவெல்லாம் இருக்கக் கூடாது என்று பட்டியலிடத் துவங்கிவிட்டார்கள்.
நாமும்தான் யோசித்துப் பார்ப்போமே என்று களத்தில் இறங்கிய போது இயக்குனரின் பார்வையிலிருந்து இல்லாமல் கல்கியின் பார்வையிலிருந்து இக்கதையில் விடுபட்ட புள்ளிகளை இணைத்தும் கோர்த்தும் பார்த்தால் பாகம் இரண்டில் இவை எல்லாம் இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.
கடம்பூர் இளவரசி மணிமேகலை முதல் பாகத்தில் இல்லை. நிச்சயம் இரண்டாம் பாகத்தில் அவளை பற்றிச் சொல்லலாம். அவள் முக்கிய கதாபாத்திரம் என்பதாலும் கதையின் முடிவில் அவளுடைய பங்களிப்பு உள்ளது என்பதாலும் மணிமேகலை சார்ந்த காட்சிகள் இடம்பெறும்.
புயல் அடித்து அருண்மொழி வர்மன் இறந்தான் என்ற செய்தி அரண்மனையை வந்தடையும். செம்பியன் மாதேவி, சுந்தரசோழன், குந்தவை, வானதி உள்ளிட்ட அனைவரும் துயரில் மூழ்கும் காட்சி இரண்டாம் பாகத்தில் காண்பிக்கப்படலாம். பெரும் வெள்ளத்திலிருந்து அருண்மொழி வர்மனை புத்த பிட்சுக்கள் காப்பாற்றுவது காண்பிக்கப்படலாம். அதன் பின்னர் ஊமை ராணி (மந்தாகினி) சூடாமணி அருண்மொழி வர்மனை நாகப்பட்டினத்தில் உள்ள விகாரத்தில் வைத்திருக்கிறாள் எனும் செய்தி முதலில் குந்தவைக்கும் வானதிக்கும் தெரிகிறது
.
வானதிக்கும், அருண்மொழி வர்மனுடனான உரையாடல்கள், அவர்கள் சார்ந்த காதல் காட்சிகள் முதல் பாகத்தில் காண்பிக்கப்படாததால் இரண்டாம் பாகத்தில் சுருக்கமாக அவர்களின் பிணைப்பை கூற வாய்ப்பிருக்கிறது. அதுபோலவே வந்தியத் தேவன் குந்தவை இருவருக்கும் உள்ளான மன நெருக்கத்தையும் ஒரு பாடல் காட்சி மூலமாக இயக்குனர் காட்சிப்படுத்தலாம். அல்லது அவர்கள் ஆற்றங்கரையில் சந்தித்து மனம்விட்டு பேசும் காட்சிகளை உள்ளடக்கி இரண்டாம் பாகம் வெளிவரலாம்.
நந்தினியின் பழிவாங்கும் படலம் எந்தளவுக்கு அவளை இரக்கமற்றவளாக மாற்றியது என்பது இடைவேளைக்கு முன் விளக்கமாக காண்பிக்கப்படும்,
நந்தினி கடம்பூர் மாளிகைக்கு போவதும் ஆதித்த கரிகாலனை கொல்வதும் முக்கியமான திருப்புமுனை. எதிரிகளின் சூழ்ச்சியால் கடம்பூர் மாளிகையில் ஆதித்த கரிகாலன் கொலையுண்டதை தொடர்ந்து பெரிய பழுவேட்டரையர் தாம் செய்த சூழ்ச்சிகளை ஒப்புக் கொண்டு, குற்றவுணர்வில் தற்கொலை செய்துகொள்வதும் நிச்சயம் இரண்டாம் பாகத்தில் முக்கிய காட்சிகளாக இருக்கும். நந்தினி யார்?, ஊமை ராணி யார் (மந்தாகினி) இருவருக்கும் என்ன உறவு, நந்தினிக்கும் ஆதித்த கரிகாலன் கொன்ற பாண்டிய மன்னருக்கும் என்ன உறவு என்பது இரண்டாம் பாகத்தில் திருப்புமுனை காட்சிகள். அதுதான் கதையின் முக்கியமான முடிச்சு. நந்தினி கதாபாத்திரம் கல்கியின் அற்புத கதாப்பாத்திரப் படைப்பு. அவள் வீரபாண்டியனின் மகளா என்பதை குழப்பமாக கோடிட்டு எப்படி காண்பிக்கப் போகிறார்கள் என்பதும் முக்கியமான காட்சி.
மாதங்கினியின் கதாபாத்திரத்தை முற்றிலும் வெளிப்படுத்தும் காட்சிகள் இருக்கலாம் அதிலும் முக்கியமாக சுந்தர சோழரை காப்பாற்ற பூங்குழலியின் உதவியுடன் அரண்மனைக்கு உள்ளே செல்வது பரபரப்பான காட்சிகள். மிகவும் சுவாரஸ்யமான திருப்பம் அதுவும் கூட. ஊமை ராணிக்கும் செம்பியன் மாதேவிக்கும் என்ன நடந்தது எனும் மர்மமும் இரண்டாம் பாகத்தில் விலகும். ஊமை ராணி பெற்றெடுத்த இரட்டை குழந்தைகளுள் ஒன்றைத் தான் இறந்த செம்பியன் மாதேவியின் குழந்தைக்கு பதிலாக வளர்கிறது. அந்த குழந்தை என்னவானது என்பதும் வெளிப்படும்.
சுந்தரசோழனுக்கும் மந்தாகினிக்கும் என்ன உறவு, எத்தகைய நட்பு இருந்தது, இலங்கை குகையில் காணப்பட்ட ஓவியங்களின் அர்த்தம் என்ன என்பதும் இரண்டாம் பாகத்தில் இருக்கும். பூங்குழலி சேந்தன் அமுதனை மணமுடிக்கும் காட்சியை தேவைப்பட்டால் காண்பிக்கலாம்.
முதல் பாகத்தில் சில மணித்துளிகளே திரையில் தோன்றிய சேந்தன் அமுதன் கதாபாத்திரம் உண்மையில் யார், அவனுக்கும் நந்தினிக்கும் என்ன உறவு அல்லது பகை அவன் ஏன் மறைந்து வாழ்கிறான், அவனை பாதுகாக்கும் பொறுப்பை ஊமை ராணியின் சகோதரி ஏன் ஏற்கிறாள் என்பதை இரண்டாம் பாகத்தில் நாம் பார்க்கக் கிடைக்கலாம்.
முதல் பாகத்தில் நமக்கு காண்பிக்கப்பட்ட பராந்தகன் போலியானவன். ஆலயத்தின் பூ விற்பவனாக காண்பிக்கப்பட்ட சேந்தன் அமுதன்தான் உண்மையில் ராஜன். அவனது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்று எண்ணித்தான் இந்த ஆள் மாறாட்டம் நிகழ்ந்துள்ளது என்பதும் இந்த பாகத்தில் வெளிப்படலாம்.
மொத்தத்தில் பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்று புனைவு என்பதையும் மீறி ஒரு பரபரப்பான த்ரில்லர் கதையாகவும் இதனை காண முடியும். காரணம் அத்தனை கதாபாத்திரங்களை உருவாக்கி அவரவருக்கு காத்திரமான பங்களிப்பை அளித்து காவியம் போன்றதோர் படைப்பை ரசிகர்களுக்கு காலந்தோறும் தருவது சாதாரண விஷயமன்று. அதற்காக கல்கி தன் படைப்பாற்றலையும் கற்பனை திறனையும் அள்ளித் தந்துள்ளார்.