No menu items!

படிக்க வேண்டிய பத்து புத்தகங்கள் – Book Talk With கு. உமாதேவி

படிக்க வேண்டிய பத்து புத்தகங்கள் – Book Talk With கு. உமாதேவி

வாழ் தமிழா யூடியூப் சேனலில் (Wow Tamizhaa – YouTube) வரும் Book Talk தொடரில் திரைப்பட பாடலாசிரியர் கு. உமா தேவியை சந்தித்தோம். இப்பேட்டியில், படிக்க வேண்டிய பத்து புத்தகங்கள் என வாசகர்களுக்கு உமா தேவி தரும் பரிந்துரையில் முதல் ஐந்து புத்தகங்கள் இங்கே…

பெண் ஏன் அடிமையானாள் – பெரியார்

பெரியார் என்றால் கடவுள் மறுப்பாளர் என்ற எண்ணம்தான் இன்று பெரும்பான்மையானவர்களிடம் உள்ளது. ஆனால், அது மட்டும் பெரியார் இல்லை. உலகத்திலேயே பெண்கள் விடுலையைப் பற்றிச் சிந்தித்தவர்களில் தந்தை பெரியார் குறிப்பிடப்பட வேண்டியவர். ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற இந்த சிறு நூலில் வரலாற்றுக் காலங்களில் பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாக மாறியதற்கான தெளிவான காரணங்களை நுட்பமாக விளக்குகிறார், பெரியார். அதிலிருந்து பெண்கள் விடுதலை பெறுவதற்கான வழிமுறைகளைப் புரட்சிகரமாகவும் நடைமுறையில் சாத்தியம் உள்ளதாகவும் விவரிக்கிறார். இன்று பெண்கள் அடைந்திருக்கும் நிலையை அவர்களுக்கு பெற்றுக்கொடுத்ததற்கு பின்னால் எவ்வளவு பெரிய உழைப்பு, போராட்டம் இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள பெண்கள் இந்த நூலை கட்டாயம் படிக்க வேண்டும்.

சாதி ஒழிப்பு – அம்பேத்கர்

அம்பேத்கர் எழுத்துகளும் கருத்துகளும் இந்தியா முழுவதும் மீண்டும் ஆழ்ந்த கவனத்திற்கும் விவாதத்திற்கும் வந்துள்ள இன்றைய சூழலில், அவரது ‘சாதி ஒழிப்பு’ என்னும் இந்த நூல் மிக முக்கியமாக மாறுகிறது. 1935களில் லாகூரில் நடக்க இருந்த ‘ஜாத்பட் தோடக் மண்டல்’ என்னும் உயர் சாதி இந்துக்களின் மாநாட்டில் தலைமை உரையாற்றுவதற்காக அம்பேத்கர் தயாரித்த உரை இது. ஆனால், மாநாட்டு உறுப்பினர்கள் சிலரின் எதிர்ப்பால் அம்மாநாடு ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் இந்த உரை புத்தகமாக வெளிவந்தது. சாதியை அழித்தொழிப்பதற்கான வழிகளாக சமபந்த உணவு, சாதி கடந்த திருமணங்கள் போன்றவற்றை இந்நூலில் முன்வைக்கும் அம்பேத்கர், அதன்மூலம்தான் இந்த சமூகத்தை கலைத்துப்போட முடியும் என்கிறார்.

மேலும், “சாதி என்பது எண்ணம்; அந்த எண்ணப் போக்கிற்கு மதமே காரணம். இந்தியாவில் நீங்கள் எந்த திக்கில் திரும்பினாலும் சாதி அரக்கன் உங்களை வழிமறிப்பான். அந்த அரக்கனைக் கொன்றொழித்தாலன்றி இந்தியா அரசியல் சீர்திருத்தமோ பொருளாதாரச் சீர்திருத்தமோ பெற முடியாது. சாதி புனிதமானது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைத்திருக்கும் மதம்தான் எல்லாக் கேடுகளுக்கும் மூலகாரணம்’ என்றும் கூறுகிறார்.

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் – ஜான் பெர்கின்ஸ்

அமெரிக்கா தனது பொருளாதார நலனுக்காக உலக முழுவதும் எத்தகைய திரை மறைச் சதிகளை செய்து வருகிறது என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நூல் இது. தனக்கு பயன்படும் நாடுகளை பட்டியல் எடுத்து அந்த நாடுகளை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்கா பல ரகசிய உளவாளிகளை பயன்படுத்துகிறது. அதிலே ஒரு உளவாளியாக இருந்தவர்தான் இந்நூலில் ஆசிரியரான ஜான் பெர்கின்ஸ். அமெரிக்காவின் உத்தரவிற்கு இணங்கி பல நாடுகளை ஆசை காட்டியோ அல்லது அந்த நாட்டின் தலைவர்களை சில சிக்கல்களில் சிக்கவைத்து மிரட்டியோ அமெரிக்காவிற்கு அடிமைப்படுத்தும் வேலைகளை கச்சிதமாக செய்து வந்துள்ளார். பனாமா நாடு உருவாக்கம், சவூதி அரேபியாவில் குப்பை அள்ளும் வேலை மூலமாக நுழைந்து அடிமைப்படுத்தியது, ஒசாமா பின்லேடன் வளர்த்தெடுக்கப்பட்டது என பல்வேறு ரகசியங்களையும் இதில் போட்டு உடைத்திருக்கிறார் ஜான் பெர்கின்ஸ்.

இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளை அமெரிக்கா தன் கைக்குள் வைத்துக்கொண்டு வளங்களை சுரண்டுவதற்கு எப்படிப்பட்ட வேலைகளையெல்லாம் செய்கிறது என்பதனையும் ஜான் பெர்கின்ஸ் விரிவாக தெரிவித்து இருக்கிறார். இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போதுதான் நமக்கு நடக்கிற ஒவ்வொரு விசயத்திற்கும் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க நாடுகளுக்கும் இருக்கும் தொடர்பு நாம் அறிவோம்.

இந்நூலை தமிழில் எழுத்தாளர் இரா முருகவேள் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் கடந்த சில ஆண்டுகளில் அதிகம் விற்பனையான நூல்களில் ஒன்று இது.

இடையில் ஓடும் நதி – கூகி வா திவாங்கோ

இது கிக்கியு மொழியில் எழுதப்பட்ட கென்ய நாவல். கென்யா பழங்குடி மக்களை பற்றிய கதை. இரண்டு மலைகளுக்கு (kisumu, kakamega) இடையே ஹோனியா எனும் நதி செல்கிறது. இரண்டு மலையக மக்களுமே இந்தியா – பாகிஸ்தான் போல இருக்கிறார்கள். அவர்களை வைத்து கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போராட துடிக்கும் வையாகி எனும் ஒரு மீட்பரின் கதை என்றும் இதை சுருக்கமாக சொல்லலாம். இதில் காதல், காமம், நட்பு, துரோகம், பாசம், ஆண் – பெண் உறவுகளின் ஈகோ என எல்லாமே இருக்கிறது.

ஆண்களின் பிறப்புறுப்பு முன்தோலை அகற்றுவது, பெண்களின் க்ளிட்டோரிஸை கீறி விடுவது போன்ற அம்மக்களின் பழமையான வாழ்வியல் அங்கு வரும் ஆங்கிலேயர்களால் எவ்வாறு நிலைகுலைகிறது என்பதையும் புதிய பழக்கங்களை பின்பற்றுவதா பழைய பழக்கங்களை பின்பற்றுவதா என்ற மக்களின் குழப்பமும் அருமையாக பிணைந்து எழுதப்பட்டுள்ளது. இரண்டு தரப்பும் நியாயங்களையும் சொல்லி முடிவை நம்மிடமே விடுகிறார் கூகி வா திவாங்கே.

ஒரேயொரு நாளில் மாற்றம் வந்துவிடாது என்பதை தொட்டுச்செல்லும் இடம் வரலாற்று ரீதியான எதார்த்தமானது. ஒரு மொழி அழியும் என்றால் அது அந்த மக்களின் வாழ்வியலை / நினைவுகளை அழிப்பதற்கு ஒப்பாகும் என்று கூகி வா திவாங்கோ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் எழுத்தாளர் இரா. நடராஜன் மொழிபெயர்த்துள்ளார்.

லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள் – எடுவர்டோ காலியனோ

லத்தீன் அமெரிக்காவின் புகழ்பெற்ற எழுத்தாளர் எடுவர்டோ காலியானோ, ஒரு வரலாற்றாசிரியரும்கூட. காலியானோவின் மறைவிற்குப் பிறகு வெளியான இவரது கடைசி நூலான Hunter of Stories தான் ‘லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்த நாளங்கள்.’ லத்தின் அமெரிக்க நாடுகளை துண்டாடி அமெரிக்க ஐக்கியம் எப்படி தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளது என்பதை இதில் விவரிக்கிறார். தமிழில் ப.கு. ராஜன் மொழிபெயர்த்துள்ளார்.

லத்தீன் அமெரிக்க வரலாறு, அரசியல் போராட்டங்கள், அதன் இலக்கியங்கள் என ஒரு வண்ணமிகு கண்டத்தை ஒரே நூலின் மூலம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதற்கு இந்த நூல் மிகச் சரியான தேர்வு. உலகம் முழுவதும் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...