No menu items!

ராஜராஜ சோழன் எந்த மதத்தைச் சேர்ந்த அரசன்?

ராஜராஜ சோழன் எந்த மதத்தைச் சேர்ந்த அரசன்?

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தால், தமிழ்நாட்டை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட சோழ மன்னனான ராஜராஜ சோழன் பற்றிய தகவல்கள் வைரலாக பரவி வருகின்றன. இந்நிலையில், “ராஜராஜ ராஜ சோழனுக்கு இந்து அடையாளத்தைக் கொடுக்கிறார்கள்” என இயக்குநர் வெற்றிமாறனும், “ராஜராஜ சோழன் காலத்தில் இந்து என்ற மதமே கிடையாது” என நடிகர் கமல்ஹாசனும் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. ராஜராஜ சோழன் எந்த மதத்தைச் சேர்ந்த அரசன் என்பதுதான் இப்போது ஹாட் டாபிக்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாளை அக்கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு ‘சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர்’ என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழாவை சென்னையில் ‘தமிழ் ஸ்டுடியோ’ அமைப்பு நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “என்னுடைய நண்பர் ஒரு விரிவான ஆய்வை செய்திருக்கிறார். அதில், எப்படி இலக்கியம், சினிமா ‘அவர்கள்’ கையிலிருந்தது என்பதையும், அவர்களிடமிருந்து சினிமாவை திராவிட இயக்கம் எப்படி கைப்பற்றியது என்பதையும் விளக்கி இருக்கிறார். திராவிட இயக்கம் தமிழ் சினிமாவை கையில் எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு இன்னும் மதச்சார்பற்ற மாநிலமாகவும், பல புற சக்திகளின் ஊடுருவலை தடுக்கக்கூடிய பக்குவத்துடன் இருக்கிறது.

சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாக சென்றடையக்கூடிய கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிக முக்கியமானது. இடைப்பட்ட காலத்தில் இது இல்லாமல் இருந்தது. திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுக்கும்போது, இலக்கியத் துறையை சேர்ந்தவர்கள் ‘கலை கலைக்காகத்தான், கலை மக்களுக்கானது இல்லை’ என்றார்கள். அழகியல் பற்றி நிறைய பேசினார்கள். கலையில் அழகியல் முக்கியமானதுதான். ஆனால், மக்களிடமிருந்து விலகி எந்த கலையும் முழுமையடையாது. மக்களுக்காகத்தான் கலை. மக்களைப் பிரதிபலிப்பதுதான் கலை.

இந்த கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு விரைவில் நம்முடைய நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடமிருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்.

சினிமாவிலும் நிறைய அடையாளங்களை எடுக்கிறார்கள். இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும். அதற்கு நாளை நடப்பதாக இருந்த அந்த நிகழ்வுக்கு (ஆர்எஸ்எஸ் பேரணிக்கு) எதிராக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பே மிகப்பெரிய உதாரணம்.

இதுபோல் நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும். அதற்கு என்னுடைய நிபந்தனையற்ற ஆதரவை தெரிவிப்பதற்காக இந்த மேடையை கொடுத்த அனைவருக்கும் நன்றி. நான் என்னால் முடிந்த சிறிய அளவிலான பங்களிப்பை கொடுப்பேன். கண்டிப்பாக நீங்கள் அச்சப்படும் அளவுக்கு எதுவும் நடக்காது” என்று பேசியிருந்தார்.

இதனால், ராஜராஜ சோழன் இந்துவா இல்லையா என்பது சர்ச்சைக்குள்ளான நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை பார்த்துவிட்டு பேட்டியளித்த கமல்ஹாசன், “இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜ சோழன் காலத்தில் இல்லை. சைவம் வைணவம் சமணம்தான் இருந்தது. இந்து என்பது வெள்ளைக்காரன் வைத்த பெயர்” என்று கூறியது இந்த சர்ச்சைக்கு வலு சேர்த்தது.

சரி, உண்மையில் ராஜராஜ சோழன் எந்த மதத்தைச் சேர்ந்த அரசன்?

தமிழ்நாட்டின் வரலாற்றில் ஈடுபாடு கொண்டவரும் ஆய்வாளருமான பொ. வேல்சாமியிடம் கேட்டோம்.

“பல்லவர் காலம், பாண்டியர் காலம், சோழர் காலம், சேரர் காலம்  அதன்பின்னர் வந்த பல்வேறு ஆட்சியாளர்கள் காலகட்டம் என நமக்கு ஒரு அரசியல் ரீதியான வரலாறு இருக்கிறது. இதுபோல் மத ரீதியான வரலாறும் இருக்கிறது. வேதத்தை ஒப்புக்கொண்டவர்கள் (வைதீகர்கள்), வேதத்தை ஒப்புக்கொள்ளாதவர்கள் (அவைதீகர்கள்) என இரு பிரிவினர் இருந்தார்கள். இது பற்றிய பதிவுகள் ‘மணிமேகலை’ காப்பியத்திலேயே உள்ளது. இதில் வைதீகர்களில் சைவர்கள், வைணவர்கள்  என பிரிவுகள் இருந்தது. அதாவது இவர்கள் இருவரும் வேதத்தை ஒப்புக்கொண்டவர்கள் என்றாலும் இருவருக்குள்ளும் வியாக்கியானங்கள் மாறுபடும். இதுபோல் அவைதீகர்களில் சமணர்கள், பெளத்தர்கள், உலகாயுதம் என மூன்று பிரிவினர் இருந்தனர். பிரிட்டீஷ்காரர்கள் வருவது வரைக்கும் இங்கு இருந்த மத ரீதியான பிரிவுகள் இவைதான்.

Po. Velsamy
பொ. வேல்சாமி

ரோமன் கத்தோலிக்கம், கிழக்கு கிறிஸ்தவம், சமய சீர்த்திருத்த வாதம் அல்லது புரடஸ்தாந்தம் என கிறிஸ்தவத்தில் பல பிரிவுகள் இருக்கிறது. ஆனால், கிறிஸ்தவர் அல்லாத ஒருவர் எல்லாவற்றையும் கிறிஸ்தவர்கள் எனத்தான் புரிந்துகொள்கிறார், அழைக்கிறார். இதுபோல் சன்னி, சியா, சூபிசம் என பல பிரிவுகளையும் இஸ்லாமியர்கள் என்றுதான் புரிந்துகொள்கிறோம், அழைக்கிறோம். இது மாதிரிதான் பிரிட்டீஷ்காரர்கள் வந்தபோது இங்கே விதவிதமான கடவுள்களை வணங்கும் பல பிரிவுகள் இருந்தாலும், எல்லோரையும் சேர்த்து ‘இந்து’ என குறிப்பிட்டுவிட்டார்கள்.

சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர்தான் முதன்முதலில் இந்தியாவில் இருந்த கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை குறிப்பிட ‘இந்து’ என்ற சொல்லை பயன்படுத்தினார். சர் வில்லியம் ஜோன்ஸ் 1790களில் சட்டங்களை தொகுக்கும்போது, கிறிஸ்துவர்கள் அல்லாமல், இஸ்லாமியர்கள் அல்லாமல் இருக்கும் ஒரு பெரும் தொகையான மக்களை இந்துக்கள் என்ற பெயரில் வழங்கினார். அதிலிருந்து நாம் எல்லோருமே இந்துகள் ஆகிவிட்டோம்.

இதில் ராஜராஜ சோழன் வேதத்தை ஏற்றுக்கொண்ட வைதீகர்கள் வழியில் வந்த அரசன். மட்டுமல்லாமல் வேதக் கல்வியை வலியுறுத்தி வந்தவனும்கூட. அவனது அரசவையில் குருநாதர், முதலமைச்சர், படைத் தளபதி என முக்கிய பொறுப்புகளில் சைவ சமயத்தின் ஒரு பிரிவினரான பீகார் பிராமணர்கள்தான் இருந்தார்கள்.

அக்காலகட்டத்தில் இங்கே இருந்த சைவமும் ராஜராஜ சோழன் அரசவையில் இருந்த பீகார் பிராமணர்கள் சைவமும் ஒன்றல்ல, வேறுவேறு. இவர்கள் காபாலிக சைவநெறியை பின்பற்றுகின்றவர்கள்; அதனால் காபாலிகர் என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்கள் சைவச் சின்னங்களை அணிவதோடு, மண்டையோடு மற்றும் சூலம் ஆகியவற்றை தாங்கியவர்களாக இருப்பர். இந்தியாவின் வடபகுதியைச் சேர்ந்தவர்கள். மொகலாயர்கள் படையெடுப்பின்போது தெற்கே வலிமையான பேரரசாக சோழப் பேரரசு இருந்ததால், பாதுகாப்பு தேடி இங்கே வந்தார்கள். இதன்பின்னர் காபாலிகம் தெற்கிலும் வளர்ந்தது.

ராஜராஜ சோழன் காலத்தில் 50 வேதக் கல்லூரிகள் இருந்துள்ளது. இந்த வேதக் கல்லூரிகளில் படித்து வந்தவர்களைத்தான் நீதிபதிகளாக நியமித்துள்ளான். தேவதாசி முறை அதற்கு முன்பே இருந்தாலும் அதை ஒழுங்குபடுத்தி பலப்படுத்தியவன் ராஜராஜ சோழன்தான்.

இவை எல்லாம் இருந்தாலும் எல்லா மதப் பிரிவுகளையும் ஏற்று அவர்களுக்கு உதவிகள் செய்த வகையிலும் ராஜராஜ சோழன் ஆட்சி சிறப்பாகவே இருந்துள்ளது. பெளத்த கோயில்களுக்கும் ராஜராஜன் உதவிகள் செய்துள்ளான்.

இவை எல்லாம் கல்வெட்டுகளில் உள்ளது. இருந்தாலும் இப்படி தமிழர்களுக்கு ஒரு வரலாறு இருக்கிறது என்பது 1900 வரைக்கும் நமக்கு தெரியாது. 1907ஆம் ஆண்டு வரை தஞ்சை பெரிய கோயிலை கட்டியது ராஜராஜன் என்பதுகூட யாருக்கும் தெரியாது. உ.வே. சாமிநாதருக்கே தெரியாது. ஆங்கிலேயர்தான் பழங்கால கல்வெட்டுகளை ஆராய்ந்து இந்த வரலாறுகளை எல்லாம் நமக்கு சொல்லித் தந்தார்கள். அதன்பின்னர்தான் தமிழ்நாட்டின் முதல் வரலாற்று நூலாக 1935ஆம் ஆண்டு நீலகண்ட சாஸ்திரி எழுதிய ‘சோழர்கள்’ நூல் வந்தது. அதன்பின்னர் பலர் கல்வெட்டுகளையும் இலக்கியப் பதிவுகளையும் ஆராய்ந்து தமிழ்நாட்டு அரசர்கள் வரலாற்றை எழுதியுள்ளார்கள். தமிழ் இலக்கியங்களில் கிட்டத்தட்ட 1500 ஆண்டு கால வரலாறு உள்ளது. அதில், இங்கிருந்த எல்லா மதங்களையும் பற்றிய பதிவுகள் உள்ளது” என்கிறார் பொ. வேல்சாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...