இந்திய ஒற்றுமை நடை பயணத்தை கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தி, கேரளாவை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தசரா பண்டிகையை முன்னிட்டு 2 நாட்கள் இடைவெளி எடுத்துக்கொண்ட ராகுல்காந்தி மாண்டியா மாவட்டம் பாண்டவபூரா அருகே பேலாலே கிராமத்தில் இருந்து தனது பயணத்தை இன்று தொடங்கினார். இந்த நடை பயணத்தில் இன்று அவருடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இணைந்துகொண்டார்.
சோனியா காந்தியைத் தொடர்ந்து பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தி நடைப்பயணத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் டெங்கு
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 4,266 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், “ஆகஸ்ட் மாதத்தில் 481ஆக இருந்த டெங்கு பாதிப்பு செப்டம்பர் மாதத்தில் திடீரென அதிகரித்து 572 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. பருவமழை காலகட்டத்தில் இது மிக தீவிரமாக பரவும் என்பதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்” என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு கொசு வலையை பயன்படுத்துதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல் போன்ற பல்வேறு அறிவுறுத்தல்கள் சுகாதாரத் துறையால் வழங்கப்பட்டுள்ளன.
இந்திய அணி ஆஸ்திரேலியா பயணம்
எட்டாவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகிற 6ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது. அங்கு பெர்த் மைதானத்தில் 13ஆம் தேதி வரை இந்திய வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு: பிரான்ஸ் பெண் எழுத்தாளருக்கு அறிவிப்பு
உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2022ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அனி எர்னாக்ஸ்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘எல் அகுபேஷன்’ (L’occupation) என்ற புத்தகத்தை எழுதியதற்காக எழுத்தாளர் அனி எர்னாக்ஸ்-க்கு இந்த ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்திய குடும்பம் சடலமாக மீட்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி இளைஞர் ஜஸ்தீப் சிங் (வயது 36). இவர், மனைவி ஜஸ்லீன் கவுர், மற்றும் 8 மாத பெண் குழந்தை ஆரூஹி தேரி, உறவினர் அமன்தீப் சிங் (39), ஆகியோருடன் வசித்து வந்தார். கலிபோர்னியாவின் மெர்செட் கவுன்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் கடந்த திங்கட்கிழமை அன்று இவர்கள் 4 பேரும் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், கடத்தப்பட்ட 8 மாத குழந்தை உள்பட அமெரிக்க வாழ் இந்திய குடும்பம் நேற்று கலிபோர்னியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.