No menu items!

மழை – சமாளிக்க சென்னை தயாரா?

மழை – சமாளிக்க சென்னை தயாரா?

பொதுவாக மழை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். கரு மேகங்கள் சூழ்ந்து மழையடிக்கும்போது வீட்டின் பால்கனியிலோ அல்லது வாசலிலோ அமர்ந்து தேநீரைக் குடித்துக்கொண்டே மழையை ரசிப்பது பலருக்கும் பிடித்த விஷயம்.

ஆனால் சென்னைவாசிகள் இதற்கு நேர்மாறானவர்கள். அவர்களுக்கும் மழையைப் பிடிக்கும்… ஆனால் அந்த மழை அரை மணி நேரத்துக்கு மேல் பெய்யக்கூடாது. அப்படிப் பெய்தால் “என்னடா இந்த மழை… இப்படி பெஞ்சு கொல்லுது. எப்பத்தான் நிக்கப் போகுதோ” என்று புலம்பத் தொடங்கிவிடுவார்கள்.

அவர்களின் இந்த புலம்பலுக்கு காரணம் மழை செய்த பிழை அல்ல. சென்னை நகரின் கட்டமைப்பில் உள்ள குறைகள்தான். மதியத்தில் மழை பெய்யத் தொடங்கிவிட்டால் ஆபீஸில் வேலை பார்ப்பவர்களின் வயிற்றில் அமிலம் சுரக்கும்.

“ஐயையோ.. இப்படி மழை பெய்யுதே. சுரங்கப் பாதைகள்ல தண்ணி சேந்துடுமா. வீட்டுக்கு நேரத்துக்கு போக முடியுமா தெரியிலயே… டிரபிக்ல சிக்காம வீட்டுக்கு போகணுமே ஆண்டவா” என்று வேலையில் கவனம் செல்லாமல் மழையையே நினைத்துக்கொண்டு இருப்பார்கள்.

வேளச்சேரி, வியாசர்பாடி, தியாகராய நகர் போன்ற இடங்களில் உள்ள மக்கள் அடிக்கடி வாசலுக்கு வந்து மழைநீர் எந்த அளவுக்கு உயர்ந்து வருகிறது என்று திகிலுடன் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். கடந்த காலங்களில் அவர்களுக்கு மழைக்காலம் கொடுத்த திகில்காலம்தான் இதற்கெல்லாம் மூல கரணம்.

சென்னையில் கடந்தாண்டுகளில் வடகிழக்கு பருவமழையின் போது சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடானது. கார்களும், பேருந்துகளும் போன சாலைகளில் மக்களை மீட்க படகுகள் விடப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி அவர்கள் வீட்டுக்குள் சிறைபட்டனர்.

இப்படி கடந்த காலத்தில் மழை தங்களைப் படுத்தியுள்ள பாட்டால் இந்த ஆண்டு வடகிழக்குப் பருமழையை ஒருவித திகிலுடன் பார்க்கிறார்கள் மக்கள். அவர்களின் இந்த திகிலை அதிகரிக்கும் விதமாக தமிழகத்தில் நடப்பு ஆண்டு சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம் கணித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலூர், காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவள்ளூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 17 மாவட்டங்களில் சராசரியை விட கூடுதல் மழைப்பொழிவு இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது. இன்னும் சிலரோ இந்த மழைக்காலத்தில் அதிக புயல்கள் தமிழகத்தை தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு மழை நீர் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்துவது, மழை நீர் தேங்குவதை தடுப்பது போன்றவற்றுக்காக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருபுகழ் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி, தமிழக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. அந்த பரிந்துரைகளின்படி சென்னையில் பல்வேறு இடங்களில் மாழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் சிங்கார சென்னை 2.0 திட்டம் பகுதி 1 மற்றும் 2-ன் கீழ் ரூ.277.04 கோடியில் 60.83 கி.மீட்டர் நீளத்திற்கும், வெள்ள நிவாரண நிதியின் கீழ் ரூ.295.73 கோடியில் 107.57 கிமீ நீளத்திற்கும், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியின் கீழ் ரூ.27.21 கோடியில் 10 கிமீ நீளத்திற்கும், மூலதன நிதியின் கீழ் ரூ.8.26 கோடியில் 1.05 கிமீ நீளத்திற்கும்,உலக வங்கி நிதி உதவியின் கீழ் விடுபட்ட இடங்களில் ரூ.120 கோடியில் 44.88 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியின் கீழ் கொசஸ்தலையாறு வடிநில பகுதிகளில் ரூ.3,220 கோடியில் 769 கிலோ மீட்டர் நீளத்திற்கும், ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியின் கீழ் கோவளம் வடிநில பகுதிகளில் ரூ.1,714 கோடியில் 360 கிலோ மீட்டர் நீளத்திற்கும் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கோவளம், கொசஸ்தலையாறு திட்டங்களை முடிக்க 3 ஆண்டுகள் வரை கால அவகாசம் உள்ளது. மீதம் உள்ள பணிகள் பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஆகும். இந்நிலையில், இந்தப் பணிகளில் 75 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது.

சிங்கார சென்னை திட்டத்தில் 40 கிலோ மீட்டர், வெள்ள மேலாண்மை நிதியில் 61 கிலோ மீட்டர், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியில் 6 கிலோ மீட்டர், உலக வங்கி நிதியில் 33 கிலோ மீட்டர், மூலதன நிதியில் 800 மீ நீளத்திற்கு பணிகள் முடிந்துள்ளது. அதாவது சிங்கார சென்னை திட்டத்தில் 70 சதவீதம், வெள்ள மேலாண்மை நிதியில் 62 சதவீதம், உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதியில் 77 சதவீதம், உலக வங்கி நிதியில் 86 சதவீதம், மூலதன நிதியில் 83 சதவீதம் மட்டுமே பணிகள் நிறைவந்துள்ளது. ஒட்டு மொத்தமாக 75 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. ஆனால் அமைச்சர்களும் அதிகாரிகளும் 90 சதவீத பணிகள் முடிந்துள்ளதாக கூறி வருகின்றனர்.

பணிகள் ஓரளவு முடிந்த இடங்களிலும் மழைநீர் கால்வாய்கள் எங்கு தோன்றி எங்கு முடிகிறது என்றே தெரியாமல் இருக்கிறது. பல இடங்களில் மழைநீர் கால்வாய்கள் இடையே இணைப்பு இல்லாததால், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மழைநீர் செல்லுமே அல்லாமல் மழைநீர் சுத்தமாக வடியாது என்ற சூழலே நீடிக்கிறது.
அரசு நிர்ணயித்துள்ள கடைசி தேதி நெருங்கிவரும் நிலையில், பல இடங்களில் 70 சதவீத பணிகளே முடிந்திருப்பது கண்கூடாக தெரிகிறது. மேலும் பல இடங்களில் கால்வாய்கள் மூடப்படாமல் இருப்பதால் மழைக்காலத்தில் பள்ளம் எது? சாலை எது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் கால்வாயில் விழக்கூடிய அச்சமும் உள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கட்டிட அமைப்பியல் வல்லுநர்கள், “மழைநீர் வடிகால்கள் கட்டப்படுமுன், அந்த பகுதிக்கான நில அமைப்பு வரைபடம் தயாரிக்க வேண்டும். இதன்படி, ஒரு பகுதியில் எந்தெந்த இடங்கள் மேடாக உள்ளன, எவை தாழ்வாக உள்ளன என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். இந்த விபரங்கள் அடிப்படையில், தங்கு தடையின்றி வெள்ள நீர் வடிந்து செல்வதற்கான கால்வாய் அமைக்கப்பட வேண்டும்.

ஆனால், சென்னையில் பெரும்பாலான இடங்களில், மழை நீர் வடிகால்கள் இணைய வேண்டிய பகுதிகளில், இன்னும் சில மீட்டர் தூரங்களுக்கு இடைவெளி காணப்படுகிறது. இந்த இணைப்பு பணிகள் முடியாவிட்டால், மழைக்காலத்தில் தண்ணீர் வெளியேறுவது சிரமம்.

சென்னையில் தற்போதைய நிலவரப்படி, 30 சதவீத அளவுக்கு மழை நீர் வடிகால் பணிகள் முடியாத சூழல் உள்ளது. மழைக்காலம் துவங்கும் முன்பே பல இடங்களில், நடந்து செல்வோரும் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குகின்றனர். வடிகாலுக்கான கான்கிரீட் கட்டுமான பணிகள் முடிக்கப்படாவிட்டால், மழைக்காலத்தில் மக்கள் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படும்” என்கிறார்.

சென்னை துறைமுகம் மற்றும் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிகளையும், சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்றுவரும் பல்வேறு பணிகளையும் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சமீபத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “சென்னை மாநகராட்சியில் மாநகராட்சி சார்பாகவும், நீர்வளத்துறை மற்றம் நெடுஞ்சாலைத் துறை மூலமாகவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 6, 7, 8 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். வரும் 15 ம் தேதிக்குள் பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
சென்னையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் 90 சதவிகித பணிகள் நிறைவடைந்திருந்தாலும் 10 சதவிகித பணிகள் நிறைவடையாமல் இருப்பதால் விபத்தை தடுக்கும் வகையில் முழுமையாக பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளேன். மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும். இந்த முறை சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. மக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மழைநீர் வடிகாலை செப்பனிடுவதாக இருந்தாலும், கழிவுநீர் வடிகால் சீர் செய்வதாக இருந்தாலும் 3 துறைகளும் சேர்ந்து செயல்பட வேண்டிய நிலை உள்ளது. முதற்கட்டமாக கூவம் நிதியில் உள்ள கசடுகளை அகற்றுவதன் மூலம் நீர்வழிப் பாதை சீர் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில் பணிகளை 7-ம் தேதி (நாளை) நேரில் மேற்பார்வையிட முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். முதல்வர் பார்வையிட்ட பிறகாவது பணிகள் முழுவீச்சில் நடந்து முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் சென்னை மக்கள்.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...