No menu items!

தமிழகம் கொடுத்து வைக்கவில்லை

தமிழகம் கொடுத்து வைக்கவில்லை

அறிஞர் அண்ணா தமிழக மக்களால் எந்த அளவுக்கு நேசிக்கப்பட்டார் என்பதற்கு அன்றைய ஒரு புகைப்பட காட்சி, நிரந்தரமான சாட்சி.

அண்ணாவின் உடல்நிலை இரண்டாவது முறை பாதிக்கப்பட்டு, அடையாறு கேன்சர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கிறார், அவரது அறைவாசலில் ஒரு நீண்ட பெஞ்சில் — கவர்னர் உஜ்ஜல்சிங், பெரியார், ராஜாஜி, காயிதே மில்லத், காமராஜ், பி.ராமமூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம் — அத்தனை தலைவர்களும் வரிசையாக நெருக்கமாக அமர்ந்திருக்கிறார்கள் மணிக்கணக்காக!

ஆம்! புதியதோர் தலைமை, புதியதோர் மாறுதல், இந்தியாவிற்கே எடுத்துக்காட்டான புதியதோர் அரசியல் சூழல் என்றெல்லாம் தமிழகமே அண்ணாவின் வழிக்காட்டுதலுக்கு காத்திருந்தபோது விதி தமிழகத்தை பதம் பார்த்துவிட்டது.

முதல்தடவை உடல் பாதித்து அவர் பொது மருத்துவமனையில் சேர்ந்திருந்தபோது அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன என்பதை டாக்டர்கள் லேசில் கூறவில்லை. அண்ணாவைப் பார்க்க வந்த காமராஜர் டாக்டர்களிடம் சத்தம் போட்டார். “என்ன நடக்கிறது இங்கே” என்றார் காமராஜர். கேன்சர் என்று சொல்ல டாக்டர்கள் தயங்கினார்கள்.

அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு திரும்பிய சில மாதங்களிலேயே மீண்டும் அவரது வயிற்றில் புற்றுநோய் தலைதூக்கியது. டாக்டர்கள் உறுதிப்படுத்திய ரிப்போர்ட் அண்ணாவிற்கு தெரியாமல் வீட்டில் சில நாட்கள் மறைத்து வைக்கப்பட்டது. யாரோ ஒருவர் கவனப்பிசகாக ஒரு நாள் அண்ணாவின் படுக்கை பக்கத்திலேயே அந்த ரிப்போர்ட்டை வைத்துவிட தன் உடல்நிலையை அறிந்துக்கொண்டார் அவர்.

இடையே பொங்கல் வந்தது. அண்ணாவிற்கு ராணி அம்மையார் புதிய மல்வேட்டி, சட்டை வாங்கி வைத்திருந்தார். வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் அண்ணாவுக்கு மல் துணியென்றால் உறுத்தாமல் இருக்கும் என்று ராணி அம்மையார் கருதினார். ஆனால் அதை அணிய மறுத்தார் அண்ணா. ‘‘நான் கடைசியாக கொண்டாடப்போகும் பொங்கலாக இது இருக்கலாம். வழக்கம்போல கைத்தறி ஆடைகளையே அணிய விரும்புகிறேன்” என்றார்.

1967 தேர்தலில் அண்ணா நாடாளுமன்றத்துக்குதான் போட்டியிட்டார். தி.மு.க ஆட்சியை கைப்பற்றும் என்று அவர் நினைக்கவில்லை! அப்போது நடந்த கடைசி சட்டமன்ற கூட்டத்தில் அவர் சி. சுப்பிரமணியத்தை பார்த்து, ‘நீங்கள் டெல்லிக்கு போகப் போவதாக அறிகிறேன்! உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை… ஏன் டெல்லிக்கு போகிறீர்கள்?” என்றார்!

காமராஜர் தோற்றதை அவர் ரசிக்கவில்லை. ஆட்சியை துவங்கும் முன் ஆசி பெற காமராஜரை சந்தித்தபோது அவர் கைகளை பிடித்தவாறு சற்றுநேரம் மவுனம் சாதித்தார்.

நாகர்கோயில் பார்லிமெண்ட் இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டபோது, அறுவை சிகிச்சைக்கு அமெரிக்காவுக்கு விமானம் ஏறிய நிலையில் காமராஜர் வெற்றிபெற வாழ்த்திவிட்டு சென்றார் அண்ணா!

முதல்வராக பதவியேற்ற அண்ணா கோட்டைக்கு வந்தபோது செய்திதுறை செயலாளர் குழந்தைவேலு – பழுத்த காங்கிரஸ்காரர் — அவரை வரவேற்று முதல்வர் அறைக்கு அழைத்துசென்றார். எளிய வரவேற்புதான்.

பிறகு அரசு அதிகாரிகள் அத்தனைபேர் அடங்கிய கூட்டம் கோட்டையிலேயே ஏற்பாடு செய்யப்பட்டது. “நீங்கள் நினைத்தால் ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்பதை நான் நன்கு அறிவேன்” என்று அண்ணா பேசியபோது அன்றைய போலீஸ் ஐ.ஜி. எஃப்.வி. அருள் வாய்விட்டு சிரித்தார். அருள் மாற்றப்படுவார் என்று நினைத்தவர்கள் உண்டு. விலைவாசிப் போராட்டத்தில் அண்ணா கைதாகி கோர்ட்டிற்கு வந்தபோது கமிஷனராக இருந்த அருள், அண்ணா நாற்காலியில் அமர்வதற்கு கூட அனுமதிக்கவில்லை. அப்போழுது அண்ணா எதிர்கட்சி தலைவர். அருள் செயலை பத்திரிகைகள் கண்டித்தன. முதல்வர் ஆனபிறகு அண்ணா அவரிடம் விரோதம் பாராட்டவில்லை.

அண்ணாவின் பெருந்தன்மைக்கு பல உதாரண நிகழ்ச்சிகள் உண்டு.

அவர் முதல்வர் ஆனதால் தென்சென்னை பார்லிமென்ட் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அதை காங்கிரசுக்கு விட்டுத்தர தயாராக இருந்தார் அண்ணா. “ஆர். வெங்கட்ராமன் நிற்கட்டும், ஏகமனதாக தேர்ந்தெடுப்போம்” என்றார். காங்கிரஸ் ஏற்கவில்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குமேல் காங்கிரஸ் கால திட்டங்கள் நிறைவேறி திறப்புவிழாக்கள் நடந்தன. அண்ணா இந்த விஷயத்தில் நிரந்தர உத்தரவு போட்டிருந்தார். அன்றைய தொழில் அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் தலைமை வகிக்க இன்றைய தொழில் அமைச்சர் நெடுஞ்செழியன் திறக்கவேண்டும் இதுதான் உத்தரவு! ஒவ்வொரு திறப்புவிழாவிலும் மிக நல்லமுறையில் நெடுஞ்செழியனை அறிமுகப்படுத்தினார் ஆர்.வி.

கலவரம், துப்பாக்கிசூடு என்பதை காதால் கேட்கவே விரும்பாத தலைவர் அண்ணா. ஒருமுறை மாணவர் கலவரம் சென்னையில். ‘இரயில் பெட்டிகளை மாணவர்கள் எரிக்கிறார்கள். துப்பாக்கிசூடு நடத்த அனுமதி கொடுங்கள்” என்று கேட்டார் எஃப்.வி. அருள். ‘‘துப்பாக்கி சூடு என்பதே கூடாது. இரயில் பெட்டியை எரித்தால் இன்னொரு பெட்டி தயாரிக்கலாம். ஒரு மாணவர் உயிரை இழந்தால் மீண்டும் உயிர் தர முடியுமா!” என்று அண்ணா கடுமையாக மறுத்தார்.

கீழ்வெண்மணி கொடூரம் நடந்த செய்தி வந்தபோது இருநாட்கள் அண்ணா உணவே அருந்தவில்லை.

கடைசியாக ஒரு நிகழ்ச்சி.

பிற்பகலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் கோட்டைக்கு புறப்படுவார் முதல்வர் அண்ணா. அன்று திடீரென்று ஒரு அறை மணிநேரம் முன்னதாக புறப்பட்டார். வாசலுக்கு வந்தால் கார் டிரைவர் இல்லை. சாப்பிடபோனவர் திரும்பவில்லை.
அண்ணாவிடம் இருந்தவர்கள் திட்டிக்கொண்டே டிரைவரை அழைத்துவர கெடுபிடி செய்தனர்.

‘‘நிறுத்தப்பா! அவர் தப்பல்ல, நாம சீக்கிரம் வருவது அவருக்கு எப்படி தெரியும். சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் வரட்டும்” என்று வீட்டுக்குள்ளே திரும்பிவிட்டார் அண்ணா !

ஆச்சரியமான தலைவர், தமிழகம் கொடுத்து வைக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...