கோவாவில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியில் உள்ள 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று கோவா முதலமைச்சரை நேரில் சென்று சந்தித்து பேசினர். அவர்களில் முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத், எதிர்க்கட்சி தலைவர் மைக்கேல் லோபா ஆகியோரும் அடங்குவர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் லோபோ, “நாங்கள் பா.ஜ.க.வில் இணைந்துவிட்டோம்” என கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ள தருணத்தில், கோவா காங்கிரசார் இந்நடவடிக்கையை எடுத்து தலைமைக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர்.
ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் இந்திய குடியரசு தலைவர் மர்மு பங்கேற்பு
பிரிட்டன் ராணி எலிசபெத் கடந்த 8ஆம் தேதி காலமானார். அவரது உடல், ஓக் மரத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் கோட்டையில் இருந்து கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது. முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டு, அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்குபல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தினர். எடின்பெர்க் தேவாலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட எலிசபெத் ராணியின் உடல் இன்று லண்டனை சென்றடைந்தது.
எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்கு வரும் 19ஆம் தேதி வெஸ்ட்மினிஸ்டர் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா சார்பில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார். இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 17ஆம் தேதி லண்டன் செல்லும் குடியரசு தலைவர் முர்மு, 19ஆம் தேதி வரை லண்டனில் இருக்கிறார்.
இந்து மதம் குறித்து ஆ. ராசா பேசியதில் தவறில்லை: சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரம்பலூர் குன்னம் கிராமத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் குறித்து கேட்டதற்கு, “அனைவரும் உடல் நலனுக்காக நடை பயிற்சி செய்து கொண்டிருக்கின்றனர். 50 ஆண்டுகள் செய்யாததை இந்த நடைபயிற்சி மூலம் அவர் என்ன செய்துவிடப் போகிறார்” என்று வினவினார்.
தொடர்ந்து இந்துக்கள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோது, ‘அவர் பேசியதில் பெரிய அளவில் தவறு இருப்பதாக தெரியவில்லை. தமிழில் வழிபாட்டு முறை இருப்பதுதான் மரபு. சமஸ்கிருத வழிபாட்டு முறையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருகிறோம்’ என்றார்.
இலங்கை தமிழர்கள் விஷயத்தில் முன்னேற்றம் இல்லை – ஐநாவில் இந்தியா அதிருப்தி
ஜெனீவாவில் நடந்த ஐ.நா. சபை கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நெருக்கடி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே பேசினார். அப்போது, “இலங்கை தமிழர்கள் உள்ளிட்ட இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விவகாரத்தில் அந்நாட்டு அரசால் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல் போன்ற அரசியல் தீர்வுகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது.
தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் உட்பட மாகாண சபைகளுக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவதன் மூலம் இலங்கையின் அனைத்து குடிமக்களும் வளமான எதிர்காலத்திற்கான அவர்களின் விருப்பத்தை அடைய உதவும். எனவே, இந்த விஷயத்தில் உடனடி மற்றும் நம்பகமான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று வலியுறுத்தினார்.
நடிக்க வைப்பதாக ஆசை காட்டி மாணவியை பலாத்காரம் செய்த சினிமா தயாரிப்பாளர்
சென்னை அருகே உள்ள ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் அளித்துள்ள புகாரில், “நான் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்த போது பேஸ்புக்கில் ஒரு அறிவிப்பை பார்த்தேன். அதில் டி.என். 41 என்ற படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு அழகான பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என இருந்தது. இதனையடுத்து நான் நடிகையாக வேண்டும் என்ற ஆசையில் அவர்கள் கூறிய விடுதிக்கு சென்றேன். அங்கு இருந்த கரூர் நல்லியாம்பாளையத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 34) என்பவர் தன்னை படத்தின் தயாரிப்பாளர் என அறிமுகம் செய்துகொண்டு ஒவ்வொரு பெண்களாக அறைக்குள் அழைத்து தேர்வு செய்தார். என்னை அழைத்த போது நான் உள்ளே சென்றேன். அங்கு இருந்த பார்த்திபன் எனக்கு குளிர்பானம் கொடுத்தார். அதனை குடித்த சில நிமிடங்களில் நான் மயங்கினேன். சுயநினைவு இல்லாமல் இருந்த என்னை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். மயக்கம் தெளிந்த பின்னர் நான் இது குறித்து கேட்ட போது உனக்கு தற்போது 17 வயது தான் ஆகிறது. 18 வயது நிறைவடைந்த பின்னர் திருமணம் செய்துகொள்கிறேன். என்னை படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் வாக்குறுதி அளித்தார்” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பார்த்திபன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.